நாம் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் மற்றவர்கள் மனதில் விதைக்கும் விதைகள் போன்றவை. எதனை நாம் விதைக்கிறோமோ அதனையே நாம் அறுவடை செய்வோம்.
ஆலயம் ஒன்றில் லட்சார்ச்சனை..
சுக்ல யஜூர்வேத பாராயணம்…
கோடி அர்ச்சனை..
என்றெல்லாம் ஜெபங்களுக்கு ஏற்பாடாகி மக்கள் அவற்றில் ஒன்றி ஊர் நன்மைக்காகப் பாடுபடுவதைப் பார்க்கிறோம்.
ஒரு மந்திர ஜெபம் சித்தியாகி பலன் தர வேண்டும் என்றால் அதற்கு குறைந்த பட்சம் லட்சம் உரு ஏற்ற வேண்டும். நவக்ரஹ யாகங்கள், தன்வந்த்ரியாகம் போன்றவை எவ்வளவுக்கெவ்வளவு ஆவர்த்தி ஜெபிக்கிறோமோ/ஆஹுதிகள் மேற்கொள்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு ஊருக்கும் நாட்டுக்கும் நல்லது. கந்த சஷ்டி கவசத்தில் கூட சொல்லப்பட்டிருக்கும் : ….”காலைமாலை கருத்துடன் நாளும்…”
தமிழக மக்கள் தொகை 7 கோடிக்கு மேல்
இந்திய மக்கள் தொகை 130 கோடிக்கு மேல்
ஒரே நேரத்தில் நமது நாட்டில் பல கோடி பேர் அந்த ராமநாமம் போன்ற பெயரை அடிக்கடி உச்சரிக்கிறோமோ அதற்கு வித விதமாக பல கோடி உரு கொடுத்து அதை ஆராதிக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு இராமபிரான் அருள்மழை பொழியும் நமக்கு.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பெயர் வைத்து அழைக்கிறோம் யாராவது ஒரு புது நபர் நீங்கள் வசிக்கும் தெருவில் வந்து உங்கள் பெயர் ராமனோ கிருஷ்ணனோ..
அப்பெயரைச் சொல்லி அழைத்தால் உடனே நீங்கள் ஓடி வந்து யார் உங்களை அழைத்தார்கள் என்று பார்ப்பீர்கள் அவரிடம் சென்று எதற்காக என்ன காரணத்திற்காக என்னை அழைத்தீர்கள் என்றும் விசாரிப்பீர்கள்.
கொஞ்சம் கற்பனை செய்யுங்கள் நண்பர்களே!அதனால்தான் இந்துக் குடும்பங்கள் பலவற்றில் இறைவன் /இறைவி பெயரை வீட்டுக் குழந்தைகளுக்குச் சூட்டி..ஆபரணங்களையும் சூட்டி இறைபெயர் அதிர்வலைகளாக என்றும் அதிர அழைக்கிறார்கள்.
லட்சுமி என பெயர் வைத்துக் கூப்பிட்டுப் பாருங்கள். அதை நாம் திரும்பத் திரும்ப பெயர் குறிப்பிட்டு சொல்லும் போது அந்தப் பெயருக்குச் சொந்தமான லட்சுமி கடாட்சம்மிகு அஷ்ட ஐஸ்வர்யமிகு அதிர்வலைகள் யாரெல்லாம் தன் பெயரைச் சொல்லி அழைக்கிறார்களோ அவர்களைத் தேடி வரும்.
தத்வமஸி நீ அதுவாகிறாய்
ஒலி அலைகள் சாதாரணமானவை அல்ல. அதை நல்ல அதிர்வலைகளாக மாற்றும் அதிகாரம் நம் வாயிலும் கையிலும் தான் இருக்கிறது. சித்திரமும் கைப்பழக்கம்..
நல்வழியும் நாப்பழக்கம்..
வைரஸ் தன்னை வாரிப் பரப்பி வரும் இந்தப் பொல்லாத் தருணத்தில் உலகம் உய்ய நல்ல விதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து விதைப்போம்!
நல்ல பயிர்களை அறுவடை செய்வோம்! எதிர்கால சந்ததி நம்மை வாழ்த்தட்டும்…!!