தண்ணீர் பஞ்சத்தால் தவித்த நமக்கு அதை தீர்க்க மகிழ்ச்சி நிறைந்த மழைக்காலம் வந்துவிட்டது, அதை வாஞ்சையுடன் வரவேற்போம்.
இந்த மழைக்காலம் நீர் தந்து நம்மை காப்பதுடன் மட்டும் அல்லாது அதற்கே உரிய ஈரப்பதம், தண்ணீர் தேக்கம், மாசு ஆகியவை காரணமாக கொசு போன்ற பூச்சி வகைகளும், நோய்கிருமிகளும் வளர அதற்கேற்ற சூழ்நிலையை அமைத்துக்கொடுக்கவும் தவறுவதில்லை. எனவே மற்ற பருவ காலங்களைவிட மழைக்காலத்தில் நோய்களின் தாக்கம் மிக அதிகமாக இருப்பது இயல்பே. இந்த காரணங்களினால் சளித்தொல்லை, எலி ஜுரம், வைரஸ், நிமோனியா, டெங்கு போன்ற விதவிதமான ஜுரங்கள், இருமல், மூச்சிரைப்பு, வயிற்றுப்போக்கு, காலரா, சீதபேதி,… போன்ற பல நோய்கள் நம்மை தாக்கக்கூடும்.
மழைகாலத்தில் ஏற்படும் சில நோய்களை கட்டுப்படுத்த நம் வீட்டிலேயே எளிய இயற்கை மருந்துகளை பயன்படுத்தி நிவாரணம் பெறலாம்.
மழைகாலங்களில் நம் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டவும் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கவும் இயற்கையே நமக்கு பருவகால காய்கறிகள், கனிகள், மூலிகைகளை அந்தந்த காலத்தில் அபரிமிதமாக வழங்கி வருகிறது. இவற்றை அறிந்து முறையாக பயன்படுத்துவதன் மூலமாகவே நாம் இந்த மழைகால நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.
நாம் நம்மையும் நம் சுற்றுபுறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்வதுடன், மண்பானையில் வடிகட்டி ஊற்றப்பட்ட தண்ணீருடன் செம்பு தகட்டையும் சிறிது துளசி போட்டு வைத்து சில மணி நேரம் கழித்து அந்த நீரை பயன்படுத்துவது அல்லது நீரை கொதிக்கவைத்து குடிப்பது நல்லது. நொறுக்கு தீனிகளையும் ஓட்டல் உணவுகளையும் முடிந்தவரை தவிர்த்து, வீட்டில் சமைத்த உணவை மூன்று அல்லது நான்கு மணி நேரத்திற்க்குள் சாப்பிட்டுவிடுவது நல்லது.
கசப்பு மற்றும் துவர்ப்பு சுவையை தினமும் உணவில் சிறிது சேர்ப்பது, சமையலில் மிளகாய் காரத்தை குறைத்து மிளகின் பயன்பாட்டை அதிகரிப்பது, வெள்ளைபூண்டு, இஞ்சியை உணவில் அதிகம் சேர்ப்பது போன்றவையும் நல்ல பலன் தரும்.
தினமும் காலையில் திரிகடுகம், இரவு உணவுக்குபின் திரிபலா சூரணம் எடுத்துக்கொள்வது, மாதத்திற்கு ஒரிரு நாட்கள் நீர் அல்லது பழரச உண்ணாவிரதம் இருப்பது, தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்வது, மன அமைதிக்கு தியானம் போன்ற பொதுவான சில வாழ்வியல் நடைமுறைகள் நம் நோய் எதிர்ப்பாற்றலை வளர்த்துக்கொள்ள பெரிதும் உதவும்.
மில்லிமீட்டர் அரக்கன்:
ஒரு சில மில்லிமீட்டர்களே இருக்கும் ஈக்கள் மற்றும் கொசுக்களால் வரும் தொல்லைகளில் இருந்தும், வியாதிகளில் இருந்தும் நம்மை காக்க உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்கை கொசு விரட்டிகளுக்கு பதிலாக இயற்கை முறையில் அவற்றை கட்டுபடுத்தலாம்.
வேப்பெண்ணையை விளக்கெண்ணையில் கலந்து விளக்கு ஏற்றுதல், வேப்பிலை, நொச்சி, கற்பூரவள்ளி, பூண்டுதோல் போன்றவற்றை கொண்டு புகை இடுதல், துளசி, லவங்கபட்டை அல்லது லவங்கத்தை தேங்காய் எண்ணையில் காய்ச்சி உடலில் தடவுதல், அறையில் ஒரு பாத்திரத்தில் நீர்விட்டு அதில் சிறிது பச்சை கற்பூரத்தை போட்டுவைத்தல், அறையில் கற்பூரத்தை வைத்தல் போன்ற இயற்கை கொசு விரட்டிகளை பயன்படுத்துவதுடன் கொசு வலையை பயன்படுத்துவது நல்லது.
