பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்ட்ரீய ஜனதா தளம் – காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்கு, கூட்டணி அரசில் அமைச்சராக இருந்த, முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சியின் மகன் சந்தோஷ் குமார் சுமன், சமீபத்தில் தன் பதவியை ராஜினாமா செய்தார். இக்கட்சிக்கு, நான்கு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இதையடுத்து, முதல்வர் நிதிஷ் குமார் அரசுக்கு அளித்த வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக, மாநில கவர்னர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து, சந்தோஷ் குமார் சுமன் உள்ளிட்டோர், இரு நாட்களுக்கு முன் கடிதம் அளித்தனர். இந்நிலையில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை, புதுடில்லியில் உள்ள அவரது வீட்டில் ஜிதன் ராம் மஞ்சி சந்தித்து பேசினார்.
இதன் பின், ஜிதன் ராம் மஞ்சி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம். இது குறித்து தான், உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் விவாதித்தோம்.லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை.அதை விவாதிப்பதற்கான நேரமும் இது கிடையாது.தே.ஜ., கூட்டணி வெற்றிக்கு அயராது உழைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.