பொங்கலோ பொங்கல்!

மகர சங்கராந்தி

பொங்கல் திருநாளை வட பாரதத்தில் ‘மகர சங்கராந்தி விழா’ என கொண்டாடுகிறார்கள். மகர சங்கராந்தி அன்று தான் சூரியன் தென்திசை பயணத்தை முடித்துக் கொண்டு, வட திசை பயணத்தைத் துவக்குகிறான். சூரியன் மகர ராசியில் பிரவேசிப்பதால் ‘மகர சங்கராந்தி’ என அழைக்கின்றார். சூரியனை மையமாக வைத்து பகல் – இரவு என்று நாளைக் கணக்கிடுகிறோம். அதே போன்று சந்திரனை மையமாக வைத்து சுக்ல பக்ஷம், கிருஷ்ண பக்ஷம் என்று மாதத்தைக் கணக்கிடுகிறோம். அதே போன்று தக்ஷிணாயணம், உத்தராயணம் என்று ஆண்டைக் கணக்கிடுகிறோம். மகர சங்கராந்தி அன்று உத்தராயணம் தொடங்குகிறது. இந்த நாளில் உயிர் பிரிந்தால் நல்லது என இந்த நாளை எதிர்நோக்கி பீஷ்ம பிதாமஹர் அம்புப் படுக்கையில் உயிர் தரித்திருந்தார். இந்த நன்னாளில் பாரத நாட்டின் பல பகுதிகளில் உள்ள புண்ணிய நதிகளில் நீராடுவது விசேஷமானது.

pongal

தைப்பொங்கல்

ந்த விழா சூரிய பகவானை வழிபடும் நன்னாளாகும். சூரிய வழிபாடு பாரத நாடு முழுவதும் காலங் காலமாகவே கொண்டாடப்பட்டு வருகிறது. சூரியனையே முழுமுதல் கடவுளாக வழிபடுபவர்கள் ‘சௌரம்’ பிரிவினர் என அழைக்கப்பட்டனர். ஒரிஸ்ஸாவில் ‘கோனார்க்’ எனும் ஊரில் பிரசித்தி பெற்ற சூரியனின் திருக்கோயில் உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் சூரிய நாயனார் கோயில் என்ற ஊரில் சூரியனுக்கான மகத்தான ஆலயம் உள்ளது. சென்னைக்கு அருகில் ஞாயிறு என்ற ஊரிலும் கோயில் உண்டு.