கொசுக்களுக்கும், சில தீமை செய்யும் பூச்சி இனங்களுக்கும் பிடிக்காத செடிவகைகளான துளசி, கற்பூரவள்ளி, ரோஸ்மேரி, சிட்ரோனில்லா புல், சாமந்திபூ, காட்னிப், அகிராட்டம், ஹார்ஸ்மிண்ட், லேவண்டர் போன்ற செடிவகைகளையும், வேப்பமரம், நொச்சி போன்ற மரவகைகளை வீட்டின் அருகில் வளர்ப்பதும் அவற்றின் இலைகளை புகைபோட பயன்படுத்துவது, வேப்பங்கொட்டை அல்லது வேப்பெண்ணையை நீரில் கலந்து வீட்டை சுற்றிலும் தெளிப்பது போன்ற முறைகளை பயன்படுத்தியும் கொசுக்களை கட்டுபடுத்தலாம்.
சளி, இருமல்:
மழைகாலத்தில் முதலில் நம்மை பிடிப்பதும், கடைசியாக விடுவதும், யாருக்கும் பாரபட்சம் காட்டாமல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை, ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை, நோயாளிகள் முதல் மருத்துவர் வரை அனைவரையும் பீடித்து ஆட்டி வைப்பதில் சனியை போல சளியும் தன் கடமையை சரியாகதான் செய்கிறது. இந்த மழைகாலத்தில் கிடைக்கும் ஆரஞ்சு, சாத்துக்கொடி போன்ற பருவகால பழங்களை அதிகம் எடுத்துக்கொள்வதன் மூலமாகவும், துளசி, கற்பூரவள்ளி, வெற்றிலை, வெங்காயம் போன்ற ஏதேனும் ஒன்றின் சாற்றை தேன் மற்றும் சுக்கு, மிளகு, திப்பிலியின் கலவையான திரிகடுகத்துடன் கலந்து தினமும் எடுத்துவருவது நமக்கு மிக சிறந்த நிவாரணம் அளிக்கும்.
மேலும் பாலில் சிறிது மஞ்சள், மிளகு சேர்த்துக்குடிப்பது, உப்பு நீர் கொப்பளிப்பது, நீலகிரி தைலத்தை வென்னீரில் விட்டு ஆவி பிடிப்பது, கொள்ளு ரசம் வைத்து குடிப்பது போன்ற முறைகளும் நம்மை சளி இருமல் தொல்லைகளில் இருந்து காக்கும்.
தொண்டை வலி:
இதற்கு உணவை நன்கு மென்று உண்பது, திரவங்களை மெதுவாக ருசித்து குடிப்பது போன்ற பழக்கவழக்கங்கள் நிரந்தர தீர்வை தரும் மேலும் நம் அனைவருக்கும் தெரிந்த உப்பு நீர் கொப்பளிப்பு எனும் வீட்டு வைத்தியம் மிக சிறந்த நிவாரணம் அளிக்கும். உணவில் கண்டங்கத்திரி சேர்ப்பது, தேன் கலந்த வென்னீர், துளசி தேனீர், ஒரு சிறு சிற்றரத்தை துண்டை வாயில் வைத்து சுவைப்பது போன்ற எளிய முறைகள் நல்ல நிவாரணம் தரும்.
காய்ச்சல்:
எலி ஜுரம், வைரஸ் ஜுரம், சிக்கன் குனியா, டைபாய்டு போன்ற பல்வேறு வகையாக பெயரிடப்பட்ட காய்ச்சல்கள் இந்த மழைகாலத்தில் நம்மை பயமுறுத்தும். இவற்றிற்கெல்லாம் ஒரே காரணம் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் குறைபாடுதான். எனவே நாம் இந்த காய்ச்சல்களை அதன் பெயரை கண்டு பயப்படுவதை விட்டு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்வதில் கவனம் செலுத்தினால் போதும், இவை நம்மை அண்டாமல் சென்றுவிடும்.
பொதுவாக காய்ச்சல் அதிகமாகாமல் தடுக்க, நீர் பற்று அல்லது மண் பற்று போடுவதுடன் அகிம்ஸா எனிமா எடுத்தல், பசிக்கும் வரை உண்ணா நோன்பு, பசிக்கும் பொழுது பழ உணவுகள் அல்லது காய்கறி சூப் வகைகள் அல்லது மிக எளிதில் ஜீரணமாகக்கூடிய சைவ உணவுகள் போன்றவற்றை எடுத்துக்கொள்வதுடன் நல்ல சுத்தமான காற்றோட்டமான அறையில் எடுக்கப்படும் உடலுக்கும் மனதுக்குமான முழூ ஓய்வு மிக அவசியம்.
