நாட்டின் மாம்பழ உற்பத்தி 14 சதவீதம் அதிகரிக்கும்

இந்தியாவின் ஒட்டுமொத்த மாம்பழ உற்பத்தி, நடப்பு ஆண்டில் 14 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 240 லட்சம் டன்னாக உயரும் என, மத்திய துணை வெப்ப மண்டல தோட்டக்கலை இயக்குனர் தாமோதரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் மேலும் கூறியிருப்பதாவது:

ஏப்ரல் – மே மாதங்களில் அனல் காற்று அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருப்பது, மாம்பழ விளைச்சலில் தாக்கத்தை ஏற்படுத்தாது. மே மாதத்தில் விவசாயிகள் அதிக பழங்கள் உதிர்வதைத் தடுக்க, நீர் பாசனத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள கோடைகால முன்னறிவிப்பில், வழக்கமான இரண்டு முதல் நான்கு நாட்களுக்கு பதிலாக, இந்த ஆண்டு, 10 முதல் 20 நாட்களுக்கு கடுமையான அனல் காற்று இருக்கும் என தெரிவித்துள்ளது. உகந்த வானிலை காரணமாக, மாம்பழம் பூப்பது கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. மகரந்த சேர்க்கை இயல்பானது. ஆகையால், காய்கள் காய்க்கத் துவங்கி விட்டன. சாதாரண அனல் காற்று விளைச்சலை பாதிக்காது. ஆனால், மறைமுகமாக பயிருக்கு உதவும். தற்போது மாம்பழம் பயிரிடுவதற்கான வாய்ப்புகள் நன்றாக உள்ளன.

கடந்த 2022 – 23ம் பயிர் ஆண்டில், 210 லட்சம் டன்னாக இருந்த மொத்த உற்பத்தி, 2023 – 24ல், 240 லட்சம் டன்னாக அதிகரிக்கலாம். தென்னிந்தியாவில் மாம்பழ உற்பத்தி அமோகமாக உள்ளது. இது நாட்டின் மொத்த உற்பத்தியில், 50 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. கடந்த ஆண்டு பருவநிலை மாற்றத்தால், தென் மாநிலங்கள், 15 சதவீதம் இழப்பை சந்தித்தன. எப்படியாயினும், இந்த ஆண்டு நிலைமை சிறப்பாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

உலக மாம்பழ உற்பத்தியில், 42 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது இந்தியா