முன்உதாரணமாக வாழ்ந்த ஸ்ரீ கணேசன் ஜி

சித்திரை புத்தாண்டு அன்று, 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி, விசாக நட்சத்திரத்தில் பிறந்தார் ஸ்ரீகணேசன் ஜி. இவர் பிறந்த ஊர், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம், தற்போதைய திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகுந்தனூர் என்ற கிராமம். அந்தக் கிராமத்தில் அவருடைய தந்தையார் கிராம அதிகாரியாகப் பணியாற்றினார். தந்தை பெயர் சீனிவாசன், தாயார் பெயர் ஜமுனாபாய் அம்மையார். மூன்று அண்ணன்கள், இரண்டு தங்கைகள், ஒரு தம்பி என உடன்பிறந்தவர்கள். ஒன்றரை ஆண்டுகாலம் இவர் அப்பா, பெரியப்பா எல்லாம் சேர்ந்து கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வளர்ந்தார். பிறகு தனது ஆறு வயது வரை பூம்புகாரில் உள்ள இவரின் தாத்தா ராமநாத சாஸ்திரி அவர்களின் வீட்டில் பாட்டி அலமேலு அம்மையாரின் கவனிப்பில் வளர்ந்தார். அவர்கள் அங்கு துணிக்கடை நடத்தி வந்தனர். பிறகு அவரின் சொந்த கிராமத்தில் ஆறாம் வகுப்பு வரை பயின்றார். பிறகு சென்னை தியாகராய நகரில் உள்ள ராமகிருஷ்ணா பள்ளியில் உயர்நிலை வகுப்பு படித்தார். அந்த நேரத்தில்தான் 1963ல் குரோம்பேட்டை பகுதியில் நடந்த ஆர்.எஸ்.எஸ். ஷாகாவில் இணைந்தார் ஸ்ரீகணேசன்.
ஒரு வீட்டு மாடியில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் அன்றைய மாநில அமைப்பாளர் இராம. கோபாலன்ஜி, ஸ்ரீகணேசன்ஜிக்கு அறிமுகமானார். பிறகு தாம்பரம் அருகில் உள்ள எஸ்.ஐ.வி.இ.டி கல்லூரியில், பி.யு.சி பயின்றார் ஸ்ரீகணேசன்ஜி. அவரது சங்கப்பணியால் கவலையடைந்த அவரின் அப்பா, இங்கு இருந்தால் மகன் நன்றாக படிக்க மாட்டார் என்று மயிலாடுதுறைக்கு அனுப்பி விட்டார். அங்கு அவர், பெரியப்பா பையன் மற்றும் சகோதரியுடன் தங்கி ஏ.வி.சி கல்லூரியில் பி.ஏ பொருளாதாரம் பயின்றார்.
கல்லூரியில் படிக்குபோதும் தன்னை சங்கப் பணியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். இறுதியாண்டு பரீட்சை முடிந்ததும், 1970ல் முழுநேர ஊழியராக வேண்டும் என்று தஞ்சாவூர் சென்று விட்டார். இதற்கு இவரின் பேராசிரியர் பாஸ்கர்ராவ்ஜி, உதவி செய்து வழி அனுப்பி வைத்தார். தஞ்சாவூரில் 6 நாட்கள் இருந்த பிறகு மதுரை சங்க சிக்ஷா வர்காவிற்கு சென்றார். அங்கிருந்து மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாமிற்கு நாகபுரி சென்றார். பயிற்சி முடித்ததும் நாகபுரில் இருந்து சென்னை வந்து இராம. கோபாலன்ஜியைச் சந்தித்தார். ”தந்தையிடம் அனுமதி வாங்கினாயா” என்று கேட்டதற்கு, ”இல்லை. எங்கள் வீட்டில் அனுமதி தர மாட்டார்கள்” என்று சொன்னார். இராம. கோபாலன்ஜியோ, ”உங்க அப்பா அடித்தாலும் பரவாயில்லை. அனுமதி வாங்கி வந்தால் மட்டுமே உன்னை முழுநேர ஊழியராக தொடர அனுமதிப்பேன்” என்று கூறிவிட்டார். இவரோ தந்தையிடம் அடம்பிடித்து, அனுமதி வாங்கி திருச்சிக்கு வந்து ஹிந்து சாம்ராஜ்ய விழாவில் கலந்துகொண்டு, தனது 22வது பிறந்த நாளில் தன்னை முழு நேர ஊழியராக, இந்த நாட்டிற்காக சேவை செய்ய அர்ப்பணித்துக் கொண்டார்.
பிறகு அங்கிருந்து தூத்துக்குடிக்கு சென்று, சுப்பாராவ்ஜியின் வழிகாட்டுதலின்படி, முழு நேர ஊழியராக தனது பணியைத் தொடர்ந்தார். தூத்துக்குடி, விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சங்கரன்கோவில் போன்ற பகுதிகளில் பிரச்சாரக் பணியை செய்தார். பிறகு அங்கிருந்து தர்மபுரி மாவட்ட பிரச்சாரகராக சென்றார்.
