மனோகர் பாரிக்கர்

மனோகர் பாரிக்கர் 1955ம் ஆண்டு கோவாவின் மபுசா நகரில் பிறந்தவர். இவரது இளமை பருவத்தில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேர்ந்தார். ஐ.ஐ.டி பாம்பேவில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தீவிரமாக பணியாற்றினார். அப்போது அவரின் வழிகாட்டியாக இருந்த சுபாஷ் வெலிங்கர். மனோகர் பாரிக்கர் கோவாவின் பா.ஜ.க வருங்கால முகமாக இருப்பார் என்று அப்போதே கணித்திருந்தார்.

தனது 26 வயதில் பா.ஜ.கவில் இணைந்தார் பாரிக்கர். 1994ல் கோவா மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க சார்பில் வென்ற நான்கு பேரில் இவரும் ஒருவர். 1999ல் கோவா சட்டப் பேரவை எதிர்கட்சி தலைவரானார். 2000ல் கோவா முதல்வரானார். 2014ல் பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க பாரிக்கர் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவியேற்றார். பாதுகாப்புத் துறையில் அவர் அமைச்சராக இருந்தபோதுதான் பாரதம் ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ நடத்தியது, ரஃபேல் ஒப்பந்தம் உட்பட பல்லாண்டுகளாக தடைப்பட்டிருந்த முப்படைகளின் பல்வேறு ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்பட்டன. பாரத ராணுவம் நவீனத்துவத்துடன் வலுப்பட ஆரம்பித்தது. 2017ல் பாரிக்கர் பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகி கோவா முதல்வராக பதவியேற்றார். கடந்த 2018ல் கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பிழைப்பது கடினம் என தெரிந்திருந்தும் தனது இறுதி மூச்சுவரை தேசத்திற்காகவே உழைத்தார் மனோகர் பாரிக்கர்.