தஞ்சை நகரத்திலிருந்து கும்பகோணம் செல்லும் பிரதான சாலையில் பசுபதி கோயில் ஊராட்சியில் “அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயில்” அமைந்துள்ளது. ராமாயணம் மற்றும் சிவபுராணக் கதைகளில் இடம் பெற்று இருக்கிறது. கதாபாத்திரங்களில் சில சிற்பங்கள் இத்திருக்கோயிலில் காண்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது தல வரலாறு ஓரிரு வரிகளில் ’’ பாற்கடலை கடைந்த போது தோன்றிய விஷத்தை இறைவன் அமுது செய்த திருத்தலம் என புராணக் கூற்றாகும், கொடிமரம், பலிபீடம் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. “..பிரம்மா பூஜை செய்து வழிபட்டும், சாபவிமோசனம் பெற்ற திருத்தலம் என்பதாலே இங்குள்ள இறைவன் பிரம்மபுரீஸ்வரர்” எனும் திருநாமம் கொண்டு அழைக்கப்படுகிறார்.
திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற 16 வது திருத்தலமாகும், சப்தமாதர்கள் வழிபட்ட ஏழுகோயில்களில் சக்கரப்பள்ளி சப்தஸ்தானத்தலமாக கொண்ட கோயில்களில் ஒன்றாகாகவும் விளங்குகிறது.
காவேரி தென்கரை ஆற்றுப் பகுதியில், வெள்ளாளர் பசுபதி கோயில் என்கிற பெயரில் (ஏழு பசுபதி கோயில்கள் உள்ளது) ஒரு கோயிலாகவும் அழைக்கப்படுகிறது. 21 தமிழ் கல்வெட்டுக்கள் அதிலொன்றில் “புள்ளமங்கை திருக்கோயில் என்றும் புள்ள மங்கலத்து திருவாலந்துறை மகாதேவர்” என்று இறைவனின் திருநாமம் பற்றி குறிப்பிடுகிறது. முதலாம் பராந்தகச் சோழன் (கி.பி.,907-955) இக்கோயிலுக்கான கருவறை மற்றும் அர்த்த மண்டபம் எழுப்பி திருப்பணி செய்துள்ளான்.
கல்கி, ‘பொன்னியின் செல்வன்’ கதையை எழுதும் முன்னர், இங்குள்ள வந்தியத்தேவன் கதாபாத்திரற்கு உண்டான சிற்பத்தை பார்த்து விட்டு தான் கதை எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரு கிராமத்திற்குள் அமைதியான சூழலில் அமைந்திருக்கிற இக்கோயிலானது 1,300 ஆண்டுகளுக்கும் மேலானதாகும். திருக்கோயில் நுழைவு வாசலில் ராஜகோபுரம் மூன்று நிலை கொண்டது, உள்ளே மிகவும் நீண்ட அமைப்பில் முன்மண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம் கடந்து கருவறை உள்ளது. இறைவன் ஆலந்துறைநாதர் எனும் பிரம்மபுரீஸ்வரர் திருநாமத்துடன், கிழக்கு நோக்கி லிங்கத்திருமேனியாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
இறைவனின் சன்னதிக்கு முன்பு, துவாரக பாலகர்கள் சாந்தமாக காட்சியளிக்கிறார்கள், இறைவி அல்லியங்கோதை அம்பாள் எனும் சௌந்தரநாயகி அம்மன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
மகாமண்டபத்தில் நடுவே இறைவனை நோக்கி நந்தி அமர்ந்திருக்கிறார், அருகே நவக்கிரக சன்னதி அமைந்துள்ளது. சைவக்குரவர்கள் நால்வர், தட்சிணாமூர்த்தி, விநாயகர், வள்ளி தெய்வா னையுடன் முருகன், சண்டிகேசுவரர், மற்றும் துர்க்கையம்மன் தனித்தனி சன்னதிகளில் வீற்றிருக்கிறார்கள். தலவிருட்சம் ஆலமரம், மற்றும் அருகே உள்ள திருக்குளம் தீர்த்தம், பிர தோஷம் மற்றும் மகாசிவராத்திரி நாட்களில் சிறப்பு அபிஷேகம், ஆராத னைகள் நடைபெறுகிறது.
தஞ்சாவூர் “புள்ளமங்கை கோயில் என்றாலே சிற்பங்கள் தான் அதற்கேற்றாப்போல் செவ்வண்ணத்தில் பற்பல சிற்பங்கள்” இத்தனை நேர்த்தியாக செதுக்க முடியுமா? என்கிற வியப்பும், பிரமிப்பையும் ஏற்படுத்துகிறது.
துர்க்கை மகிஷாசுரமர்த்தினி உருவம் கொண்டு கோபம் தணிந்து மிகவும் அழகாகவும், திரிபங்கம் எனும் கை, கால், உடல் வேறு வேறு திசையை நோக்கி இருப்பது போல் எட்டு கைகளுடன் எருமை மீது நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள்.
ராமாயணம் கதையம்சத்தில் தசரத சக்கரவர்த்திக்கு குழந்தை பாக்கியம் வேண்டுமென யாகம் நடத்துகின்ற காட்சி.
விஸ்வாமித்திரர் ராமபிரானுக்கும், லட்சுமணனுக்கும் வில்வித்தை கற்றுத்தரும் தத்ரூபமான காட்சி.
கங்கை நதியில் படகில் கடக்க குகன், ராமன் – சீதை, லட்சுமணனை கூட்டிச் செல்லுவது, வாலி மரணப்படுக்கையில் கிடக்கிறான் அவனைச் சுற்றி அழும் மக்கள் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் காட்சிகள்.
ஜானகி ஜனனம், தாடகை வதம், சீதாகல்யாணம், வாலி சுக்ரீவன் சண்டையிட்டுக் கொள்வது விபீஷணன் பட்டாபிஷேகம் காட்சிகள் அளப்பரியது.
ராவணன், சீதையை கடத்தி சென்ற தகவலை ராமனிடம், ஜடாயு சொல்லும் சோகமான காட்சி மற்றும் ஜடாயு, ராவணனை வழி மறித்து போரிடுவது போன்ற காட்சிகள்.
சிவபுராணத்தில் கஜசம்ஹாரமூர்த்தி, கங்காதரர், காமதனம், லிங்கோத்பவர், ஊர்த்ததாண்டவர், ருத்ர தாண்டவம், சண்டேச அனுகிராஹம் போன்ற சிற்பங்கள் யாவும் மனதை கொள்ளை கொள்கிறது.
சோழர்கள் தேசத்தில் திருக்கோயில்கள் வரலாற்றில் புள்ளமங்கை திருக்கோயிலின் சிற்பங்கள் பெரும் சான்றாக விளங்குகிறது.
தமிழக அரசு ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பாக நிர்வகிக்கிற இக்கோயிலில் இரண்டு கால பூஜை நடைபெறுகிறது.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் கும்பகோணம் செல்லும் வழியில் புள்ளமங்கை கோயில் நிறுத்தம் அல்லது பசுபதி கோயில் நிறுத்ததில் இறங்க வேண்டும், இங்கிருந்து 1.5 கி.மீ தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. காலை 7.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் 5.30 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.