பிரதமர் மோடியின் கருத்து முற்றிலும் உண்மை: ஸ்டாலினுக்கு பொன்.மாணிக்கவேல் சவால்

”தமிழகத்தில் கோவில்களை அரசு ஆக்கிரமித்துள்ளது என, பிரதமர் மோடி பேசியது முற்றிலும் உண்மை. இதை தவறு என, என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க முதல்வர் ஸ்டாலின் தயாரா,” என, உலக சிவனடியார் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், பொன்.மாணிக்கவேல் சவால் விடுத்தார்.: தமிழகத்தில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில், 1.35 லட்சம் ஏக்கர் நிலம் கணக்கில் வராமல் உள்ளது. இதை பிழையான விபரம் என்று சப்பைக்கட்டு கட்டுகின்றனர். கடந்த ஆட்சியில், 6,500 ஏக்கர் கோவில் நிலம், பட்டா நிலமாக மாற்றப்பட்டு உள்ளது.

தற்போது, 5,000 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டதாக கூறி, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, ‘முதல்வர் ஸ்டாலின் ஆன்மிக ஆட்சி நடத்துகிறார்’ என்று புகழ்ந்துள்ளார். எந்த நிலம், எங்கு, யாரிடம் மீட்கப்பட்டது என்று தெரிவிக்கவில்லை. மாயமான, 1.35 லட்சம் ஏக்கரில், 3.7 சதவீதத்தை மட்டும் மீட்டனரா என்ற விபரமும் இல்லை. இது தவிர, 800க்கும் மேற்பட்ட கோவில்களின் 1,100 ஏக்கர் நிலம் பட்டா போடப்பட்டுள்ளது; மேலும், 437 கோவில்களின் 400 ஏக்கர் நிலத்தை சிட்டாவில் மாற்றியுள்ளனர்.

தமிழக கோவில்களை அரசு ஆக்கிரமித்துள்ளது என்று பிரதமர் மோடி பேசியுள்ளது முற்றிலும் உண்மை; இதை முதல்வர் மறுத்துள்ளார். முதல்வர் என்னுடன் நேருக்கு நேர் ஆதாரங்களுடன் விவாதிக்க தயாராக இருக்கிறாரா? அவர் நிரூபித்து விட்டால், தமிழகத்தை விட்டே வெளியேற தயாராக உள்ளேன். நான் சொல்வது பொய் எனில், வழக்கு போடட்டும். திருப்பூரில், 55 ஏக்கர் கோவில் நிலத்தில் கலெக்டர் அலுவலகம், கோர்ட் என கட்டியுள்ளனர். கோவில் சொத்துகளால், எட்டு மாதங்களில் 159 கோடி ரூபாய் அரசு வருமானம் பெற்றுள்ளது. கோவில் வருமானம் அரசுக்கு செல்கிறது. இதில் தான், முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு சம்பளம், அவர்களுக்குரிய செலவுகள் செய்யப்படுகின்றன.

இந்த அரசுக்கு நம் முன்னோர்கள், நம் வரலாறு, ஹிந்து கோவில்கள் எதிரியாக உள்ளதால், அவற்றை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறது. அறநிலையத் துறையால் கோவில்களுக்கு பாதுகாப்பற்ற நிலை தான் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.