ஆந்திரா, விஜயநகரம் மாவட்டம் போடிக் கொண்டாவில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கோதண்டராமர் கோயிலில் இருந்த ராமர் சிலை சில பயங்கரவாதிகளால் சேதப்படுத்தப்பட்டது. ஏற்கனவே ஆந்திராவில் பல கோயில்கள் மீது தாக்குதல்கள் நடந்து வந்த நிலையில், ராமர் சிலையின் தலையைத் துண்டித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பா.ஜ.க, தெலுகு தேசம் உள்ளிட்ட கட்சிகளும் ஹிந்து அமைப்புகளும் போராட்டங்கள் நடத்தின. இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்க ஆந்திர அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது. கோயில்களை சீரமைப்பதற்காக ரூ. 3 கோடி நிதியும் ஒதுக்கியது. உடைக்கப்பட்ட சிலைக்கு மாற்றாக, புதிய சிலைகளை செதுக்கித் தர அறநிலையத்துறை அதிகாரிகள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு வேண்டுகோள் விடுத்தனர். அதன்படி புதிய சிலைகள் திருப்பதியில் செதுக்கப்பட்டு ராமதீர்த்தத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. ராம தீர்த்தம் வந்தடைந்த ராமர், சீதை, லட்சுமணர் சிலைகளுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயிலில் பணிகள் முடியும் வரை இந்த சிலைகள் பாலாலயத்தில் வைக்கப்படும் என்றும், சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் முடிந்த பின்னர் அவை பிரதிஷ்டை செய்யப்படும் என்றும் கோயில் நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.