மனிதனின் பேராசையே சுற்றுசூழலுக்கு பெருங்கேடு

இன்றைய காலகட்டத்தில் அனைவராலும் அதிகம் பேசப்படுவதிலும் சரி குறைவாக பின்பற்றப்படுவதிலும் முதலிடத்தில் இருப்பது சுற்றுச்சூழல்தான். பல்லாயிரம் வருடங்களாக நம் முன்னோர்கள் தெய்வமாக மதித்து பாதுகாத்து வந்த இந்த பூமியை ஒரு நூறு வருடங்களில் மனிதன் வாழ தகுதி யற்றதாக விஞ்ஞானம் மாற்றிவிட்டது. வேத காலத்தில் இருந்தே பூமியை போற்றி பாதுகாத்த நாம் இன்று என்ன செய்கிறோம்? தொழிற்சாலைகள் பெருக்கம், காடுகள் அழிப்பு, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, மணல் திருட்டு, கழிவுகள் கலக்கப்படும் ஆறுகள், மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் என எண்ணில் அடங்காத வகைகளில் நம்மை காக்கும் தாயான நம் உலகை நாமே மாசுபடுத்தி வருகிறோம். உணவு சங்கிலி, அறிவாற்றல் போன்றவற்றில் தான் தான் உயர்ந்தவன் என்ற எண்ணத்தினாலும், அறிவியல் தந்த வசதிகளின் பெருக்கத்தினாலும் நம் பூமியின் சமநிலையை மாற்ற துணிகிறது மனித இனம்.

கடவுள் எந்த மனிதனையும் காரணமின்றி படைக்கவில்லை ஒவ்வொருவர் பிறந்ததற்கு ஏதோ ஒரு காரணம் கண்டிப்பாக இருக்கும் அதை இன்னும் சற்று ஆழமாக பார்த்தால் மனிதன் மட்டும் அல்ல பாக்டீரியா முதல் நீலத் திமிங்கிலம் வரை உலகினில் பிறந்த அனைத்து உயிர்களின் பிறப்பிற்கும், வாழ்விற்கும், இறப்பிற்கும் கண்டிப்பாக ஒரு சில காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக சராசரியாக ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நாளைக்கு 530 லிட்டர் ஆக்சிஜன் கண்டிப்பாக தேவை, ஒருமரத்தில் உள்ள இலையானது சுமார் 5 மில்லிலிட்டர் ஆக்சிஜனை வெளிவிடுகிறது. அப்படி பார்த்தால் ஒரு மனிதன் சுவாசிக்க குறைந்த பட்சம் ஒரு மரமாவது உதவ வேண்டும், பவளப்பாறைகள் இல்லை என்றால் கடல் உயிர் அற்ற சாக்கடை ஆகிவிடும். தேனிக்கள் மட்டும் இந்த உலகில் இருந்து அழிந்துவிட்டால் மகரந்த சேர்க்கை நிகழாமல் அடுத்த 5 வருடங்களில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டு மனிதர்கள் இறக்கும் சூழ்நிலை ஏற்படும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஒரு பவளப்பாறைக்கும், தேனிக்கும் மரத்திற்குமே இப்படி என்றால் நாம் இந்த உலகில் நன்றாக வாழ நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏனைய கோடானுகோடி உயிர்களின் தேவை எவ்வளவு இன்றியமையாதது என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

இந்த பூமியில் சுமார் 87 லட்சத்திற்கும் அதிகமான உயிரின வகைகளும் கோடிக் கணக்கான நுண்ணுயிரிகளும் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது ஆனால் மனிதனை தவிர வேறு எதனாலும் இந்த பூமிக்கும் அதன் சுற்றுசூழலுக்கும் எவ்வித தீங்கும் வந்ததில்லை. மனிதன் என்கிற ஒற்றை உயிரினத்தின் பேராசையால் இந்த பூமி எந்த உயிரினமும் வாழ தகுதியற்றதாக ஆகிக்கொண்டிருக்கிறது. வருடாவருடம் அதிகரிக்கும் வெயில், பருவம் தவறிய மழை, பனிப்பாறைகள் உருகுதல் போன்ற பல விஷயங்களே நம் பூமி சந்தித்து வரும் மிகப்பெரிய அபாயமான சுற்றுச்சூழல் சீர்கேடு பாதிப்புகளுக்கு சாட்சி. இந்த நிலை நீடித்தால் இன்னும் ஒரு நூற்றாண்டில் இந்த பூமியை விட்டு நாம் வேறு கிரகத்தில் குடியேறி வாழ வேண்டிய சூழல் ஏற்படும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது ஏதோ ஐநா சபையும், அமெரிக்காவும், நம் அரசுகளும், NGO க்களும் செய்யும் வேலை, நமக்கும் இதற்கும் துளியும் சம்பந்தம் இல்லை, என பலரும் இருப்பதை பார்க்க சற்று வேதனையாகதான் இருக்கின்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது நம் சந்ததிகள் வாழும் இந்த பூமியை நாம் காப்பாற்றிக்கொள்ளும் ஒரு முயற்சி அதற்காக நாம் பெரிய தியாகங்கள் எதுவும் செய்ய தேவை இல்லை, சுற்றுச்சூழலை பாதுகாக்க நமது அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பதுடன் எரிபொருள், தண்ணீர், மின்சாரம் போன்றவற்றை சிக்கனமாக பயன்படுத்துவது, முடிந்தவரை பொதுபோக்குவரத்தை பயன்படுத்துவது, மரங்கள், செடிகளை நட்டு பாதுகாப்பது என நம்மால் முடிந்த சில எளிய முயற்சிகள் போதும். அனைத்திற்கும் மேலாக “பூமி புத்ரோஹம் பிரிதிவ்ய” என்கிற நமது அதர்வண வேதத்தின்படி பூமியை நமது தாயாக பாவித்து போற்றி பாதுகாப்பது ஒன்றே இந்த பூமியில் இன்னும் பல்லாண்டுகள் நம் தலைமுறை வாழ வகை செய்யும் அரு மருந்து.