பிறகு அங்கிருந்து தென்சென்னை பகுதிக்கு சங்கப் பொறுப்பாளராக சென்றார். அந்த காலகட்டத்தில்தான் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட நேரம். பல்வேறு இன்னல்களுக்கும் இடையே சங்கப் பணியை செவ்வனே செய்தார். எமர்ஜென்சி முடிந்த பிறகு ராஜபாளையம், விருதுநகர் பகுதிக்கு மாற்றப்பட்டார். 1979, 80, 81 ஆகிய மூன்று ஆண்டுகள் ராஜபாளையம் விருதுநகர் ஜில்லா பிரச்சாரகராக பணியாற்றினார். அதன்பிறகு மதுரைக்கு மாற்றப்பட்டார். சில ஆண்டுகாலம் சங்கப்பணி செய்தபின், விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில இணை ஒருங்கிணைப்பாளராக ஒரு வருடம் பொறுப்பிலிருந்தார். பிறகு புதுச்சேரி, திருச்சி, கன்னியாகுமரி கோட்டங்களில் பிரச்சாரகராக தொடர்ந்தார்.
1993 ஆம் ஆண்டு, பாரதிய கிசான் சங்கத்திற்கு மாநில அமைப்பாளராக பொறுப்பு மாற்றப்பட்டார். 2002ல் அதன் அகிலபாரத செயலாளர், அகிலபாரத வழிகாட்டுதல் குழு உறுப்பினர், தென்பாரத அமைப்பாளர் என பல நிலைகளில் பணியாற்றினார். 2021 மார்ச் மாதத்தில் வயது முதிர்வு காரணமாக பொறுப்புகள் அனைத்திலிருந்தும் ஓய்வு பெற்று, மூத்த
ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகராக வழிகாட்டி வந்தார்.
சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீகணேசன்ஜிக்கு சர்க்கரை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்தாக்கம் அதிகமான நிலையிலும், தொடர்ந்து கிராமங்கள் தோறும் சுற்றுப்பயணம் செய்து வந்தார். பயணத்தின்போது எந்த விதமான வசதிகளையும் எதிர்பார்க்க மாட்டார். இருசக்கர வாகனங்களில் கூட, கவலையே இல்லாமல் பின்னால் உட்கார்ந்து பயணிப்பார்.
தான் பழகும் ஸ்வயம்சேவக், அவர்தம் குடும்பத்தினருடன் ஆத்மார்த்தமாக பழகக் கூடியவர். அவர்களின் சுக, துக்கங்களில் இதய சுத்தியுடன் பங்கெடுப்பார். தனது நாட்குறிப்பில் ஸ்வயம்சேவகர்களின் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு நிச்சயம் இடம் ஒதுக்கிவிடுவார், ஸ்ரீகணேசன்ஜி. எங்கிருந்தாலும் தங்கள் இல்ல நிகழ்ச்சிக்கு அவசியம் வந்துவிடுவார் என்று பெருமிதத்துடன் கூறும் குடும்பங்கள் ஏராளம்.
ஒரு ஸ்வயம்சேவகரின் குடும்பத்தில் அவர்கள் பெற்ற பிள்ளையை படிக்க வைப்பதில் பணப் பிரச்சினை உட்பட பல்வேறு சிக்கல்கள். நெருங்கிய உறவினர்களுக்குள்ளும் சில கசப்பான விஷயங்களால் அனுசரனையும், பேச்சுவார்த்தையும் இல்லை. ஆனால் ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவரிடம் பேசி, படிப்பு தடை படாமல் இருக்க பெருமுயற்சி எடுத்து, அதில் வெற்றியும் பெற்றார் ஸ்ரீகணேசன் ஜி. இன்றைய சூழலில் இவரால் இணைந்த சங்க குடும்பங்கள் ஏராளம். திருமணம் என்பது எளிதானதல்ல என்ற நிலையில், பலருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.
ஸ்ரீகணேசன்ஜி குடும்பத்தில் நாகப்பட்டினம் பதிவாளர் அலுவலகத்தில், பாகப்பிரிவினை நடந்தது. தனக்கான பாகத்தை, அதே நாள், அதே பதிவாளர் அலுவலகத்தில் சங்கத்திற்கு எழுதி கொடுத்து விட்டார். இவ்வளவு பெருமைகளுக்கு சொந்தக்காரர் ஸ்ரீ கணேசன் ஜி இன்று நம்மிடம் இல்லை. 2026 ஆகஸ்ட் 27 அதிகாலை 4.30 மணி அளவில், திருச்சி சாதனா காரியாலயத்தில் காலமானார். எண்ணற்ற கார்யகர்த்தர்களின் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இவரின் மறைவு. பலரும் தங்கள் சமூக ஊடகங்களில் இவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர். அவருக்கு விஜயபாரதம் தனது அஞ்சலியை தெரிவித்துக்
கொள்கிறது.