மனைவி அமைவதெல்லாம்

ஒரு ஏழை மனிதன் இருந்தான். அவனிடம் இருந்த இரண்டு மாடுகளில் இருந்து கிடைக்கும் பாலில்தான் அவனது வருமானம். குடும்பத்துடன் வறுமையில் வாடினான். அந்த ஊருக்கு ஞானி ஒருவர் வந்தார். தன்னுடைய நிலையை அவரிடம் கூறினான். உன் வாழ்க்கை உயரும் என்று ஆசி கூறினார் ஞானி. அன்று முதல் மாடுகள் அதிக பால் கொடுத்தன. வருமானம் பெருகியது. இப்போது அவனிடம் ஐம்பது மாடுகள்.

ஆண்டுகள் ஓடின. மீண்டும் ஞானி அந்த ஊருக்கு வந்தார். அவன் இன்று செல்வந்தன் என் கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தார். அவன் தன்னை தேடி வருவான் என்று எதிர்பார்த்தார். ஆனால் வரவில்லை. ஞானிக்கு வருத்தம். அவன் வீட்டிற்கு சென்றார். அவன் மாடுகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தான். அவனது மனைவி ஞானியை வரவேற்று அவரது வருகையை தெரிவித்தாள். அவன் வேலையை முடிந்து வருவதாக கூறினான்.

ஞானிக்கு வந்தது கோபம். “காசு பணம் வந்ததும் பழசு மறந்துபோச்சா, இனி உன்னிடம் இரண்டே மாடுகள்தான் எப்போதும் இருக்கும்” என்று சபித்து சென்று விட்டார். இது காதில் விழ, பதறியடித்து அவரைத் தேடி ஓடினான். ஆனால் எங்கும் அவர் தென்படவில்லை. கொல்லையில் இரண்டே மாடுகள். அலட்சியத்தால் எல்லாம் போச்சே என அழுதான்.

அவன் மனைவி அவனிடம், “ரெண்டு மாட்டையும் இப்பவே சந்தையில் வித்துடுங்க” என்றாள். அவனுக்கு குழப்பம். “மாட்டை வித்துட்டு வருமானத்துக்கு என்ன செய்ய?” என்றான். மனைவி மீண்டும் வற்புறுத்தினாள். சரி, என்று இரு மாடுகளையும் விற்றுவிட்டு கனத்த மனதோடு வந்தான். அவனது மனைவி புன்னகையோடு வரவேற்றாள். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை!

அவள் சொன்னாள் “கொஞ்சம் கொல்லைப் புறத்தில் பாருங்க” பார்த்ததும் அவனால் நம்ப முடியவில்லை. அங்கே வேறு இரண்டு புதிய மாடுகள்!. கேள்வியுடன் மனைவியை பார்த்தான். மனைவி, “எப்பவும் உங்க கிட்ட ரெண்டு மாடுதான் இருக்கனும்னுதானே சாபம்? நீங்க மாட்டையும் வித்தாலும் அந்த இடத்துக்கு ரெண்டு மாடு வந்திடும் இல்லையா?” என்றாள்.

புத்தியுள்ள மனைவியை அடைந்தவன் பாக்கியவான் என்பது அவனுக்கு புரிந்தது. பிறகு தினமும் இரண்டு மாடுகளை விற்றான். முன்பை விடப் பணக்காரன் ஆனான். நாம் தடுமாறும்போது தாங்கிப் பிடிப்பவள் மனைவிதான். அவள் சொல்லும் அறிவுரையை உதாசீனப் படுத்தாதீர்கள்.