நம் பாரதத் தேசத்தில் கல்வியின் முக்கியத்துவத்தை எப்படி உணர்ந்தார்கள்? அதன் லட்சியம் என்ன? அக்கல்வி நம்மை எங்ஙனம் மேம்படுத்தக் கூடியதாக இருக்கும் என்றெல்லாம் தொலைநோக்கோடு சிந்தித்து, நமக்கு பாதை வகுத்ததோடு, வாழ்ந்து காட்டி உணர்த்தினார்கள்.
கண்ணிரண்டே யாவர்க்கும் கற்றோர்க்கு மூன்றுவிழி
எண்ணுவிழி ஏழாகும் ஈவோர்க்கு – நண்ணும்
அநந்தந் தவத்தால் அருள்ஞானம் பெற்றோர்க்கு
அநந்தம் விழியென்று அறி“
என்பது நம் முன்னோர்கள் இம்மண்ணுக்கு சொன்ன வாக்கு.
மேற்சொன்ன பாட்டு தமிழ் அறநூலான நீதிவெண்பாவில் 10வது பாடல். அப்பாடல் நமக்கு உணர்த்தும் நீதி என்ன?
மக்கள் யாவர்க்கும் இரண்டு கண்களே உள்ளன; நன்கு படித்தவர்களுக்கு மூன்று கண்கள் உள்ளன; இல்லையென்னாது கொடுப்பவர்க்கு மதிக்கத்தக்க கண்கள் ஏழாகும்; வந்து சேர்கின்ற முடிவில்லாத நற்றவத்தால் அருள்வழிப்பட்ட உண்மை அறிவைப் பெற்றோர்க்கு அளவில்லாத கண்கள் உண்டு என்பதை அறிந்துகொள்“ என்பதே.
கற்றதனால் தான் பெற்ற அறிவுக் கண்களால் ஈகைத் தன்மையை வளர்க்க வேண்டும். ஈகைத் தன்மையை தொடரும் நற்றவத்தால் ஞானம் பெற்ற கற்றோர்க்கு அளவில்லாத கண்கள் உண்டு என்பதே.
த்ருதி க்ஷமா தமோ அஸ்தேயம்
ஷௌசம் இந்திரிய நிக்ரஹ;
தீர் வித்யா சத்யம் அக்ரோத
தஸகம் தர்ம அக்ரோத“
(மனு ஸ்மிருதி)
அதாவது, உறுதி, மன்னிக்கும் தன்மை, சுய கட்டுப்பாடு, பிறர்பொருளுக்கு ஆசைப்படாமை, தூமை, புலனடக்கம், புத்தி, கல்வி, உண்மை, கோபமின்மை என்ற தர்மத்தின் அடையாளங்களான பத்து குணங்களை வளர்க்கக் கூடிய – வாழ்வில் கடைபிடிக்கக் கூடிய கல்வியை நம் பாரத தேசம் பெற்றிருந்தது.
வைகறை யாமம் துயிலெழுந்து தான் செயும்
நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதின்
தந்தையும் தாயும் தொழுதெழுக“
என்பதே. முந்தையோர் கண்ட முறையாகவே நம் மக்களின் வாழ்க்கை நெறி அமைய அடித்தளமிட்டது நம் பாரதியக் கல்வி.
தமஸோ மா ஜ்யோதிர் கமய” என்ற உபநிடத வாக்கியத்துக்கேற்ப உரிய விளக்கங்களை அளித்து, கேட்டு, தெளிந்து, ஞானம் பெற்று வாழ்வின் மேலானவர்களாக மாணவர்கள் மாற கல்விச் சாலைகள் வழிகாட்டின.
நமது இதிகாசங்கள், புராணங்கள், பகவத் கீதை, திருக்குறள், நமது சங்க இலக்கியங்கள் – நுட்பமான அறிவார்ந்த கேள்விகள், அவற்றிற்கான தெளிவான, தீர்க்கமான விடைகள் – இவற்றின் வடிவில் ஆழ்ந்த தத்துவங்களை நூல்களில் வரும் பாத்திரங்கள் மூலமாகவே விளக்குவதுதான் நமது பாரதிய கல்வியின் வழிமுறை.
மஹாபாரதத்தில் தருமன் – யட்சன், பகவத் கீதையில் அர்ஜுனன் – கிருஷ்ண பரமாத்மா – கடோபநிஷத்தில் நசிகேதன் – யமதர்மன் ஆகியோரிடையே வினா-விடை வடிவத்தில் குரு – சிஷ்யை பாவனையில் நடைபெறும் உரையாடல்கள் நமது கல்வி முறையின் பெருமையையும், வலிமையையும் விளங்கவைக்கும் உதாரணங்கள்.
