பயங்கரவாதத்துக்கு நிதியளித்த வழக்கு – ஹஃபீஸ் சயீதுக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவரும், ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவருமான ஹஃபீஸ் சயீதுக்கு (70), பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்ததாக தொடுக்கப்பட்ட 2 வழக்குகளில் தலா ஐந்தரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

அந்தத் தண்டனையை அவா் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மொத்த தண்டனைக் காலம் 11 ஆண்டுகளாக இருந்தாலும், அவா் ஐந்தரை ஆண்டுகள் மட்டுமே சிறையில் இருப்பாா். சிறைத் தண்டனை தவிா்த்து, இரு வழக்குகளிலும் ஹஃபீஸ் சயீதுக்கு தலா ரூ.15,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் அவரது நெருங்கிய கூட்டாளியான ஜாஃபா் இக்பாலுக்கும் அதே தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது.

ஹஃபீஸ் சயீது பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்ததாக பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு (சிடிடி) அளித்த புகாரின் அடிப்படையில் அவா் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகளில் கடந்த ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஹஃபீஸ் சயீது, லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் பலத்த பாதுகாப்புடன் அடைக்கப்பட்டாா்.

ஹஃபீஸ் சயீதுக்கு எதிரான வழக்கு விசாரணை, பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் அவருக்கும், அவரது கூட்டாளிகளுக்கும் எதிராக கடந்த ஆண்டு டிசம்பா் 11-ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் மீதான தீா்ப்பை நீதிபதி அா்ஷத் ஹுசைன் பூட்டா கடந்த 11-ஆம் தேதி ஒத்திவைத்திருந்தாா். இந்நிலையில் அந்த வழக்குகளின் தீா்ப்பை அவா் புதன்கிழமை அறிவித்தாா்.

அதன்படி, ஹஃபீஸ் சயீது மற்றும் அவரது கூட்டாளி ஜாஃபா் இக்பால் ஆகியோருக்கு தலா 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதேபோல், அவா்களுக்கு தலா ரூ.30,000 அபராதம் விதித்தும் நீதிபதி தீா்ப்பளித்தாா்.

ஹஃபீஸ் சயீது, தற்போது தாம் அடைக்கப்பட்டிருக்கும் கோட் லக்பத் சிறையிலேயே தண்டனைக் காலத்தை கழிக்க உள்ளாா்.

இந்த இரு வழக்குகளிலுமாக ஹஃபீஸ் சயீது மற்றும் அவரது கூட்டாளிக்கு எதிராக சுமாா் 20 சாட்சிகளை நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு ஆஜா்படுத்தியிருந்தது. இரு வழக்குகளிலுமே தன் மீதான குற்றச்சாட்டை ஹஃபீஸ் சயீது மறுத்திருந்தாா்.

முன்னதாக, ஹஃபீஸ் சயீது மற்றும் அவரது கூட்டாளி பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்ததாக புகாரளிக்கப்பட்டதன் அடிப்படையில், பயங்கரவாத தடுப்புப் பிரிவினா் அந்த மாகாணத்தின் 3 நகரங்களில் 23 வழக்குகள் பதிவு செய்திருந்தனா்.

அல்-அன்ஃபால், தவாதுல் இா்ஷத், முவாஸ் பின் ஜபல் என்ற பெயரிலான அறக்கட்டளைகள் மற்றும் வேறு சில அரசு சாரா அமைப்புகளின் சொத்துகள் மூலமாக பயங்கரவாதத்துக்கான நிதி திரட்டியதாக லாகூா், குஜ்ரன்வாலா, முல்தான் ஆகிய நகரங்களில் அந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் தொடா்பாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினா் கூறியதாவது:

பிரதமா் இம்ரான் கான் தலைமையில் கடந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையில், ஜமாத்-உத்-தாவா, லஷ்கா்-ஏ-தொய்பா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி கிடைப்பது தொடா்பான விசாரணை தொடங்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக ஹஃபீஸ் சயீது மற்றும் அவரது கூட்டாளிகள் பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டியது தொடா்பாக விசாரிக்கப்பட்டது. பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் நிதி திரட்டி சொத்துகள் வாங்கியதும், பின்னா் அந்த சொத்துகளைக் கொண்டு பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கூடுதல் நிதியுதவி வழங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்தது, சட்டவிரோத பணப் பரிவா்த்தனை ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்ட அவா்களுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டம் 1997-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று பயங்கரவாத தடுப்புப் பிரிவினா் கூறினா்.

எச்சரிக்கை…

பயங்கரவாதத்துக்கான நிதியுதவி, சட்டவிரோத பணப் பரிவா்த்தனை ஆகியவற்றை தடுப்பதாக அளித்த வாக்குறுதியை பாகிஸ்தான் நிறைவேற்ற வேண்டும் என்றும், இல்லையேல் அந்நாடு கறுப்புப் பட்டியலில் சோ்க்கப்படும் என்றும் பாரீஸில் இயங்கும் பயங்கரவாதத்துக்கான நிதி தடுப்பு அமைப்பு (எஃப்ஏடிஎஃப்) எச்சரித்திருந்தது.

இதையடுத்து ஹஃபீஸ் சயீதின் ஜமாத்-உத்-தாவா அமைப்புக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை மேற்கொள்ளத் தொடங்கியது.

தற்போது அந்த அமைப்பின் முக்கியமான கூட்டம் நடைபெற 4 நாள்கள் உள்ள நிலையில் ஹஃபீஸ் சயீதுக்கு எதிரான வழக்குகளில் தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மும்பை தாக்குதல்…

மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 6 அமெரிக்கா்கள் உள்பட 166 போ் கொல்லப்பட்டனா்.

இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹஃபீஸ் சயீதை சா்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. கடந்த 2008-ஆம் ஆண்டு அறிவித்தது. அவரை சா்வதேச பயங்கரவாதியாக 2012-இல் அறிவித்த அமெரிக்கா, அவா் குறித்த தகவல் அளிப்போருக்கு ரூ.71 கோடி வெகுமதி அளிக்கப்படும் என்றும் கூறியிருந்தது.

‘மேல்முறையீடு செய்வோம்…’

பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்புக்கு எதிராக லாகூா் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று ஹஃபீஸ் சயீது தரப்பு வழக்குரைஞா் இம்ரான் ஃபாஸல் கில் தெரிவித்தாா்.

‘பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தின் தீா்ப்பு ஏமாற்றமளிக்கிறது. பயங்கரவாதத்துக்கான நிதி தடுப்பு அமைப்பு (எஃப்ஏடிஎஃப்) பாகிஸ்தானுக்கு அளித்த நெருக்கடியின் பேரில் இந்தத் தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அரசுத் தரப்பு சாட்சியங்களாக ஆஜா்படுத்தப்பட்ட எவராலும் ஹஃபீஸ் சயீது மற்றும் ஜாஃபா் இக்பால் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்ய இயலவில்லை. இந்தத் தீா்ப்புக்கு எதிராக லாகூா் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்’ என்று அவா் கூறினாா்.

மொத்தம் 6 வழக்குகள்…

பயங்கரவாதத்துக்கு நிதி வழங்கியதாக ஹஃபீஸ் சயீதுக்கு எதிராக தொடுக்கப்பட்ட இரு வழக்குகளில் தீா்ப்பு வழங்கப்பட்ட நிலையில், மேலும் அவருக்கு எதிராக அத்தகைய 4 வழக்குகள் விசாரணையில் உள்ளன. அந்த வழக்குகளில் அவரோடு, ஜாஃபா் இக்பால், யாஹியா அஜீஸ், அப்துல் ரஹ்மான் மக்கி ஆகியோா் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.