”பாரதம் உலகத்துக்கு வழங்க வேண்டிய செய்தி தர்மம்”

கடந்த ஆகஸ்ட் 29, 2026 அன்று நியூயார்க்கின் மேடிசன் ஸ்கொயர் கார்டனில் (Madison Square Garden-) நடைபெற்ற உலக ஒருமைப்பாடு (Universal Oneness Celebration) நிகழ்ச்சியில்,
ஆர்.எஸ்.எஸ் சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பாகவத் உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவின் 39 மாநிலங்களைச் சேர்ந்த 6,000க்கும் மேற்பட்டோர், 853 நகரங்களில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பல பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களும், 250க்கும் மேற்பட்ட ஏராளமான அமைப்புகளும் கலந்து கொண்டன.
பல்வேறு சமயங்கள், பல்வேறு இன குழுக்கள் பல்வேறு நாடுகள் என உலகம் பிரிவினை பேசி வரும் நிலையில், இந்த நிகழ்ச்சி யுனிவர்சல் ஒன்னஸ் அதாவது, “வசுதைவ குடும்பகம்” -உலகமே ஒரு குடும்பம் என்ற அடிப்படை சிந்தனையில் ஒற்றுமை, சேவை, உரையாடல், நல்லிணக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு அமைந்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகிலபாரத தலைவர் மோகன் பாகவத், வேற்றுமையில் ஒற்றுமை காணும் பாரதம், சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் கூறிய சகோதரத்துவம், தர்மத்தின் உண்மையான பொருள், வெளிநாடு வாழ் இந்தியர்களின் பொறுப்பு, குறிப்பாக அமெரிக்க வாழ் வம்சாவளி இந்தியர்கள் என்ன செய்ய வேண்டும், எப்படி இருக்க வேண்டும், பொருளாதார வெற்றி, சேவை செய்வதும் அதனை பகிர்ந்து கொள்வதும், இயற்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அனைவருக்குமான பொறுப்பு, பாரதம் என்றுமே நமது கர்மபூமி, ஜன்மபூமி என பல்வேறு நல்ல விஷயங்களை தனது 42 நிமிட உரையில் தெளிவாக எடுத்து கூறி, நிறைவாக உலகமே ஒரு குடும்பம், இங்கே வேற்றுமையில் ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்பது பாரதம் உலகுக்கு அளிக்கும் செய்தி என வலியுறுத்தினார்.
மோகன் பாகவத் அவர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்த குழுக்களால் அவர் விடுத்த செய்தி மீது எந்த தவறான விமர்சனமும் முன் வைக்க முடியவில்லை. பன்முகத்தன்மைக்கு எதிரான ஏகத்துவம் பேசும், பிரிவினையை முன் வைக்கும் மிகச் சிலரைத் தவிர பெரும்பான்மை இந்தியர்களின் எண்ணங்களை கொள்ளை கொண்டது மோகன் பாகவத் அவர்களின் உரை. உரையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில முத்துக்கள், இங்கே நமது விஜயபாரதம் வாசகர்களுக்காக:
நாடுகள் வெறும் புவியியல் அமைப்புகள் அல்ல. ஒவ்வொரு நாட்டிற்கும் இந்தப் பிரபஞ்ச அமைப்பில், ஒரு குறிப்பிட்ட கடமை உள்ளது. ஸ்வாமி விவேகானந்தர் கூறியபடி, ஒவ்வொரு நாட்டிற்கும் உலகிற்கு வழங்க வேண்டிய ஒரு செய்தியும், நிறைவேற்ற வேண்டிய ஒரு பணியும், அடைய வேண்டிய ஒரு இலக்கும் உள்ளது.
நியூயார்க்கில் நடைபெறும் இந்த ஒன்றுகூடல் மிகவும் பொருத்தமானது. பாரதத்தின் நாக்பூரிலிருந்து இங்கு வந்து, இந்த நாளின் மகிழ்ச்சியையும், அதன் உணர்வையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி தருகிறது.
உலகில் இரண்டு விதமான மனப்பான்மைகள் இருக்கின்றன.
ஒன்று: “நாம் வாழ்வோம்; மற்றவர்களையும் வாழ விடுவோம்.”
மற்றொன்று: “நாம் வாழ்வோம்; ஆனால் எங்களுக்குக் கீழ்ப்படிபவர்களை மட்டுமே வாழ விடுவோம்.”
“எங்களுக்குக் கீழ்ப்படிந்தால் உங்களைப் பாதுகாப்போம்” என்று கூறுகிறார்கள். சமஸ்கிருதத்தில் பாதுகாப்பு ரக்ஷா எனப்படுகிறது. கீழ்ப்படிபவர்களை மட்டுமே பாதுகாப்பவர்கள், ராட்சஸர்கள் என்று அவர் குறிப்பிட்டார். இதற்கு மாறாக, ஒருவர் நமக்குக் கீழ்ப்படிகிறாரா, இல்லையா; நமது கருத்தை ஏற்றுக்கொள்கிறாரா, இல்லையா; நமக்குப் பயன்படுகிறாரா என்பவை எல்லாம் சிறிய விஷயங்கள்.
முக்கியமானது — நாம் அனைவரும் மனிதர்கள். வாழ்வைத் தக்கவைத்துக்கொள்ள நாம் ஒருவருடன் ஒருவர் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும்.
