பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்து, மத்திய பிரதேசத்தில் வசிக்கும் ஹிந்துக்கள், தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
அண்டை நாடான பாகிஸ்தானில் சிறுபான்மையினராக வசித்த, ஹிந்து மதத்தை சேர்ந்த சில குடும்பத்தினர், பல ஆண்டுகளாக, மத்திய பிரதேச மாநிலம் இந்துார் அருகேயுள்ள பகுதிகளில் வசித்து வருகின்றனர். தற்போது இவர்களுக்கு இந்திய குடிஉரிமை வழங்கும் வகையில், குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக, மத்திய அரசுக்கு, அவர்கள் நன்றி தெரிவிப்பதற்கான நிகழ்ச்சி, இந்துாரில் நேற்று நடந்தது. இதில், பா.ஜ., செயல் தலைவர் ஜெ.பி.நட்டா பங்கேற்றார்.
அவருக்கு, பாக்.,கிலிருந்து வந்த ஹிந்துக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. அவர்கள், பாகிஸ்தானில் சிறுபான்மையினராக வசித்த நாங்கள், பல்வேறு துன்புறுத்தலுக்கு ஆளானோம். ஹிந்துக்களை கட்டாய மத மாற்றம் செய்கின்றனர். ஹிந்து மதத்தை சேர்ந்த பெண்களை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரமும் செய்கின்றனர். அங்கிருந்து அகதிகளாக வந்த எங்களுக்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, குடியுரிமை வழங்கியுள்ளது. இதற்காக, பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் நன்றி தெரிவிக்கிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.