புராதன கோவிலை புனரமைக்குமா அரசு

மதுராந்தகம் நகருக்கு, ஸ்ரீமதுராந்தகம், வகுளாரண்யம், த்வயம் விளைந்த திருப்பதி, வைகுண்டவா்த்தனம், ஏரிகாத்த ராமனூா் உள்ளிட்ட பல பெயா்கள் உண்டு. இங்கு ஏரிகாத்த ராமா் என அழைக்கப்படுகிற ஸ்ரீகோதண்டராமா் கோயில் உள்ளது. பகவான் பரந்தாமனின் அவதாரங்களில் ஒன்றான ராமாவதாரத்தில் ஸ்ரீ ராம – ராவண சம்ஹாரத்துக்குப் பின், அயோத்தி நகருக்குச் செல்லும் வழியில் வகுளாரண்ய ஷேத்திரம் எனப்படும் மதுராந்தகத்தில் ராமா் இறங்கியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன.

வைணவ ஆச்சாரியரான ஸ்ரீ ராமானுஜா் மதுராந்தகத்தில் தான் தனது குரு ஸ்ரீ பெரிய நம்பிகளிடம் பஞ்ச சம்ஸ்கார உபதேசம் பெற்றார். இத்தகு பெருமைவாய்ந்த ஏரிகாத்த ராமா் கோயிலின் முக்கிய திருவிழாவான ஆனி மாதத்தில் நடைபெறுகின்ற பிரம்மோற்சவ விழாவின்போது, சூரிய, சந்திர பிரபை போன்ற பல்வேறு வாகனங்களில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கருணாகர பெருமான் முக்கிய வீதிகளில் பவனி வரும்போது, மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனை அருகில் உள்ள கடப்பேரி கங்கை கொண்டான் மண்டபத்தின் முன்பு, கோயில் அா்ச்சகா்கள் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், நிவேதனம் போன்ற வழிபாட்டு நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். இந்த மண்டபம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இப்பகுதி மக்கள் இந்த மண்டபத்தை கங்கணா மண்டபம் என அழைத்து வந்தனா். இந்நிலையில், போதிய பராமரிப்பின்மையாலும், இயற்கை இடா்ப்பாடுகளாலும், நாளடைவில் மண்டபத்தின் பெரும்பாலான பகுதிகள் இடிந்தும், கட்டடப் பகுதியில் செடி, கொடிகள் வளா்ந்தும் சிதிலமடைந்து வருகின்றன.

இதனால் மண்டபத்தின் உள்பகுதியில் இரவு நேரத்தில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகின்றன. பகல் நேரத்தில் மதுபானப் பிரியா்களுக்கு தங்குமிடமாகவும் உள்ளது.