மாலனுக்கு சாகித்ய அகாடமி விருது

இலக்கிய உலகில் மதிப்புமிக்க விருதாகப் பார்க்கப்படும் சாகித்திய அகாடமி விருது 1955ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. பல மொழிகளில் படைக்கப்பட்டுள்ள படைப்புகளில், சிறந்த நூல்களுக்கான விருதுகளை சாகித்திய அகாடமி வழங்கிவருகிறது. மேலும், சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் தனித்துவமான இளம் எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருதும் மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்கான விருதும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2021ம் ஆண்டிற்கான விருதுப் பட்டியலில் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான விருது தமிழின் மூத்த ஊடகவியலாளரும், எழுத்தாளருமான மாலனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் சைரஸ் மிஸ்ட்ரி எழுதிய ‘ Chronicle of a Corpse Bearer’ என்னும் ஆங்கில நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பான ‘ஒரு பிணம் தூக்கியின் வரலாற்று குறிப்புகள்’ நூலுக்காக இந்த விருதை பெறுகிறார் மாலன்.