மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில், மாமன்னர் ராஜராஜ சோழனின் 1041-வது பிறந்தநாளான ஐப்பசி மாத சதயவிழா 2026 அக்டோபர் 22 அன்று கொண்டாடப்படுகிறது. ஒரு மன்னர் எப்படி வாழ வேண்டும், எவற்றையெல்லாம் இந்த பூமியில் நிலைநிறுத்த வேண்டும் என நமக்கு முன்னால் வாழ்ந்து, அனைத்தையும் நமக்காக விட்டு சென்றவர், மாமன்னர் ராஜராஜ சோழன் ஆவார்.
985 முதல் 1014 வரை சோழப் பேரரசை ஆட்சி செய்த பெரும் சிவபக்தர். ராஜராஜனின் காலம் சோழர் வரலாற்றில் மட்டுமின்றி, இந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும். வலிமையான தரைப்படை, யானைப்படை மற்றும் கடற்படையை உருவாக்கியவர். கைப்பற்றிய இடங்களில் எல்லாம், சிவன் ஆலயங்களை எழுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
தஞ்சையில் உலகப் புகழ்பெற்ற பெரிய கோயிலை கட்டினார். 1010ல், இக்கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 216 அடி உயரமான பிரமாண்டமான விமானம் மற்றும் ஒரே கல்லால் ஆன பாறையை கொண்டு உருவாக்கிய கோயிலின் அழகு, அதில் புதைந்திருக்கும் அதிசயங்கள் எல்லையற்றது.
ஒரு லட்சத்து 30 ஆயிரம் டன் எடை கொண்ட கிரானைட் கற்களை, 69 மைல்கள் தூரத்தில் கொண்டுவர, 30 ஆயிரம் யானைகளுக்கு மேல் பயன்படுத்தி, கோயிலை கட்டிமுடிக்க 600 சிற்பிகளையும், ஒரு லட்சம் தொழிலாளர்களையும் பயன்படுத்தினார் ராஜராஜ சோழன்.
பக்தி பொக்கிஷமான திருமுறைகளை அழியாமல் மீட்டெடுத்து தொகுத்த திருமுறைகண்ட சோழன் என்று போற்றப்படுகிறார் ராஜராஜ சோழன். அவையில் தேவாரம் மற்றும் சைவப் பாடல்கள் பாடப்பட்டு வந்தன. அவற்றின் முழுத்தொகுப்பை தேடி, தேவார ஓலைச்சுவடிகள் அனைத்தும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் பூட்டப்பட்ட ரகசிய அறையில் இருப்பதை ராஜராஜ சோழன் அறிந்தார்.
தேவாரம் பாடிய சம்பந்தர், அப்பர், சுந்தரர் நேரில் வந்தால் மட்டுமே அந்த அறையை திறப்போம் என்று நிபந்தனை விதித்தனர். ராஜராஜ சோழன் சாதுரியமாக மூவரின் ஐம்பொன் சிலைகளை செய்து, சிதம்பரம் கொண்டு வந்து, அவர்கள் முன்னிறுத்தி அறையை திறக்கச் செய்தார்.
பெரும்பாலான ஓலைச்சுவடிகள் கரையாண் அறித்து அழிந்திருக்க, எஞ்சியிருந்த பக்தி பாடல்களை கண்ணீர் மல்க மீட்டெடுத்தார். மீட்டெடுக்கப்பட்ட சுவடிகளை நம்பியாண்டார் நம்பியை கொண்டு முறைப்படுத்தி தொகுக்க செய்தார், ராஜராஜ சோழன்.
உலகப் புகழ்பெற்ற பெரிய கோயிலில் திருமுறை பாடல்களை நாள்தோறும் இசைப்பதற்காக ஓதுவார்கள் 48 பேரை நியமித்தார். ராஜராஜ சோழனின் இந்த அரும்பெரும் முயற்சியால்தான், நாம் இன்று சைவத்திருமுறைகளைப் படிப்பதற்கும், கேட்பதற்கும் முக்கியக் காரணமாகும்.
தமிழ் எழுத்துக்களால் சிவனுக்கு உயரம் கொடுத்தார். தமிழ் மெய் எழுத்து 18 என்பதற்கேற்ப லிங்கத்திற்கு அடியில் உள்ள உயரம் 18. உயிர் எழுத்து 12 என்பதற்கு ஏற்ப லிங்கத்தின் மொத்த உயரம் 12 அடிகள். உயிர்மெய் எழுத்துக்கள் 216 என்பதற்கு ஏற்ப, கோபுரத்தின் மொத்த உயரம் 216 அடி. தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247 என்பதற்கேற்ப, சிவலிங்கத்திற்கும் −- நந்திக்கும் இடையே உள்ள தொலைவு 247 அடியாக அமைத்துள்ளார்.

கட்டுரையாளர்: அனிதா ராஜேந்திரன்