பணியின்போது தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பது தமிழகத்தில் அதிகரிப்பு

தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் சேலத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய தேதியில் சம்பளம் வழங்குவதில்லை. இது தவிர்க்கப்பட வேண்டும். அதேபோல, சீருடை, பாதுகாப்பு உபகரணங்களை ஒப்பந்ததாரர்கள் 10 நாட்களுக்குள் வழங்க வேண்டும். அடிப்படை உரிமைகளை 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.
கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் மாநகராட்சி நிர்வாகமே ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதுபோல, தமிழக அரசும் நேரடியாக சம்பளம் வழங்க வேண்டும். இதன் மூலம் தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கான பிரச்சினை 60 சதவீதம் வரை குறையும்.தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்புக்காக தேசிய ஆணையம் இருப்பதுபோல, மாநில ஆணையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பணியின்போது தூய்மைப் பணியாளர்கள் அதிக அளவில் உயிரிழக்கின்றனர். 2022 முதல் நிரந்தர தூய்மைப் பணியாளர் ஓய்வுபெற்றால், அந்த இடத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கலாம் என்ற உத்தரவை தமிழகஅரசு திரும்பப் பெற வேண்டும். மேலும், தூய்மைப் பணியாளர்கள் வேறு தொழிலுக்குச் செல்ல விருப்பப்பட்டால், அவர்களுக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும். அதேபோல, மாநகராட்சியில் பணியாற்றும் படித்த தூய்மைப் பணியாளர்களுக்கு, அலுவலக உதவியாளர் மற்றும் வரி வசூலிப்பவர் போன்ற பதவிகளை வழங்க வேண்டும். இவ்வாறு ஆணைய தலைவர் வெங்கடேசன் கூறினார்.