என் குரு ! என் குருகுலம்!

மா. கற்பகம்

நான் ராஜபாளையத்தில் உள்ள சகோதரி நிவேதிதா குருகுலத்தில் தங்கி படித்து வருகிறேன். எங்கள் குருகுலத்தில் காலை 6 மணிக்கு எழவேண்டும் என்ற நியதி உள்ளது. நான் சாதாரணமாக 7, 8 மணிக்கு எழுந்திருக்கவே மிகச் சிரமப்படுவேன். அப்படிப்பட்ட நான் யாரும் கட்டாயப்படுத்தாமல் எந்தவித ஒலிப்பான் உதவியும் இல்லாமல் 4.30 மணிக்கு (வைகறை) எழுந்து விடுகிறேன்.  இதற்குக் காரணம் எங்கள் குருகுலத்தில் எங்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர் S.P. ராமசாமி அய்யாதான்.

அவர் சேவாபாரதி அமைப்பின் மதுரை கோட்டத்தின் தலைவராக உள்ளார். ஐயா  தினமும் 3.30 மணிக்கே எழுந்து விடுவதாக அடிக்கடி கூறுவார். இதுவே நான் 4.30 மணிக்கு எழுந்திருக்க தூண்டுகோல் ஆனது. அதேபோல் அயா,  தினமும் நாம ஜெபம் எழுதுவதை பார்த்திருக்கிறேன். அதைப் பார்த்து நானும் ஒரு நோட்டில் நாமஜெபம் எழுதிக்கொண்டிருக்கிறேன். அதேபோல் தினமும் நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தையும் எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளார். முன்பெல்லாம் எழுதுவதற்கே கூசும் நான் எதைக் குறித்தும் பிழையில்லாமல் எழுதும் திறனைப் பெற்றுள்ளேன். இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். என்னைப் பொறுத்த வரையில் ஐயா பாடம் சொல்லித்தரும் வெறும் ஆசிரியர் மட்டுமல்ல; என்னை நல்ல மனுஷியாக செதுக்கும் குருவு ஆவார்.

“எடுத்துக்காட்டான ஆசிரியர் ஒருவருக்குக் கிடைத்துவிட்டால் அவருக்கு உலகில் எல்லாம் கிடைத்தமாதிரி”.

 

ந. ரேணுகாதேவி

எங்கள் குருகுலம் வித்தியாசமான பள்ளி. முந்தைய காலத்தில் மாணவர்கள் குருகுலத்தில்  பயிற்சிகளை  கற்றார்கள். குருவானவர் மாணவர்களின் அனைத்து திறமைகளையும் கண்டுபிடித்து அதை வளர்ப்பார். எங்களது குருகுலம் பழைய குருகுலம் போல் இல்லாவிட்டாலும், தற்போதைய பள்ளிக்கூடம்போல் மூளைக்குள் விஷயங்களைத் திணிக்கும் வேலையைச் செய்யவில்லை. எங்கள் குருகுலத்தின் பெயர் சகோதரி நிவேதிதா குருகுலம். பள்ளிக்கூடம் போகவேண்டியதில்லை.

பள்ளியில் படித்தால் இங்கு இருப்பதுபோல் இருக்குமா என்பது சந்தேகம்தான். அதே சமயம் பள்ளிப்பாடங்களும் சிறந்த உதாரணங்களுடன் விளக்கப்படுகின்றன. பள்ளிகளில் படித்தால் பாடம் மட்டுமே கிடைக்கும். ஆனால் இங்கு எங்களது மனதில் எழும் தீய எண்ணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக களையப்படுகிறது. பள்ளிப்பாடங்கள் எளிமையாக மனதில் பதிகின்றன. முயற்சி நம்முடையது, முடிவு ஆண்டவனுடையது” என்பது குருகுலத்தில் அடிக்கடி ஞாபகப்படுத்தப்படும் செய்தி.

அன்னயாவும் (நமது நாட்டின் பெருமைகள்) அறிந்திலர், ஆங்கிலம்பயில் பள்ளியில் போகுனர் என்ற மகாகவி பாரதியின்  கவலையை எங்களது குருகுலம் போக்கிக்கொண்டு இருக்கிறது. நாட்டுக்குழைத்த நல்லவர்கள் பற்றி  கூறி எங்களுக்கு தேசபக்தியும் வளர்க்கப்படுகிறது. எங்களுக்கு எளிமை  கற்றுக்கொடுக்கப்படுகிறது. இப்படி எங்கள் குருகுலத்தின் பெருமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.