பப்பாளி இலை சாறு, மலைவேம்பு அல்லது நிலவேம்பு குடிநீர் அல்லது பவழ மல்லி, மல்லி, முல்லை போன்ற மல்லி வகைகளில் ஏதேனும் ஒன்றன் இலை அல்லது பூக்களை போட்டு தயாரித்த தீநீருடன் சளி இருமலுக்கு மேலே கூறிய எளிய இயற்கை மருந்துகளையும் எடுத்துக்கொள்ளலாம்.
மூச்சிரைப்பு:
மழைகாலம் தொடங்கி குளிர் காலம் முடியும்வரை ஆஸ்துமா நோயாளிகள் படும் அவஸ்தையை சொல்லமுடியாது. அவர்கள் தினமும் முடிந்த அளவு பிராணயாமம் செய்தல், பால் மற்றும் பால் பொருட்களை அனைத்து வகையிலும் தவிர்த்தல், பூசணி, சுரைக்காய் போன்ற நீர் காய்கறிகளை குறைத்துக்கொள்வது மிக முக்கியம்.
இவர்களுக்கு கைகண்ட மருந்துகளாக தூதுவளை, கண்டங்கத்திரி விளங்கும். மேலும் இவர்கள் சளி இருமலுக்கு சொல்லப்பட்டுள்ள இயற்கை மருத்துவ முறையும் பயன்படுத்தலாம்.
வயிற்றுப்போக்கு:
அசுத்தமான சுற்றுபுறமும், அசுத்தமான நீரும், உணவுகளுமே வயிற்றுபோக்கிற்க்கு மிக முக்கிய காரணிகளாக விளங்குகின்றன எனவே நமது சுற்றுபுறத்தையும், உடலையும் சுத்தமாக வைத்துக்கொள்வதுடன் அசுத்தமான நீரை தவிர்த்து சுத்தமான நீரை பருகுவது, ஆரோக்கியமான சுத்தமான உணவுகளை உண்பது இக்காலத்தில் மிக அவசியம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இவற்றை பற்றி விளக்கி சுத்தமான நீரை பாட்டிலில் கொடுத்து அனுப்புவதுடன் வெளியில் வாங்கி சாப்பிடுவதையும் நிறுத்த பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும்.
வயிற்றுப்போக்கிற்கு சுத்தமான நீர் அல்லது உப்பு இனிப்பு கரைச்சல் நீர் கொடுத்து நீரிழப்பை ஈடு செய்வதுடன் அவ்வப்பொழுது சிறிது சிறிதாக வெந்தய தண்ணீர், பால் சேர்க்காத தேனீர், மாவிலை தேனீர், மாங்கொட்டை பருப்பு காப்பி போன்றவற்றை பருகக்கொடுக்கலாம். மண் பற்று அல்லது நாமக்கட்டியை வயிற்றில் பற்று போடுவதும்கூட வயிற்றுப்போக்கை நிறுத்தும்.
மெட்ராஸ் ஐ:
மழைகாலத்தில் வைரஸ் கிருமிகளால் பரவும் வியாதிகளில் இதுவும் ஒன்று, இது நம் கண்ணில் கஞ்சக்டைவா எனும் பகுதியை தாக்குவதால் கண் சிவந்துவிடுகிறது. இத்னால் பெரிய பாதிப்பில்லை என்றாலும் சிலநாட்களுக்கு இது தொந்தரவை தருவதென்னவோ உண்மைதான்.
இதற்கு முகம், கண்கள் மற்றும் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது. கண்களுக்கு நீர் பற்று, கொத்துமல்லி இலையை போட்டு கொதிக்கவைத்து வடித்த சுத்தமான நீரில் கண் கழுவுதல், சோற்றுகற்றாழை நீரில் ஒத்தடம் தருவதுடன் அதில் கண்களை கழுவுதல், உப்பு நீரில் நனைத்த பஞ்சை கண்களின் மேல் பற்று போடுதல், எலுமிச்சை சாற்றில் சுத்தமான நீர் கலந்து வடிகட்டி அதில் கண் கழுவுதல் போன்றவையும் பலன் தரும்.
வானத்திலே திருவிழா வழக்கமான ஒரு விழா:
மழைகாலத்தை தகுந்த முன்னேற்பாட்டுடன் நாம் உரியமுறையில் அணுகி அதை சரியாக பயன்படுத்திக்கொண்டு நோய்கள் இன்றி உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால் மழைக்காலமும் நமக்கு ஒரு வசந்தகாலமே!!!
வான் முகில் வழாது பெய்க மலி வளம் சுரக்க மன்னன்
கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க
நான் மறை அறங்கள் ஓங்க நல் தவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம். – கந்த புராணம்