பல்லியும் திருமணமும்

அந்த சுவற்றின் மேல் ஒட்டியிருந்த பல்லிக்கு அகோரப் பசி.. இன்று சாப்பிட ஒரு சிறு விட்டில் பூச்சிகூட இல்லையே என்ற ஏக்கம்.. வயிற்றைக் கிழிக்கும் பசியோடு

அது அங்கும் இங்கும் நோட்டமிட்டது. அப்போது சுவற்றில் தூரத்தில் ஒரு பூச்சி வந்து அமர்ந்தது.

ஆஹா! அற்புதமான இரை என்று அகமகிழ்ந்த பல்லி, அந்த இரையை நோக்கி அலுங்காமல் சென்றது. அந்த பூச்சியோ எதையும் அறியாமல், வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தது. பல்லி நாக்கை நீட்ட முற்பட்டபோது, சட்டென்று  வேறு எங்கிருந்தோ ஒரு பல்லி வந்து இரையைக் கவ்விக் கொண்டுபோனது..

அடடா.. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என ஆத்திரங்கொண்ட முதல் பல்லி, கோபமாகக் கத்திக் கொண்டே, இரண்டாவது பல்லியை விரட்ட ஆரம்பித்தது.

இதைப் பார்த்து சுதாரித்துக் கொண்ட இரண்டாம் பல்லி முன்னோக்கி வேகமாக ஓடியது. முதல் பல்லி இன்னும் வேகமெடுத்து விரட்ட, இரண்டாம் பல்லியும் சளைக்காமல் ஓடியது. ஓடிக்கொண்டிருந்த இரண்டாம் பல்லியின் கால் நழுவவே, “பொத்”தென்று கீழே விழுந்தது.

முதல் பல்லியும் விடவில்லை… அதே இடத்தில் விழுந்து, விடாமல் விரட்டியது. தொடர்ந்து ஓடிய இரண்டாம் பல்லி, ஒரு சந்துக்குள் ஒளிந்தது.

விரட்டிக் கொண்டிருந்த முதல் பல்லிக்கு அருகே இன்னோர் பூச்சி அமர்ந்தது. அந்த பூச்சியை “ஸ்வாஹா” செய்து காலை உணவை முடித்தது முதல் பல்லி.

அப்போது, அந்த வீட்டில் இருந்த மனிதர்கள் பேசிக் கொண்டனர், “நான்தான் அப்பவே இந்த ஜாதகம் வேண்டாம்’னு சொன்னேன். அப்பவே கௌளி கத்துச்சு. அதையும் மீறி நீங்க எடுத்தீங்க. இப்ப பாருங்க ஒண்ணுக்கு ரெண்டு கௌளி  நம்ம மேலயே வந்து விழுகுது. இது பயங்கர அபசகுணம்.அதனாலதான் சொல்றேன் இந்த ஜாதகம் வேண்டாம். வேற ஜாதகம் பாருங்க”. என்று.

இப்படித்தான் ஒரு சிறு பூச்சி சுவற்றில் உட்கார்ந்ததற்கும், எங்கோ நடைபெறப் போகும் திருமணம் நிற்பதற்கும் ஒரு சம்பந்தம் உண்டாகிறது!!!