புரட்டாசி மாதத்தில் வருகின்ற அமாவாசை மகாளய அமாவாசை என்று அழைக்கிறோம். இந்த அமாவாசைக்கு 14 நாட்கள் முன்னதாகவே மகாளய பட்ச காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் தான் நம்முடைய முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து புறப்பட்டு நம் வீடு தேடி வந்து நாம் கொடுக்கும் தர்பணத்தை ஏற்றுக் கொண்டு நம்மை ஆசீர்வதித்து திரும்பிச் செல்வார்கள். தர்ப்பணம் என்றால் திருப்தி என்று பொருள்.
நாம் கொடுக்கும் எள், நீரை அவர்கள் எடுத்துக் கொண்டு திருப்தி அடைவார்கள். அவர்களின் மனது திருப்தியடைந்து நம்மை முழு மனதார வாழ்த்துவது நமது தலைமுறைகளை பல்லாண்டு காலங்கள் தழைக்க வைக்கும். நமது வீட்டில் ஏதேனும் செய்வினை கோளாறுகள், கடன் தொல்லை தீரும், புத்திர பாக்கியம் கிட்டும், காரியத்தடைகள் நீங்கும். சுபநிகழ்ச்சிகள் நடைபெறும், தீராத நோயும் தீரும் என பல நன்மைகள் உண்டு.
நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் நாம் கடமை ஆற்ற வேண்டியது எப்படி அவசியமோ அதேபோல இறந்தவர்களுக்கும் நாம் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. இறந்தவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை திதி கொடுப்பது மிகவும் அவசியம். இந்த மாதத்தில் வரும் அமாவாசை அன்று பிதுர் பூஜை செய்வதனால் முன்னோர்களின் ஆசி கிடைப்பதுடன் எமனுக்கும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. இதனால், இறுதி காலத்தில் எம பயம் இருக்காது என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
மஹாளயபட்ச அமாவாசை அன்று பிரபஞ்சத்தின் அண்டவெளியில் மிக அபரிமிதமாக பித்ருக்களின் ஆசி நிறைந்து இருக்கும். நாம் கொடுக்கவிருக்கும் நீரையும், எள்ளையும் தேடி கோடிக்கணக்கான பித்ருக்கள் பூமியை நோக்கி வருவார்கள். அவர்களின் மனம் திருப்தி அடையும்படி அன்றைய நாள் தர்ப்பணம் கொடுத்து அன்னதானம் செய்வது மிகவும் விஷேஷம். ஒரு புரட்டாசி மாத அமாவாசை அன்று தர்பணம் செய்வது 14 ஆண்டுகள் பித்ரு தர்ப்பணம் செய்ததற்கான பலனை கொடுக்கும்.
அன்றைய நாள் கோயிலுக்குச் செல்வது, பசுவிற்கு அகத்திக்கீரை, வாழைப்பழம் வாங்கிக் கொடுப்பது போன்றவை கோடி புண்ணியத்தை கொடுக்கும். அன்றைய நாள் காக்கைகளுக்கு உணவளிப்பதால் சனீஸ்வர பகவானும் அவருடைய சகோதரரான எமனும் ஒரே நேரத்தில் திருப்தி அடைகின்றனர்.