கனம் கோர்ட்டாரின் தரம் தக்கையோ தக்கை!

தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள 31 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பும்பொருட்டு, விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு ஜனவரி மாதம் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்த பணிக்கான முதல்நிலைத் தேர்வு ஏப்ரல் 7 அன்று நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்றமும் – தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் இணைந்து நடத்திய இந்த தேர்வை தமிழ்நாட்டைச் சேர்ந்த சார்பு நீதிபதிகள், முன்சீப் நீதிபதிகள், வழக்குரைஞர்கள் என மொத்தம் 3,562 பேர் எழுதினார்கள். பிரதானத்தேர்வு மே 25, 26 நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் முதல்நிலைத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 30 அன்று வெளியிடப்பட்டது. முதல்நிலைத்தேர்வில் பொதுப்பிரிவினர் 60 மதிப்பெண்களும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 52.5 மதிப்பெண்களும் பட்டியல் சமூகத்தினர், பழங்குடியினர் 45 மதிப்பெண்களும் பெற்றிருக்கவேண்டும். இந்த குறைந்தபட்ச மதிப்பெண்களை பெறாதவர்கள் பிரதான தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது விதிமுறை. முதல்நிலைத்தேர்வு எழுதிய 3,562 பேரில் ஒருவர்கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சிகரமான முடிவு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தேர்வு எழுதிய 3,562 பேரில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் நெகடிவ் மதிப்பெண்களை பெற்றுள்ளனர் என்பது அதிர்ச்சியை மேலும் உச்சப்படுத்தியுள்ளது. 150 மதிப்பெண்களில் அதிகபட்சமாக 24 மதிப்பெண்களே பெற்றுள்ளனர் என்பதும் அதிர்ச்சிகரமானதுதான். இந்த தேர்வு  6 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு நடத்தப்பட்டுள்ளது.

8,000 விண்ணப்பங்கள் வந்தன. இவை பரிசீலிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் 4,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன. எஞ்சிய 3562 விண்ணப்பதாரர்களும் தேர்ச்சிபெறும் நிலையை எட்டவில்லை என்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

கேள்விகள் கடுமையாக இருந்தன என்று ஒருபுறம் கூறப்படுகிறது. அதேநேரத்தில் தேர்வை எதிர்கொள்ள உரிய ஆயத்த நடவடிக்கைகளை விண்ணப்பதாரர்கள் மேற்கொள்ளவில்லை என்பதையும் புறந்தள்ளிவிடமுடியாது. கேள்வித்தாளில் அநாவசியமான வினாக்கள் பல இடம்பெற்றிருந்தன என்பதையும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நீதித்துறை தொடர்பாக பல்வேறு புகார்கள் குவிந்துகொண்டிருக்கின்றன. டெல்லியில் மட்டுமல்லாமல் மாநிலங்களிலும் நீதிபதிகள் சம்பந்தப்பட்ட சர்ச்சைகள் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.

+2, 10ம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் அநேகமாக ஆண்டுக்காண்டு அதிகரித்துவருகிறது. ஆனால் அதே நேரத்தில் கல்வியின் தரம் உயர்ந்து வருகிறதா என்ற கேள்விக்கு திருப்திகரமான பதிலை அளிக்கமுடியவில்லை. மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வில் ஒருவரும் வெற்றிபெறவில்லை என்பது சம்பந்தபட்டவர்களின் கண்ணைத் திறக்குமா? இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள தவறினால் எல்லா துறைகளுமே இத்தகைய தர்ம சங்கடங்களை எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்படும் என்பதை சுட்டிகாட்டாமல் இருக்கமுடியவில்லை.

One thought on “கனம் கோர்ட்டாரின் தரம் தக்கையோ தக்கை!

  1. இதனால் தான் சபரிமலை போன்ற கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் சிறந்த தீர்ப்பு வழங்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது…!!!!!!!!!?!

Comments are closed.