மத்திய பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையில் 15 மாதங்களாக காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. அங்கு இளம்தலைவராக திகழ்ந்து வந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கட்சி மேலிடத்துடன் நிலவிவந்த பனிப்போரின் உச்சகட்டமாக கடந்த 10-ந் தேதி காங்கிரசில் இருந்து விலகி பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்தார். அவரது ஆதரவாளர்களாக இருந்து வந்த 6 மந்திரிகள் உள்ளிட்ட 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகினர்.
சட்டசபையின் மொத்த இடங்கள் 230. ஏற்கனவே 2 காலியிடங்கள் இருந்த நிலையில், மேலும் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியதால் சட்டசபையின் பலம் 206 ஆனது. இதனால் மெஜாரிட்டி பலம் 104 ஆக குறைந்தது.
அதே நேரத்தில் காங்கிரசின் பலம் 114-ல் இருந்து 92 ஆக குறைந்தது. அந்த கட்சி பெரும்பான்மையை இழந்து சிறுபான்மை அரசானது. ஆனால் கவர்னர் உத்தரவிட்டபடி முதல்-மந்திரி கமல்நாத் கடந்த 16-ந் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவில்லை.
இதனையடுத்து கமல்நாத் ராஜினாமா செய்தார். அதை கவர்னர் லால்ஜி தாண்டன் ஏற்றுக்கொண்டார்.
இந்தநிலையில் காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆதரவாளர்களான எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.