ரவீந்திரநாத் தாகூர்

ரவீந்திரநாத் தாகூர் ஒரு கவிஞர், தத்துவஞானி, இசையமைப்பாளர், எழுத்தாளர், மற்றும் ஒரு கல்வியாளரும் கூட.1913ல், அவரது கவிதைத் தொகுப்பான ‘கீதாஞ்சலி’ என்ற படைப்புக்காக, நோபல் பரிசு வென்று, ஆசியாவின் முதல் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமையைத் தட்டிச் சென்றவர். ரவீந்திரநாத் தாகூர் பலரால் ‘குருதேவ்’ என்றும் அழைக்கப்பட்டார்.

ரவீந்திரநாத் தாகூர், கல்கத்தாவில் ஒரு பணக்கார பிராமண குடும்பத்தில் தேவேந்திரநாத் சாரதா தேவி தம்பதியருக்கு ஒன்பதாவது மகனாக பிறந்தார். பலருடைய சுயசரிதைகள் மற்றும் வரலாறுகளைக் கற்றதுடன், வீட்டிலேயே வானியல், அறிவியல், சமஸ்கிருதம் படித்தார். காளிதாசரின் கவிதைகளையும் கற்றார். ஷேக்ஸ்பியர் மற்றும் பிறரது ஆக்கங்களை ஆராய்வதிலேயே ஆர்வம் காட்டியதால், பட்டம் பெறாமலேயே 1880ல் வங்கத்திற்குத் திரும்பினார். பின்னர் ஒரு கவிஞராகவும், எழுத்தாளராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

தாகூர், 1883 ஆம் ஆண்டில் டிசம்பர் 9ஆம் தேதி மிருனாலி தேவி ராய்சௌத்ரி என்ற பெண்ணை மணந்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் என ஐந்து குழந்தைகள் பிறந்தனர்.

அவரது பிரபலமான இசைதட்டுகள் அனைத்தும் ‘ரவீந்திர சங்கீத்’ என்ற பேரில் அழைக்கப்பட்டன. இவர் இயற்றிய ரவீந்திர சங்கீத் நியதியிலுள்ள இரண்டு பாடல்களான “ஜன கண மன” மற்றும் “அமர் சோனார்”, பாரதம் மற்றும் வங்காளத்தின் தேசிய கீதங்களாக உள்ளது.

ரவீந்திரநாத் தாகூர், 1884ல், ‘கோரி ஓ கமல்’ என்ற கவிதைத் தொகுப்பையும் ‘ராஜா ஓ ராணி’,‘விசர்ஜன்’ என்ற நாடகங்களையும் எழுதினார். 1893 முதல் 1900வரை ஏழு கவிதைத் தொகுதிகளான ‘சொனார் தொரி’‘கனிகா’ போன்றவற்றை எழுதியுள்ளார். 1901ல் பங்கதர்ஷன் என்ற இதழின் ஆசிரியரானார். 1902ல் அவரது மனைவி இறந்தார். தன் மனைவிக்காக ‘ஸ்மரன்’ என்ர கவிதைத் தொகுப்பை அர்ப்பணித்தார்.

தாகூர், சாந்திநிகேதனில் ‘போல்பூர் பிராமசார்யாஸ்ரமம்’ என்ற ஆசிரம முறையிலான பள்ளியைத் துவங்கினார். 1921ல் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவினார். தனது புத்தகங்களுக்காகக் கிடைத்த நோபல் பரிசின் மூலமாகக் கிடைத்த உரிமைத்தொகை அனைத்தையும் இந்த பல்கலைக்கழகத்திற்காக கொடுத்தார். நீண்ட காலம் நோய்வாய்பட்ட  ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், கல்கத்தாவிலுள்ள ஆகஸ்ட் 7, 1941 அன்று காலமானார்.