மாநில மக்கள்தொகை அடிப்படையில் சிறுபான்மையினரை வகைபடுத்த வேண்டும் என கடந்த பிப்ரவரியிலும், உச்சநீதிமன்றத்தில் உபாத்யாய பொதுநல மனு தாக்கல் செய்தார். அப்போது இந்த விவகாரம் தொடர்பாக தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தை அணுகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திலும், சிறுபான்மையினர் ஆணையத்திலும் இருந்து எந்த பதிலும் கிடைக்காததால் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக அஸ்வினி குமார் உபாத்யாய தெரிவித்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில் ;
தேசிய மக்கள் தொகை அடிப்படையில், கிருத்துவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள்,பௌத்தர்கள், பார்சி ஆகியோர் சிறுபான்மையினராக வகைபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த 1992- ஆம் ஆண்டு தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கான சட்டம் இயற்றப்பட்டது. அதை மாற்றியமைக்க வேண்டும். சிறுபான்மையினர் என்ற சொல்லுக்கான அர்த்தம் மாநில மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும் என்பதாகும். என்னென்றால் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஹிந்துக்கள் பெரும்பான்மையானவர்கள். சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள்,ஜம்மு-காஷ்மீர் மற்றும் லட்சத்தீவிலும், கிறிஸ்துவர்கள்,வடகிழக்கு மாநிலங்களிலும் பெரும்பான்மையாக உள்ளனர். தேசய மக்கள் தொகை அடிப்படையில் சிறுபான்மையினரை வகைபடுத்துவதால், வடக்கிழக்கு மாநிலங்களில் உள்ள ஹிந்துக்களுக்கு, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சிறுபான்மையினர் சலுகைகள் மறுக்கப்படுகின்றன. எனவே, மாநில மக்கள் தொகை அடிப்படையில் சிறுபான்மையினரை வகைபடுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனு சார்பாக வழக்கறிஞர் முகுல் ரோத்கி வாதாடினார். அவரது வாதங்களை குறிப்பெடுத்துக் கொண்ட நீதிபதிகள், இந்த மனுவின் நகல்களை அட்டர்னி ஜெனரல் அலுவலகத்துக்கு அனுப்புமாறு வழக்கறிஞரிடம் தெரிவித்தனர். இது தொடர்பாக சட்ட ஆலோசனை வழங்குமாறு அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேண்டுகோள் விடுத்தனர். அதையடுத்து இந்த மனு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு பிறகு நடத்துவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.