தமிழக சட்டப்பேரவையில் மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்ஜவாஹிருல்லா, இஸ்லாமியராகமதம் மாறிய ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு அதே இடஒதுக்கீடு சலுகை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததற்கு, தமிழக முதல்வர் உடனே அது குறித்து ஆவன செய்யப்படும் என பதில் அளித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான சிறுபான்மை நலன் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் சிலஅறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. அது செல்லுபடியாகாது என உச்ச நீதிமன்றம் தெள்ளத் தெளிவாக கூறியுள்ளது.
ஓட்டு வங்கி அரசியலுக்காக இந்துக்களுக்கு திமுக அநீதி இழைக்க தயாராக இருப்பதை இந்துக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மதம் மாறிய முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு இந்துக்களின் இட ஒதுக்கீடு சலுகைகளை அள்ளித்தருவதன் மூலம் மதம் மாற்ற வேட்டைக்கு இந்துக்கள் பலிகடா ஆக்க திராவிட கட்சிகள் துடிக்கின்றன. எனவே, தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்ததுபோல முஸ்லிமாக மதம் மாறியவர்களுக்கு ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினரின் இட ஒதுக்கீடு சலுகைகளை இந்துக்களிடம் இருந்து பறித்து பங்குபோட ஆலோசனைக் குழு அமைத்தால், இந்து முன்னணி எதிர்த்து போராடுவதுடன், சட்ட போராட்டத்தையும் நடத்தும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.