ஒரு விவசாயி குஜராத்தில் உருளைக்கிழங்கு பயிரிடுகிறார். உடனே அவர் மீது நீதிமன்ற வழக்கு ஒன்று பாய்கிறது. ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கக் கோரி வழக்குப் தொடர்ந்தது, லேஸ் உருளைக்கிழங்கு சிப்ஸ் உற்பத்தி செய்யும் பெப்சிகோ என்ற சர்வதேச பெரு வர்த்தக அமைப்பு. பன்னாட்டு நிறுவனம் அவர்களிடம் வாங்கிய உருளைக்கிழங்கு விதையை கொண்டு உற்பத்தி செய்து மற்றவர்களுக்கு உருளைக்கிழங்கு விற்பனை செய்தாராம். அது ஒப்பந்த மீறலாம்.
இந்த ஒரு விவசாயி மட்டுமல்ல, மொத்தம் நான்கு குஜராத் விவசாயிகள் இதுபோல சர்வதேச வணிக சர்வாதிகாரத்திற்கு இரையாகியுள்ளார்கள். இந்த வழக்கு பலத்த சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து கம்பெனி சமரசம் செய்து கொள்ள முன்வந்தது. ’எங்களிடம் வாங்கும் விதைகளைக் கொண்டு உற்பத்தி செய்வதை எங்களிடம் தான் விற்க வேண்டும். அல்லது எங்களிடம் விதை வாங்கவே வராதே’ என்பதுதான் அந்த கம்பெனி விதித்த சமரச நிபந்தனை! அவர்கள் விதைக்கு காப்புரிமை பெற்றிருக்கிறார்களாம்!
பாரத தேசத்தில் விதைக்கு காப்புரிமை பெறுவதில்லை. மாறாக விவசாயி விதையை பல மடங்காக்கி அக்கம்பக்க விவசாயிகளுக்கு தானமாக அளிப்பார். அதுதான் பாரதப் பாரம்பரியம். தமிழக விவசாயி விதை நெல்லை கடவுளாகவே போற்றுபவர். காலையில் விதைத்த நெல்லை இரவில் திரட்டி வந்து அரிசியாக்கி சிவனடியாருக்கு அமுதுபடைத்த பரம ஏழை இளையான்குடி மாற நாயனார் வரலாறு சொல்லும் சேதி இதுதானே? எனவேதான் சுதேசி ஜாகரண் மன்ச் “பெப்சிகோ செய்வது மிரட்டிப் பணம் பறிக்கும் வேலை. அது சட்டவிரோதம். சமரசம் என்பதெல்லாம் கம்பெனிக்கு சாதகமாகத்தான், விவசாயிக்கு அல்ல. எங்கள் விவசாயிகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று அறிவித்துள்ளது.
என்னுடைய வயலில் நான் எதை விளைவிக்க வேண்டும், எப்போது விளைவிக்கவேண்டும், யாருக்கு அதை விற்பனை செய்ய வேண்டும் என்பதை ஒரு பன்னாட்டு நிறுவனம் கட்டளை போட்டு கட்டுப்படுத்துவது அக்கிரமம் என்று ஒவ்வொரு விவசாயியும் குமுறத்தான் செய்வார்.
பெப்சிகோவை விட பாரத விவசாயியை கொடூரமாக முடக்கிவைத்திருப்பது மான்சான்டோ நிறுவனம். Bt காட்டன் எனப்படும் பருத்தி வகையை நம் நாட்டு விவசாயிகள் தலையில் கட்டிய நிறுவனம் இது. இந்த வகை பருத்தி விதை முளைக்கும். ஆனால் அது தரும் விதை மறுபடி முளைக்காது. பயிரிட விதை வாங்குவதற்கு கம்பெனியிடம் தான் போய் விவசாயி கைகட்டி நிற்க வேண்டும். அப்படி பருத்தியை மரபணு மாற்றி வைத்திருக்கிறது அந்த நிறுவனம்! அண்மையில் மான்சான்டோ நிறுவனத்தை ஜெர்மானிய பெருநிறுவனம் ஒன்று வாங்கி இருக்கிறது அந்த நிறுவனம் நமது விவசாயிகளை இன்னும் எப்படி எல்லாம் அலைக்கழிக்குமோ?
