நம் உலகம், நம் குடும்பம், நாம் ஹிந்து

தமிழகத்தில் 2026 ஏப்ரல் நிலவரப்படி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எல்பிஜி (Indane) வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது விநியோகம் 70% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் சப்ளை தங்கு தடை இன்றி நடைபெற வணிக உபயோக சிலிண்டர் சப்ளை நிறுத்தப்பட்டிருந்தது. அதனால் குடும்பங்கள் பயன் பெற்றன.
ஆனால் வணிக உபயோக சிலிண்டர் சப்ளை தற்காலிக நிறுத்தத்தால் தஞ்சை மாவட்ட வாழை சாகுபடியாளர்களான விவசாயிகள் பாதிக்கப்பட்டார்கள். எப்படி? வணிக உபயோக சிலிண்டர் கட்டுப்பாட்டால் உணவகங்கள் தங்கள் வணிகத்தின் அளவை குறைத்தன. அதனால் ஹோட்டல்கள் வாழையிலை கொள்முதல் செய்வதை குறைத்தன. ஒரு கணக்கின்படி நாள் ஒன்றுக்கு 50 லட்சம் இலைகள் அந்த மாவட்டத்திலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வந்த நிலையில், வெறும் 15 லட்சம் இலைகளே விலை போனதாக கூறப்பட்டது. இலை தேக்கத்தால் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. அது மட்டும் அல்ல, வாழைப்பழ சாகுபடியில் முன்னணி வகிக்கும் தமிழகம், ஈரான் போரால் வளைகுடா நாடுகளுக்கு பழ ஏற்றுமதி செய்வது முற்றிலுமாக நின்று போனது. இதுவும் விவசாயிகளின் வருமானத்தை பாதித்தது.
இது குறித்து வெளியாகும் செய்திகளிலிருந்து, எங்கோ நடக்கும் போர் நம்மூர் விவசாயி வயிற்றில் அடிக்கும் விபரீதத்தை மக்கள் உணர முடிந்தது. தமிழக விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கச் செய்வதில் தேர்தலுக்குப் பிறகாவது புதிய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது.
முக்கியமாக, உலகமே நமக்கு ஒரு குடும்பம், ஸர்வே பவந்து சுகினஹ, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை… உள்ளிட்ட தொன்மையான நமது சனாதன தர்ம கருத்துக்கள் எவ்வளவு பொருள்பொதிந்தவை, என்பது இந்த சந்தர்ப்பத்தில் நிரூபணம் ஆகிறது. இது வெறும் சப்ளை செயின் மீட்டெடுப்பு என்ற மேம்போக்கான மேற்கத்திய சங்கதி அல்ல. நூற்றுக்கணக்கான நாடுகளுக்கு தடுப்பூசி அனுப்பி உயிர்களை காத்தது போல போரால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பாரத மாணவர்கள் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் நாடு திரும்ப செய்திருப்பது மத்திய அரசின் திறன்மிக்க நிர்வாகம் மட்டுமல்ல, அந்தந்த நாடுகளின் அரசுகளுடனும் மக்களுடனும் பாரதத்தின் சனாதன தர்மம் கொண்டுள்ள தொப்புள்கொடி உறவின் புரிதலாலும்தான். வர வர சமுதாயத்தில் இது உணரப்படுவது அதிகரித்து வருகிறது.