மனிதனுக்குள் புதைந்திருக்கும் பூரணத்தை – அமரத்துவத்தை வெளிக்கொணர்வதற்கான ஆற்றலைத் தருவதான கருவியே உண்மையான கல்வி“
என்பதே நம் நாட்டின் கல்வியைப் பற்றிய உறுதியான பார்வை.
ஆனால், இன்று நம் நாட்டில், ஏன் – உலகெங்கும் கற்றுத்தரப்படும் கல்வியின் நோக்கம், அதனால் விளையும் விளைவுகள் என்ன?
விவேகானந்தரின் வார்த்தைகளில் சோல்வதென்றால்,
அன்னிய மொழியிலுள்ள மற்ற மனிதர்களுடைய எண்ணங்கள் சிலவற்றை மனப்பாடம் செய்வதை நீங்கள் கல்வியெனக் கொண்டிருக்கிறீர்கள். பல விஷயங்கள் மூளையில் திணிக்கப்பட்டு ஒரு சர்வ கலாச்சாலையில் பட்டம் பெற்று விட்டால் கல்விமான்கள் என்று உங்களை நினைத்துக் கொண்டிருந்தீர்கள். இது உண்மையில் கல்வியாகுமோ? உங்கள் கல்வியின் நோக்கமென்ன? ஒரு குமாஸ்தா ஆவது அல்லது வக்கீல் ஆவது, அல்லது மீறினால் ஒரு மாஜிஸ்ட்ரேட் ஆவது – இவைதானா உங்கள் லட்சியம்? மக்கள் மனத்தில் புதைந்துள்ள மன வலிமையையும், அறம் சார்ந்த சிந்தனையையும், செயல்படும் ஆண்மையையும் வெளிப்படுத்தாத ஒரு கல்வி முறையைக் கல்வியென்று சொல்லுதல் தகுமா?”
இத்தகு கல்விதான் இன்று நம்மை ஆட்கொண்டுள்ளது.
ஒழுக்கம் அளிப்பது, மனவலிமையைத் தருவது, புத்தியை கூர்மைப்பட செய்வது, ஒருவனைத் வலிமை கொண்டு தன்னம்பிக்கையுடன் நிற்கச் செய்வது ஆகிய நம் பாரதிய கல்வியைக் கொண்ட வருவதாலேயே நம்மிடையே உள்ள அடிமை மனப்பான்மை நீங்கும்; அறம் சார்ந்த ஆண்மை கொண்ட வாழ்வு ஓங்கும்.
நம் பாரதத் தேசத்து வாழ்வியல் பொருட்களான அறம், பொருள், இன்பம் மூலம் வீடு பேற்றை வலியுறுத்திய தெய்வப் புலவர் வள்ளுவர் பொருட்பாலை ‘இறைமாட்சி’யுடன் தொடங்கியவர், அதற்கு அடிப்படையான கல்வியை – அதாவது நாட்டின் அரசனோ, தன்னை ஆளும் தலைவனாக விரும்பும் மனிதனோ கற்க வேண்டிய கல்வியின் பெருமையை, சிறப்பை சொல்ல வருகின்றார் – கல்வியென்னும் 40வது அதிகாரத்தில் பத்துக் குறட்பாக்கள் மூலம்.
அரசன் அறிவுடையன் ஆயக்கால் தன்னுயிர்க்கே அன்றி மண்ணுயிர்க்கும் பயன்படுதல் நோக்கி, இஃது அரசியலுள் வைக்கப்பட்டதாயினும் யாவர்க்கும் உறுதி பயத்தற் சிறப்புடைமையின் பொதுப்படக் கூறுகின்றார்”
என்பதன் மூலம் அரசனுக்கு மட்டுமின்றி, மனித குலம் அனைத்திற்கும் உயர்வினைத் தரவல்லது கல்வி என்பதை நமக்கு புலப்படுத்துகின்றார்.
நம் பாரதிய கல்வி – நமக்கு முக்தியைத் தரும்; தொலைநோக்குப் பார்வை கொண்ட அறிவைத் தரும்; வாழ்வியல் விழுமியங்களை புரிந்து வாழும் ஞானத்தை அளிக்கும்; நம் முன் உள்ள அமரத்துவத்தை வெளிப்படுத்தி நம்மை தெவீகத்தன்மையுள்ளவராக மாற்றும்“ இத்தகு கல்வியை கொண்டுவருவதன் மூலம் பாரதத்தை மீண்டும் உலகினை வழிநடத்திச் செல்லும் குருவாக உயர்த்திடுவோம்.
– கட்டுரையாளர்
தேசிய சிந்தனைக் கழக மாநில அமைப்பாளர்