மகாத்மா காந்திஜி வாழ்வில்

போர்பந்தர் சமஸ்தானத்தில் திவான் பதவி வகித்தவர் உத்திம சந்திர காந்தி. அவருடைய ஐந்தாம் மகனாகப் பிறந்தவர் பிறந்தவர் கரம்சந்திர காந்தி என்று அவரை அழைப்பது வழக்கம். காபா காந்தி ராஜ்காட்டில் திவானாக இருந்தார். புத்திலிபாயை மணந்துகொண்டார்.

புத்திலிபாய்க்கு ஒரு பெண்ணும் மூன்று பிள்ளைகளும் பிறந்தார்கள். 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம நாளன்று காபா காந்தி–புத்திலிபாயின் கடைசி மகனாகத் தோன்றியவர் மோகன்தாஸ் கரம்சந்திர காந்தி. காபா காந்தி நாணயமும் நேர்மையும் மிகுந்த திவானாக இருந்தார். புத்திலிபாய் தவ ஒழுக்கத்தில் சிறந்த பெண்மணியாக விளங்கினார்.

மோகன்தாஸ் காந்தி, சிறு பிள்ளையாக, இருந்தபோதே தாயுடன் விஷ்ணு கோயில்களுக்குப் போவார். புத்லிபாயின் பக்தியும், தெய்வ நம்பிக்கையிம் கண்டு மோகனதாஸூக்கு வியப்பு ஏற்பட்டது. ஆனால், மோகனதாஸின் இளம் உள்ளத்தில் பக்திப் பயிரை விளைவித்தவள், அவரது வீட்டில் வேலை செய்து வந்த அரம்பை என்ற பெண்மணியே ஆவார்.

காந்திஜியை எடுத்து வளர்த்த செவிலித் தாயாகவும் இருந்தவள் அரம்பை. காந்திஜிக்குப் பயம் அதிகம். பாம்பு பயமும் திருடர் பயமும் அதிகம். அத்துடன் இருட்டைக் கண்டால் காந்திஜி நடுநடுங்கிப் போவார். இருட்டில், கண்ணை மூடினால் பிசாசுகள் நிறைய வருவதாகவும் எண்ணி நடுங்குவார்.

காந்திஜிக்கு இருந்த இந்த பயங்களைப் போக்க வேண்டும் என்று அரம்பை மிகவும் பாடுபட்டாள்.

ஒருநாள் காந்திஜி, இருட்டறையில் தனியாகச் செல்வதற்குப் பயந்தார்.

“ஒன்றும் பயமில்லை, போ” என்றார்கள் அவருடைய சகோதரர்கள். ஆனால் காந்திஜி போகவில்லை. பயத்தோடு நின்றிருந்தார்.

அரம்பை இதனைக் கண்டாள். காந்திஜியின் பயத்தைப் போக்க வேண்டும் என்று எண்ணினாள்.

“மோகன்தாஸ், உனக்கு பயம் தோன்றும் போதெல்லாம் ‘ராம், ராம்’ என்று சொல். அந்த ராம நாமம் உன் பயத்தைப் போக்கிவிடும்” என்றாள்.

மோகன்தாஸ் காந்திஜிக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ‘ராம், ராம், ராம்’ ராம்’ என்று கூறிக்கொண்டே இருட்டறைக்குள் சென்றார். பயம் மெல்ல மெல்ல அவரை விட்டு அகன்றது.

அது முதல் மோகன்தாஸ் காந்தி ராம நாம ஜெபம் செய்யத் துவங்கினார். அவர் இறக்கும் தருணத்திலும் ‘ஹே ராம்’ என்று ராம நாமத்தைக் கூறிக்கொண்டேதான் இறந்தார்.