பிபின் சந்திரபால்

விடுதலை இயக்கத்தின் மும்மூர்த்திகள் ‘லால், பால், பால்’ என்பார்கள். அது லாலா லஜபதிராய், பாலகங்காதரத் திலகர், பிபின் சந்திர பால் ஆகியோரையே குறிக்கும். பிபின் சந்திரபால் வங்கதேசத்தின் போய்ல் என்ற கிராமத்தில் பிறந்தார். பட்டப்படிப்பு முடிக்காதவர் எனினும் ஆசிரியர், பத்திரிகையாளர், சொற்பொழிவாளர், நூலகர், எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்டவர். அந்நிய துணி எரிப்பு,  அந்நியப் பொருள் புறக்கணிப்பு, சுதேசி இயக்கம் ஆகியவை இவரது சிந்தனையில் விளைந்தவை. சுதேசி பொருட்களைப் பயன்படுத்துவதால் வறுமையையும், வேலையில்லாத் திண்டாட்டத்தையும் ஒழிக்கலாம் என்றார். ‘புரட்சிக் கருத்துக்களின் தந்தை’ என்று அழைக்கப்படும் இவர், காங்கிரஸ் கட்சியின் விட்டுக்கொடுக்கும் கொள்கைகள் பிடிக்காத்தால் அரசியலை விட்டு விலகினார். லண்டன் இந்தியா ஹவுஸில் தலைமறைவாக இருந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வ.வே.சுப்பிரமணியம் ஐயர், வீர சாவர்க்கர், மதன்லால் திங்ரா ஆகியோருடன் இணைந்து செயல்பட்டார். ஆங்கிலேயரின் பொருளாதார வலிமை ஆட்டம் கண்டால், ஆட்சி தானாகவே முடிவுக்கு வரும் என வலியுறுத்தினார். தேசியக் கல்வி மூலம் நாட்டுப்பற்றைப் பதியச் செய்யலாம் என்பது இவரது அசைக்க முடியாத நம்பிக்கை.