நீலகிரி மாவட்டத்தை புரட்டி எடுக்கும் கன மழை – அவலாஞ்சியில் ஒரே நாளில் 91 செ.மீ. மழை பதிவு

பொள்ளாச்சியில் காட்டாற்று வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன

வரலாறு காணாத வகையில், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 91 செ.மீ. மழை பெய்துள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு தொடக்கத்தில் சரிவர பெய்யாத நிலையில், கடந்த ஒரு வாரமாக தீவிரமடைந்தது. இடைவிடாமல் பெய்து வருவதால், 1௦ ஆண்டு களுக்குப் பிறகு நீலகிரியில் அதிக அளவு மழை பதிவானது. தமிழகத்திலேயே நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில்தான் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது.

ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் அங்கு அதி கனமழை பெய்து வருகிறது. இந்த வார இறுதி வரை மழை தொடரும். நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 230 செ.மீ. மழை பதிவாகி யுள்ளது.  நீலகிரி மாவட்டத்திலுள்ள 6 வட்டங்களில், 4 வட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் 233 பகுதிகள் பாதிக்கப்பட்டவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் வழக்கத்தைவிட 25 சதவீதம் கூடுதலாக மழை பெய்து கொண்டிருக்கிறது.

பொள்ளாச்சி சர்க்கார்பதி மின்உற்பத்தி நிலையம் அருகே கொழும்பன் மலை அடிவாரத்தில் நாகூர் ஊத்து-2 என்னும் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் 22 வீடுகளில் 60-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கொழும்பன் மலையில் கனமழை கொட்டித்தீர்த்தது. மலையில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

காட்டாற்று வெள்ளத்தில் நாகூர் ஊத்து கிராமத்தில் இருந்த 22 வீடுகளில் 19 வீடுகள் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டன.

155 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது, 26 நிவாரண மையங்கள் தொடங்கப்பட்டு, அதில் 1,706 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மழை பாதிப்பில் இருந்து 2,400 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.