மன்னிப்பு கேட்ட முன்னாள் எம்.பி

திருணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மக்களவை எம்.பியுமான கீர்த்தி ஆசாத், பிரதமர் மோடி மேகாலயாவின் பாரம்பரிய பழங்குடியினரின் உடை அணிந்திருந்ததை பெண்களின் உடையுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்தார். அவரது கருத்துக்கு அசாம் முதல்வர் உட்பட பலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “மேகாலயாவின் கலாச்சாரத்தை கீர்த்தி ஆசாத் அவமதிக்கிறார், பழங்குடியினரின் உடையை கேலி செய்கிறார். கீர்த்தி ஆசாத்தின் கருத்துகளை திருணமூல் காங்கிரஸ் கட்சித் தலைமை ஆமோதிக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார். இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடியின் உடை குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்ததற்கு கீர்த்தி ஆசாத் மன்னிப்பு கேட்டுள்ளார். ‘இது மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. எனது கருத்து காரணமாக ஏற்பட்ட காயத்திற்கு வருந்துகிறேன்’ என கூறியுள்ளார்.