அனைவரையும் இணைக்கும் ஆத்ம தத்துவம். வெவ்வேறு உடல்கள், உடைகள், மொழிகள், வசனங்கள், வழிபாட்டு முறைகள் என அனைத்திலும் வேறுபாடுகள் இருந்தாலும், அவற்றின் உள்ளே அனைவரையும் இணைக்கும் ஒரு பொதுவான உண்மை இருக்கிறது. அதைத்தான் ஆத்மா (Atman) என்று கூறுகிறார்கள்.
ஒரு மாலையில் உள்ள பல மணிகள் வெவ்வேறாகத் தெரிந்தாலும், அவற்றை இணைப்பது ஒரே ஒரு நூல் தான். அதே போல, அனைவருக்குள்ளும் இருக்கும் ஆத்மா நம்மை ஒன்றுடன் ஒன்று இணைக்கிறது. மரணத்திற்குப் பின்னும் தொடரும் ஒன்று அது. உடல் இறக்கும்; ஆனால் ஏதோ ஒன்று தொடர்ந்து இருக்கிறது.
சிலர் அது Judgment Day வரை இருப்பதாக நம்புகிறார்கள். சிலர் அது பல பிறவிகளின் வழியாகத் தொடர்கிறது என்று நம்புகிறார்கள்.
எப்படியிருந்தாலும், கால வெள்ளத்தால் அழிக்க முடியாத ஏதோ ஒன்று நமக்குள் இருக்கிறது. அதனால் நாம் உலகைப் பல்வேறு தனித்தனி பொருட்களாகப் பார்த்தாலும், உண்மையில்: “நான் அவர்களுக்குள் இருக்கிறேன்; அவர்களும் எனக்குள் இருக்கிறார்கள். நாம் ஒருவருக்கொருவர் சொந்தமானவர்கள் என்பது நமது நம்பிக்கை”
பாரதத்தின் உலகளாவிய பணி, மனித வாழ்க்கையின் நோக்கம். இந்த உண்மையை அறிந்து கொள்வதும், அதை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதும் ஆகும். அதன் மூலம் தனிமனித விடுதலையையும், உலகத்தின் நன்மையையும் அடைய வேண்டும்.
இந்த அறிவை உலகிற்கு எடுத்துச் சென்று, அதை வெறும் பிரசங்கத்தின் மூலம் அல்லாமல், தங்களுடைய வாழ்க்கை மற்றும் செயல்களின் மூலம் காட்டுவது தான் பாரதத்தின் பணி. அதுவே பாரதத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தர்மம்.
தர்மம் என்றால் என்ன?
தர்மத்தை மதத்துடன் ஒப்பிடக் கூடாது. எது அனைத்தையும் ஒன்றிணைத்து, பிளவை ஏற்படுத்தாமல், சமநிலையைப் பேணி அனைத்தையும் தாங்கி வருகிறதோ, அதுவே தர்மம். அது ஒரு மதம் அல்ல. ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு முறை அல்ல. அது இந்தப் பிரபஞ்சத்தைத் தாங்கி நிற்கும் ஒழுங்கு. மனிதர்கள் வாழ்க்கையின் இருமைகளைக் கையாள உதவும் நெறி. அனைத்தையும் சமநிலையில் தாங்கி, அனைவரும் ஒரே நேரத்தில் முன்னேறுவதற்கான அடிப்படை. அந்த தர்மத்தை உலகிற்கு வழங்குவதே பாரதத்தின் கடமை.
கடமை என்பது பெற்றதைத் திருப்பிக் கொடுப்பது.
Father’s Day, Mother’s Day போன்ற நாட்களை நாம் கொண்டாடுவதன் நோக்கம், அவர்களிடம் நமக்குள்ள கடமையை நினைவுபடுத்திக் கொள்வதுதான்.
அதேபோல் சுற்றுச்சூழலிடமும், நமக்குக் கடமை இருக்கிறது.
நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும் பின்னால், எண்ணற்ற மனிதர்களின் உழைப்பு இருக்கிறது. நாம் உணவு உண்ண வேண்டுமென்றால் விவசாயம் நடைபெற வேண்டும். விவசாயிகள் உற்பத்தியை நிறுத்தி விட்டால் நாம் எதைச் சாப்பிடுவது?
நாம் அணியும் உடைகளுக்குப் பின்னால் பருத்தி விவசாயிகள், தொழிலாளர்கள், ஆலைகள் எனப் பலருடைய உழைப்பு உள்ளது.
“நாம் எல்லாவற்றையும் மற்றவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்கிறோம். எனவே நாம் திருப்பிக் கொடுக்க வேண்டும்.”
அமெரிக்காவில் வாழும் பாரத வம்சாவளியினர் முதலில் தங்களுடைய கர்ம பூமியான அமெரிக்காவிற்கு உரிய கடமையைச் செய்ய வேண்டும். அதன்பிறகு தங்களுடைய ஜென்ம பூமி ஆன பாரதத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், பாரதம் தங்களுக்கு அளித்துள்ள மதிப்புகள் மற்றும் பண்புகளுடன் அதைச் செய்ய வேண்டும் என்றார்.
உரையைக் கேட்ட பலர் ஆர்.எஸ்.எஸ் பற்றி தங்களுக்கு தகுந்த புரிதல் ஏற்பட்டது என்றும், ஒரு இந்தியராக, பாரதியாராக செய்ய வேண்டிய கடமை என்ன என்பதை புரிந்து கொண்டதாகவும் கருத்து தெரிவித்தனர்.
அமெரிக்க விஜயத்தைத் தொடர்ந்து கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கும் மோகன் பாகவத் அவர்கள் சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 