Bt காட்டன் விதைகள் பாரதத்திற்குள் வந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. Bt காட்டன் செடிகளில் பூச்சியே வராது என்று அந்த நிறுவனம் பிரச்சாரம் செய்திருந்தது. அண்மையில் இந்த வகை பருத்தி பயிர் மீது புதிய வகை இளஞ்சிவப்பு பூச்சி தாக்குதல் ஏற்பட்டது. குறிப்பாக தெலுங்கானா விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இதற்கான பூச்சிக்கொல்லி மருந்து கிடையாது. சில நாடுகளில் Bt காட்டன் அல்லாத வகை பருத்தியை கலந்து பயிர் செய்வது தான் ஒரே தீர்வு என்று கண்டறிந்திருக்கிறார்கள். பாரதத்தில் அது சாத்தியம் இல்லை. காரணம் பாரதத்தில் விளைவிக்கப்படும் பருத்தியில் 96 சதவீதத்திற்கு மேல் Bt காட்டன் தான். இந்த நிலையில் சாதாரண பருத்தி விதை வேண்டுமானால் அதற்கு விவசாயி எங்கே போவார்?
ஆனால் தேசத்திற்குள் இந்த மரபணு மாற்றப்பட்ட Bt காட்டன் பருத்தி விதை அதிகமதிகமாக வரவர ஆண்டுதோறும் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரிக்கின்றன என்று கலிபோர்னியா பல்கலைக்கழக நிபுணர்கள் குழுவொன்று செய்த ஆய்வு கண்டறிந்துள்ளது. பாரத நாட்டில் பருத்தி சாகுபடி நடப்பது வானம் பார்த்த பூமியில். பயிர் செய்வோர் சிறு விவசாயிகள். Bt காட்டன் விளைய பாசன விளை நிலம் தேவை. அதிக விளைச்சல், அதிக லாபம் உண்டு என்று Bt காட்டன் பற்றி பிரச்சாரம் நடந்ததால் விவசாயிகள் அதை நாடினார்கள். ஆனால் பாசன வசதி இல்லாததால் நஷ்டத்தை சந்தித்தார்கள். விளைவு தற்கொலகள்.
சோனியா – மன்மோகன் சிங் தர்பாரில் உள்ளே வந்த பெப்சிகோவும் மன்சான்டோவும் மற்ற சர்வதேச பெருவணிக வேட்டைக்காரர்களும் விவசாயிகளின் தற்கொலைக்கும் வறுமைக்கும் நாங்கள் காரணமல்ல என்று நழுவின. பிரதமர் மன்மோகன் சிங் ஒரு கட்டத்தில் உங்களால் பயிர்செய்ய முடியவில்லை என்றால் வேறு தொழிலுக்குப் போங்கள் என்று நமது விவசாயிகளுக்கு யோசனை சொன்னதுதான் கொடுமையிலும் கொடுமை.
இன்றைய விவசாயிக்கு பன்னாட்டு நிறுவன பயங்கரம்
நேற்றைய விவசாயிக்கு பிரிட்டீஷ் தர்பார் கொடுமைகள்
அரசியல், பொருளியல், உழவியல், இறையாண்மையை குந்தகப்படுத்த ஒரு பன்னாட்டு நிறுவனம் முயற்சி செய்வது, 19ம் நூற்றாண்டிலும், 20ம் நூற்றாண்டிலும் இந்தியாவை ஆங்கிலேயர்கள் அடக்கியாள மேற்கொண்ட நடவடிக்கைகளையே நினைவு படுத்துகிறது.
