பரதன் பதில்கள்

பாதபூஜை என்பது என்ன? யாருக்கு செய்யலாம்?   –    கே. மகேஷ், திருச்சி

பெரியவர்களின் திருவடிகளை கழுவி மலரிட்டு, சந்தனம், குங்குமம் வைத்து வழிபடுவது பாதபூஜை. இதைச் செய்தால் புண்ணியம். அப்பா, அம்மா, ஆசான், துறவிகள், சான்றோர்கள் பாதபூஜை செய்யத் தகுந்தவர்கள்.

மாலை நேரத்தில் சாப்பிடக்கூடாது என்கிறார்களே?  –  எம். விஜயலட்சுமி, சென்னை

மாலை நேரத்தில் சாப்பிடலாம், தவறில்லை. ஆனால் சூரியன் அஸ்தமன நேரத்தில் (சந்தியா காலம்) சாப்பிடுவது, தூங்குவது, நகம் வெட்டுவது கூடாது. மகாலெட்சுமி வீட்டிற்கு வரும் நேரம் என்பதால் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

பரதனாரே… தாங்கள் சமீபத்தில் படித்ததில் பிடித்தது எது?    –  ஆர். நிர்மல், கோவை

‘‘கடவுளின் கணக்குப் புத்தகத்தில் நம் செயல்கள் மட்டுமே குறிக்கப்படுகிறது. நாம் படித்ததும், பேசியதும் அல்ல.” – இது மகாத்மா காந்திஜியின் வாக்கு.

குழந்தை நல்ல நேரத்தில் பிறக்கவேண்டும் என்பதற்காக சிலர் சிசேரியன் செய்து கொள்வது பற்றி?     

– ச. பசுபதி, திருவாடுதுறை

பிறப்பு, இறப்பு என்பது நமது கைகளில் இல்லை. சுகப்பிரசவம்தான் சிறந்தது. தவிர்க்க இயலாத காரணங்களால் சிசேரியன் செய்வது தப்பில்லை. ஆனால் குழந்தை நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும் என்பதற்காக சிசேரியன் செய்வது ஆபத்தானது, அபத்தமானது.

ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு கிழிந்த ஷூ தான் இருந்ததாமே?   

– எம். பிரியா, காஞ்சிபுரம்

இது ஒரு அதிர்ச்சியான செய்தி. ஐயோ பாவம் என்று கேட்டவர்கள் மனம் கலங்கினர். ஆனால் இது உண்மையில்லை. ‘‘அந்த ஷூ எனக்கு அதிர்ஷ்டமானது. அதனால் அதை பயன்படுத்தினேன். என்னிடம் நல்ல ஷூக்கள் உள்ளன” என்று அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் மம்தாவின் ரௌடித்தனம் அதிகரித்து வருகிறதே?  – சே. ராமசாமி, கோவில்பட்டி

‘‘எனக்கு ௪௨ எம்.பிக்கள் கொடு. ஹிந்துக்களை எப்படி கதறவைக்கிறேன் பார்” என்று பேசும் அந்த முதலமைச்சர் தப்பிவிட முடியாது. இன்று மக்கள் ஆதரவால் பாஜக வெகு வேகமாக வளர்ந்து வருகிறது.

முஸ்லிம் பெண்கள் பொது இடங்களில் பர்தா அணிய இலங்கை அரசு தடைவிதித்துள்ளதே?

–   எஸ். பாக்கியலட்சுமி, கன்னியாகுமரி

இலங்கை தற்கொலை படையில் ஒரு முஸ்லிம் பெண் இருந்தாள் என்பது அதிர்ச்சியான செய்தி. பாதுகாப்பு நலன் கருதி இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் ஏராளமான கல்வி நிலையங்களை, நடத்தும் ஒரு முஸ்லிம் அமைப்பு மாணவிகள் பர்தா அணியவேண்டாம் என்று கூறியிருப்பது நல்ல அறிகுறி.