கட்டுமான தொழிலை நம்பி, நேரடியாக பல லட்சம் பேர் வாழ்ந்து வருகின்றனர். ரியல் எஸ்டேட் கட்டுமானத் துறைகளை நம்பி 250க்கும் மேற்பட்ட தொழில்கள் உள்ளன. கொரோனா தளர்வுகளை அடுத்து மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பத் துவங்கியுள்ள நிலையில், தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து கட்டுமானப் பொருட்களும் விலை உயர்ந்துவிட்டன. இவற்றின் விலை குறைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது கானல் நீராகவே உள்ளது. தற்போது சிமென்ட் மூட்டை, 480 முதல் 520 ரூபாய் வரையும், இரும்பு விலை 76 ஆயிரம் ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இதேபோல எம் சாண்ட், மணல், ஹார்டுவேர், எலக்ட்ரிக்கல் பொருட்கள் என அனைத்து பொருட்களின் விலையும் 20 முதல் 50 சதவீதம்வரை உயர்ந்துள்ளது. இதனால், கட்டுமான விலை சதுர அடிக்கு, ரூ. 300 முதல், 500 வரை அதிகரித்துள்ளது. இது, ரியல் எஸ்டேட் துறையினர், கட்டுமானத் தொழிலாளர்கள், வீடு வாங்கும் எண்ணம் கொண்ட மக்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் கடும் அதிர்ச்சியையும் கவலையையும் அதிகரித்துள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும்தான் சிமெண்ட் இந்த விலை விற்கிறது. ஆனால் மற்ற மாநிலங்களில் இவற்றின் விலை 260 முதல் 350 வரையே இன்றும் உள்ளன என்பது சற்றே சிந்திக்கத்தக்கது.