நாடாளுமன்றம், பேரவையில் பேச, வாக்களிக்க எம்.பி., எம்எல்ஏக்கள் லஞ்சம் வாங்குவது குற்றமே: உச்ச நீதிமன்றம்

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் வாக்களிப்பதற்கும், பேசுவதற்கும் லஞ்சம் வாங்குவது குற்றமே. அதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் தண்டனைக்கு உரியவர்கள் என்று உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 1993-ம் ஆண்டில் மத்தியில் ஆட்சியில் இருந்த பி.வி.நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்க்கும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சி உறுப்பினர்கள், லஞ்சம்வாங்கிக்கொண்டு, நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர். இது ஓராண்டுக்கு பிறகு தெரியவந்தது. இதுகுறித்த விசாரணையை சிபிஐ 1996-ல் தொடங்கியது.
இதுதொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசனஅமர்வு கடந்த 1998-ம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது. அதில்,‘நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பணம் வாங்கிக்கொண்டு பேசுகிற, வாக்களிக்கிற எம்.பி., எம்எல்ஏக்கள் மீது வழக்கு தொடர முடியாது. அவர்களுக்கு சட்ட பாதுகாப்பு உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், 25 ஆண்டுகளுக்கு பிறகு அந்த தீர்ப்பை7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு நேற்று ரத்து செய்துதீர்ப்பு வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
பி.வி.நரசிம்ம ராவ் வழக்கு தொடர்பான தீர்ப்பில் நாங்கள் உடன்படவில்லை. அதை ஏற்க இயலாது. நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் பேசுவதற்கும், வாக்களிப்பதற்கும் லஞ்சம் வாங்கும் உறுப்பினர்கள், விசாரணையில் இருந்து விலக்கு கோர முடியாது. அதற்கு அவர்கள் லஞ்சம் வாங்குவது பொது வாழ்க்கையில் நேர்மையை சீர்குலைக்கும் செயல். கடந்த 1998-ம் ஆண்டு பி.வி.நரசிம்ம ராவ் வழக்கில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பின் விளக்கம், அரசியலமைப்பின் 105 மற்றும்194 ஆகிய பிரிவுகளுக்கு முரணானது. எனவே, அந்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. லஞ்சம் பெறுவது என்பது நாடாளுமன்ற சிறப்பு உரிமைகளால் பாதுகாக்கப்பட்டது அல்ல.நாடாளுமன்ற சலுகையை பயன்படுத்தி, எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டு சட்டப் பாதுகாப்பு பெறுவதை அல்லது கோருவதை அனுமதிக்க முடியாது. இது அவர்களது தனிப்பட்ட குற்றம். இந்திய நாடாளுமன்றத்தின் ஜனநாயக செயல்பாட்டை லஞ்சம், ஊழல் ஆகியவை அழிக்கின்றன.
எம்எல்ஏக்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு மாநிலங்களவை தேர்தலில் வாக்களித்தது உறுதியானால் அவர்கள் மீதும் ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், கர்நாடகாவை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி நடந்தமாநிலங்களவை தேர்தலில், மாற்றுக் கட்சி வேட்பாளருக்கு வாக்களித்தனர். உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பின்படி, கட்சி மாறி வாக்களித்த எம்எல்ஏக்கள் மீது புகார் அளிக்கப்பட்டு, லஞ்ச குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பிரதமர் வரவேற்பு: உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில், ‘நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பேசவோ, வாக்களிக்கவோ லஞ்சம் வாங்கிய எம்.பி.,எம்எல்ஏக்கள் இனிமேல் விசாரணையில் இருந்து தப்பிக்க முடியாது. அவர்களுக்கு எந்தவிதமான சட்ட பாதுகாப்பும் இல்லை’ என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது, பாரட்டத்தக்கது. நாட்டில் தூய்மையான அரசியலை உறுதிசெய்து, மக்களின் நம்பிக்கையை ஆழப்படுத்த இந்த தீர்ப்பு பெரிதும் உதவும்’ என்று தெரிவித்துள்ளார்.