பிரணாப் முகர்ஜி, நானாஜி தேஷ்முக், பூபென் ஹசாரிகாவுக்கு பாரத ரத்னா விருது – குடியரசுத் தலைவர் வழங்கினார்

நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா விருது, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வியாழனன்று வழங்கப்பட்டது.

பாரத் ரத்னா விருது, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மறைந்த சமூக சேவகர் நானாஜி தேஷ்முக், பூபேந்திர குமார் ஹாசாரிகா ஆகியோருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

வியாழனன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் பிரணாப் உள்ளிட்ட மூவருக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்கினார். விழாவில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

பிரணாப், 1969ல் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். ராஜ்யசபா உறுப்பினராக 1969, 1975, 1981, 1993, 1999 ஆகிய ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திரா அமைச்சரவையில் 1982 – 84ல் நிதியமைச்சராக பணியாற்றினார்.

இந்திராவின் மறைவுக்குப்பின் 1986-89 வரை காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, ராஷ்ட்ரிய சமாஜ்வாடி காங்கிரஸ் என்ற தனிக் கட்சி துவங்கினார். ஆனால் குறுகிய காலத்திலேயே மீண்டும் காங்கிரசில் இணைந்தார். 2004-06ல் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், 1995-96, 2006-09 ஆகிய ஆண்டுகளில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தார்.

2009ல் நிதியமைச்சராக செயல்பட்ட பிரணாப், 2012 ஜூலை 25ல் நாட்டின் 13வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *