படைவீரர்களைப் பாராட்டி மகிழ்ந்த சென்னை படைப்பாளர்கள்

 

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையைப் பாராட்டும் வகையில், ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர்கள் சங்கமம்’ நிகழ்ச்சி சென்னையில் ஜுன் 15 ஆம் தேதி மாலை நடைபெற்றது,

இந்நிகழ்வில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சார்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் ஆரம்பத்திலேயே, காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் யுத்த நடவடிக்கை ஆகியவற்றிலும் அண்மையில் நிகழ்ந்த விமான விபத்திலும் உயிரிழந்த அனைவருக்கும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

படைப்பாளர்கள் சங்கமம் ஏன் நடத்தப்படுகிறது என்பது குறித்து ஒரே நாடு பத்திரிகை ஆசிரியர் நம்பி நாராயணன் எடுத்துரைத்தார். பஹல்காம் படுகொலைக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக பாரத அரசு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கியவுடன், உள்நாட்டில் எழுத்தாளர்கள் என்ற போர்வையில் தேசவிரோதமாக சிலர் தமிழகத்தில் அறிக்கை வெளியிட்டதை சுட்டிக் காட்டிய அவர், அந்தக் களங்கத்தைப் போக்கவே, கோவையைத் தொடர்ந்து சென்னையில் ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர்கள் சங்கமம்’ நடத்தப்படுகிறது என்றார்.

தலைமையுரை ஆற்றிய நல்லி குப்புசாமி செட்டி, படைவீரர்கள் எல்லையில் கண் துஞ்சாது காவல் காப்பதால் தான் நாம் நிம்மதியாக வாழ முடிகிறது என்றார்.

வாழ்த்துரை வழங்கிய கிழக்கு பதிப்பகத்தின் நிறுவனர் பத்ரி சேஷாத்ரி, ஆபரேஷன் சிந்தூர் சிறப்பாக வெற்றி பெற, கடந்த பத்தாண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட “ஆத்ம நிர்பர்” செயல்பாடுகளே காரணம்; பாரதத்தில் தயாரான ஆயுதங்களின் வலிமையை உலகம் இப்போது உணர்ந்து கொண்டுவிட்டது என்றார்.

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மேஜர் மதன்குமார் சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில், ஆபரேஷன் சிந்தூர் எவ்வாறு துல்லியமாக வடிவமைக்கப்பட்டு, பாகிஸ்தான் குடிமக்கள் பாதிக்கப்படாமல், பயங்கரவாதிகளின் முகாம்கள் மட்டும் நிர்மூலம் செய்யப்பட்டன என்பதை விளக்கமாக எடுத்துரைத்தார்.

அடுத்து படைப்பாளர்கள் சங்கமம் சார்பில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றை பத்திரிகையாளரும் தேசிய சிந்தனைப் பேரவையின் மாநில அமைப்பாளருமான வமு.முரளி முன்மொழிந்தார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பாராட்டுவதாகவும், இதற்காக இன்னுயிர் ஈந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும் முதல் தீர்மானம் குறிப்பிட்டது. பஹல்காம் படுகொலை நிகழ்ந்த ஏப்ரல் 22ஆம் தேதியை தேசிய சுற்றுலா தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்; அந்த நாளில் காஷ்மீர் சங்கமம் நிகழ்வை மத்திய அரசு பஹல்காமில் நடத்த வேண்டும் என்று இரண்டாவது தீர்மானம் வேண்டுகோள் விடுத்தது.

தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டதை  அடுத்து, ஓய்வுபெற்ற  முப்படை வீரர்கள் 6 பேருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.

மூத்த பத்திரிகையாளர் பத்மன் நிகழ்வு களைத் தொகுத்து வழங்கினார். தொழிலதிபர் ஜவஹர் நன்றி கூறினார். தேசிய கீதத்துடன் விழா நிறைவு பெற்றது.