‛டீப் பேக்’ வீடியோக்கள் விவகாரம் தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை நவ.,24ல் அவசர ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளது. ஆலோசனைக் கூட்டத்தில் மெட்டா, கூகுள் நிறுவன அதிகாரிகள் பங்கேற்க அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஒருவரது ஆபாசமான வீடியோவில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை மட்டும் ‘ஏஐ’ எனப்படும் செயற்கை தொழில்நுட்பம் மூலம், ‘மார்பிங்’ செய்து சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இதற்கு பல சினிமா பிரபலங்களும் கண்டனங்களைத் தெரிவித்தனர். வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகைகள் உள்ளிட்ட சிலரின் முகங்களை போலியாக சித்தரித்து பரப்பப்படும் ‘டீப் பேக்’ வீடியோக்கள் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்து இருந்தார். ‘தொழில்நுட்பம் பொறுப்புடன் கையாளப்பட வேண்டும் எனவும், ஊடகங்கள் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’ என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்நிலையில் ‛டீப் பேக்’ வீடியோக்கள் விவகாரம் தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை நவ.,24ல் அவசர ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளது. ஆலோசனைக் கூட்டத்தில் மெட்டா, கூகுள் நிறுவன அதிகாரிகள் பங்கேற்க அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் பொது பயன்பாட்டுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.