முதலாம் உலக யுத்தம் உக்கிரமடைந்த வேளையில் அதிக வரிகளை விதித்து இந்தியாவை ஆங்கிலேயர்கள் கசக்கிப் பிழிந்தனர். பீகாரிலுள்ள சம்பாரண் மாவட்டத்தில் நிலமற்ற ஏழை விவசாயிகளும், ஒப்பந்த தொழிலாளர்களும் உணவுப்பயிர்களை பயிரிடாமல் பிரிட்டிஷ் அரசின் கட்டாயத்தின் பேரில் அவுரி முதலான பணப்பயிர்களை பயிரிட்டு வந்தனர். இதனால் அவர்களுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை. அவுரிப்பயிரை குறைந்தவிலையில் பிரிட்டிஷார் கொள்முதல் செய்தார்கள். ஆங்கிலேயர்களுக்கு அனுசரணையாக பெரும் நிலச்சுவான்தார்கள். செயல்பட்டனர். உழவர்களின் இன்னல்களைப் பற்றி துளியும் கவலைப்படாத ஆங்கிலேய அரசு மேலும் மேலும் வரிவிதித்து வதைத்தது.
சம்பாரண் விவசாயிகளின் அவலநிலை காந்தியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப் பட்டது. ராஜேந்திர பிரசாத், பிரஜகிஷோர் பிரசாத், அனுக்கிர நாராயண் சின்கா போன்ற வழக்கறிஞர்களுடன் சம்பாரண் வந்த காந்தி போராட்டத்தை மாற்றியமைத்தார். அதை வரிகொடா இயக்கமாக விஸ்வரூபப்படுத்தினார்.
சம்பாரணில் ஆசிரமம் ஒன்றை அமைத்த காந்தி அப்பகுதியிலிருந்து கிராமங்களுக்குச் சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அரசுக்கு வரிகொடாமல் அறவழியில் போராடுமாறு மக்களை ஊக்குவித்தார். ஊர்களை தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு ஆக்கப்பூர்வ பணிகளில் காந்தியின் ஆதரவாளர்கள் முனைப்புடன் ஈடுபட்டார்கள். சம்பாரண் மக்கள் வரிகொடுக்க மறுத்தனர். கலகத்தைத் தூண்டினார் என்று காந்தி மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவர் சிறையில் அடைக்கப்பட்டார். போராட்டம் மேலும் மேலும் வலுவடைந்ததை அடுத்த அரசு பணிந்தது. காந்தி விடுதலை செய்யப்பட்டார். பஞ்சகாலம் முடியும் வரை வரிவசூலும் வரிவிகித உயர்வும் நிறுத்தி வைக்கப்பட்டனர் அவுரி சாகுபடியாளர்களுக்கு அதிக விலை வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இப்போராட்டம்தான் காந்தியை மகாத்மா காந்தியாக மகத்துவப்படுத்தியது.
காந்தியின் வழிகாட்டுதல்படி சர்தார் வல்லபாய் படேல் நரஹரி பாரிக், மோகன்லால் பாண்ட்யா, ரவிசங்கர் வியாஸ் போன்றோர் விவசாயிகளை திரட்டினார். குஜராத்திலுள்ள கேடா விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த தன்னார்வலர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். வரி கட்ட முடியாது என்று விவசாயிகள் உரத்தக் குரலில் கூறினார்கள். விவசாயிகளின் நிலங்களை ஆங்கிலேய அரசு கையகப்படுத்தியது. இது நெருப்பில் நெய்வார்த்ததைப் போல உழவர்களின் போராட்டத்தை உக்கிரப்படுத்தியது. நிர்வாகம் ஸ்தம்பித்தது. இறுதியில் அரசு பணிந்தது. அவ்வாண்டுக்குரிய வரி மட்டுமல்லாமல் அடுத்தாண்டுக்கான வரியும் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உரிமையாளர்களுக்கு அரசு திருப்பியளித்தது.