சுற்று சூழலை காக்க வீட்டில் நாம் என்ன செய்யலாம்:

நிலம்: இயற்கை விவசாய பொருட்களை பயன்படுத்தலாம். வீட்டு தோட்டம், மாடி தோட்டம் அமைக்கலாம். அவைகளுக்கு தேவையான உரத்தை வீட்டு கழிவுகளில் இருந்தே தயாரிக்கலாம். தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி காகித பயன்பாட்டை குறைக்கலாம். ஒருபக்கம் பயன்படுத்திய காகித தாள்களை இரண்டு பக்கமும் பயன்படுத்தலாம். மண் வளம் காக்க மரங்கள் நடலாம்.

நீர்: ஷவருக்கு பதில் வாளியில் குளிக்கலாம். வெஸ்டர்ன் டாய்லெட்டுக்கு பதில் இந்திய டாய்லெட்டுகளை பயன்படுத்தலாம். காய்கறி கழுவிய நீரை செடி கொடிகளுக்கு விடலாம். துணி துவைத்த நீரை குளியல் அறை கழுவ, கழிவறை பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம். துணிகளை தினம் துவைப்பதற்கு மாறாக சில நாட்களுக்கு ஒருமுறை துவைக்கலாம். மழைநீரை சேமித்து பயன்படுத்தலாம். நீர் வராத போர்வெல்களில் மழைநீரை செலுத்தி உயிர்ப்பிக்கலாம்.

காற்று: முடிந்த இடங்களில் பெரிய மரங்களை நட்டு பராமரிப்பதுடன் வீட்டு தோட்டங்களில் துளசி, வீட்டிற்க்குள் சீனத்து மூங்கில், ஸ்பைடர் பிளாண்ட் வகை செடிகளையும் வளர்த்து அதிக ஆக்சிஜனை உற்பத்தி செய்யலாம். குப்பைகளை எரிப்பதை தவிர்க்கலாம். விறகு அடுப்பிற்கு மாற்றாக கேஸ் அடுப்பை பயன்படுத்தலாம், பிளாஸ்டிக், டயர் போன்றவற்றை எரிப்பதை தவிர்க்கலாம். புகை பிடிப்பது உடல் நலத்திற்கும் கேடு சுற்றுசூழலுக்கும் கேடு.

நெருப்பு: பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகன பயன்பாட்டை யோசிக்கலாம். கேஸ் அடுப்பில் தேவைபட்டால் ஒழிய பெரிய பர்னருக்கு பதில் சிறிய பர்னரை பயன்படுத்தலாம். அரிசி பருப்புகளை ஊறவைத்து சமைப்பது, குக்கர் பயன்பாடு போன்றவை எரிபொருளை கணிசமாக குறைக்கும். சூரிய சக்தி உட்பட மாற்று எரிபொருட்களை பயன்படுத்தலாம்.

ஆகாயம்: அலைபேசியையும், இணை
யத்தையும் தேவைக்கு மட்டும் பயன் படுத்துவது, குறைவாக சிக்னல் கிடைக்கும் இடங்களில் அலைபேசி பயன்பாட்டை தவிர்ப்பது நல்லது.

மின்சாரம்: குண்டு பல்புகளுக்கு மாற்றாக எல்இடி பல்புகளை பயன்படுத்தலாம். தேவையற்ற நேரத்தில் மின்சாதனங்களை அனைத்து வைக்கலாம். லிப்டிற்கு பதில் படிக்கட்டை பயன்படுத்தலாம். சூரியஒளி மின்சாதனங்களை பயன்படுத்தலாம்.

பிளாஸ்டிக்: முடிந்தவரை துணிபைகளை பயன்படுத்தலாம். பால் கவர், பெட் பாட்டில்களை மறுபயன்பாடு செய்யலாம். பிளாஸ்டிக்கை குப்பைகளில் போடும்போது தனியாக மக்காத குப்பையாக பிரித்து போடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *