நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக விரைவில் தேர்வாக இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன், ஒரு தமிழராக நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கவுள்ளார். இதுவரை இப்பொறுப்பில் இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக் குறைவால் பதவி விலகியதால், வரும் செப். 9ம் தேதி துணை ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ஆர், மிகப் பெரும்பான்மை வலுவுடன் வெல்லக் காத்திருக்கிறார்.
திருப்பூரில் உள்ள கே.எஸ்.சி. அரசு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி
யில் எஸ்.எஸ்.எல்.சி. படித்தபோது நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலில் ஸ்தாபன காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிட்டு மாணவர் தலைவராக வென்றவர், சி.பி.ஆர். அதற்கு முன்னரே ஆர்.எஸ்.எஸ். தொடர்புடன் ஷாகா செல்லத் தொடங்கி இருந்தார்.
1957, அக்டோபர் 20ம் தேதி, பிறந்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன். பெற்றோர்: சி.கே.பொன்னுசாமி- – – –ஜானகி. திருப்பூர் அருகிலுள்ள சந்திராபுரம் கிராமம் தான் இவர்களது பூர்வீகம். விவசாயக் குடும்பம். தந்தை எல்.ஐ.சி. முகவராகவும் இருந்தார். கோவை தொகுதி எம்.பி.யாக (காங்கிரஸ்) இருமுறை இருந்த சி.கே.குப்புசாமி இவரது பெரியப்பா. குடும்பமே காங்கிரஸ் குடும்பம். அந்தக் காலத்தில் சிறந்த தத்துவ ஞானியாக அறியப்பட்ட, பின்னாளில் துணை ஜனாதிபதியான சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் மீதான பற்றில்தான், தங்கள் மகனுக்கு இவரது பெற்றோர் அப்பெயர் சூட்டி மகிழ்ந்தனர். காலத்தின் விளையாட்டு, இன்று அவரும் விரைவில் துணை ஜனாதிபதியாகப் பொறுப்பேற்க இருக்கிறார்.
திருப்பூரில் உள்ள கே.எஸ்.சி. நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் (இப்போது மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி) சி.பி.ஆர். படித்தபோது ஆர்.எஸ்.எஸ். தொடர்பு ஏற்பட்டது. அப்போது 11வது வரை (அதுவே அன்றைய எஸ்.எஸ்.எல்.சி.) படிக்க வேண்டும். படிப்பிலும் விளையாட்டிலும் சிறந்த மாணவராக இருந்தார்; மாணவர் தலைவராகவும் ஆனார்.
கல்லூரி அறிமுக வகுப்பான பி.யூ.சி.யை கோவை பி.எஸ்.ஜி கல்லூரியிலும், இளங்கலை ஆங்கில இலக்கியம் படிக்க திருப்பூரில் உள்ள சிக்கண்ணா அரசு கல்லூரியில் சேர்ந்த நிலையில், இவரது ஆர்.எஸ்.எஸ். தொடர்பும், தீவிர அரசியல் ஈடுபாடும் குடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்தின. எனவே, பெரியப்பா குப்புசாமியின் முயற்சியால் திருப்பூரிலிருந்து தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி. கல்லூரியில் இளங்கலை வணிக நிர்வாகம் (பிபிஏ) படிப்பில் சேர்த்தனர். அக்கல்லூரி அப்போதைய காங்கிரஸ் எம்.பி.யான ஏ.பி.சி.வீரபாகுவால் நடத்தப்பட்டது. அங்கு சென்றும்
ஆர்.எஸ்.எஸ். பணியில் ஈடுபட்டதால், கல்லூரி விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டார்; பெரியப்பாவும் காங்கிரஸ்காரர் என்பதால் படிப்பு தடைபடவில்லை.
படிப்பு முடித்து திருப்பூர் திரும்பியவரை மீண்டும் அரசியல் ஈர்த்தது. பாஜகவின் முந்தைய வடிவான பாரதிய ஜனசங்கத்தின் மாவட்ட நிர்வாகியாகவும், மாநில செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார். இவரை வளர்த்தெடுத்ததில் கொடுவாய் மூர்த்திஜியின் பங்களிப்பு குறிப்பிடத் தக்கது.
இந்திரா காந்தி அமல்படுத்திய நெருக்கடி நிலையின் போது, அதை எதிர்த்து தலைமறைவுப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். கார்பன் தாளில் வைத்து எழுதி பிரதி எடுத்து துண்டுப்பிரசுரங்களை விநியோகித்திருக்கிறார். அதையடுத்து 1978ல் ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்து, கவிழ்ந்த பிறகு, 1980ல் ஜனசங்கத்தின் மாவட்ட நிர்வாகியாகப் பொறுப்பேற்றார். அடுத்து, அது பாஜகவாக மாறியபோதும் கட்சிப் பணிகளைத் தொடர்ந்தார்.
திருப்பூர் நகர ஆர்.எஸ்.எஸ். தலைவர், மாவட்டத் தலைவர் பொறுப்புகளை ஏற்றுச் செயல்பட்டார். 1984ல் பொள்ளாச்சியில் நடந்த ஆர்.எஸ்.எஸ். முதலாம் ஆண்டு பயிற்சி முகாமில் பங்கேற்றார். 1985ல் சி.பிஆருக்கு திருமணம் நடைபெற்றது. மனைவி சுமதி. இவர்களுக்கு மகன் ஹரிசஷ்டிவேல், மகள் அபிராமி என இருவர் பிறந்தனர். பின்னர் தொழிலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். திருப்பூரில் பின்னலாடை உற்பத்தியில் முன்னோடியாக இருந்தவர், சி.பிஆர். இவரது ஸ்பைஸ் கார்மென்ட்ஸ் உள்நாட்டு உற்பத்தியிலும், ஹிந்துஸ்தான் எக்ஸ்போர்ட்ஸ் வெளிநாட்டு ஏற்றுமதியிலும் கவனம் செலுத்தின.
1996ல் பாஜகவின் மாநிலச் செயலாளராகப் பொறுப்பேற்றார். 1998ல் வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைந்தபோது, கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றார். 1999 தேர்தலிலும் தொடர்ந்து அவரே வென்றார். வாஜ்பாய் ஆட்சியின்போது நாடாளுமன்ற எம்.பி.க்கள் குழுக்களில் சிறப்பாகச் செயல்பட்டார். 2003ல் ஐ.நா. சென்ற நாடாளுமன்றக் குழுவில் உறுப்பினராக இடம்பெற்றுச் சென்றதுடன், ஐ.நா. பொது அவையில் (20.10.2003) உரையாற்றினார்.
வாஜ்பாய் அரசில் ஜவுளித் துறையினருக்காகக் குரல் கொடுப்பதில் முன்னிலை வகித்த சி.பி.ஆர். நாடாளுமன்ற ஜவுளித் துறைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதைப் பயன்படுத்தி, விசைத்தறிகளை நவீன
மயமாக்கத்திற்கு கடனுதவி அளிக்கும் டி.யு.எஃப். திட்டத்தைக் கொண்டுவந்தார். பின்னலாடை
களுக்கு டிராபேக் குறைக்கப்பட்டபோது அரசுடன் பேசி அதனை அதிகரிக்கச் செய்தார்.
2004, 2014, 2019 தேர்தல்களில் கோவை தொகுதியில் போட்டியிட்ட சி.பி.ஆர். தோல்வி
யைத் தழுவினார் என்றபோதும் பாஜகவின் செயல்பாடுகளில் முன்னிலை வகித்தார்.
2003 முதல் 2006 வரை தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவராக சி.பி.ஆர். இருந்தபோது, குமரி முதல் சென்னை வரை 2003-ல் வாஜ்பாய் அரசின் சாதனைகளை மக்களிடம் பிரச்சாரம் செய்தல், தேசிய நதிநீர் இணைப்பு, மகளிருக்கு 33 % ஒதுக்கீடு, பட்டியல் சமூக மக்களின் மேம்பாடு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு மிகப்பெரிய ரதயாத்திரையை நடத்தினார். கன்னியாகுமரியில் தொடங்கிய இவரது யாத்திரை, தமிழகத்திலுள்ள 234 சட்டசபைத் தொகுதிகளுக்கும் சென்று சென்னை விவேகானந்தர் இல்லத்தை அடைந்தது.
மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதும் தேசிய கயிறு வாரியத்தின் தலைவராக (2016 -19) நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலத்தில் கயிறு வாரியம் புதிய சோதனை முயற்சிகளில் ஈடுபட்டு, தென்னை நார்ப் பொருட்களின் ஏற்றுமதியைப் பெருக்கியது. அதற்கு முன் மிதியடி தயாரிப்பில் மட்டுமே கவனம் கொடுத்துவந்த நிலையில், திரைச்சீலை உள்ளிட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பை ஊக்குவித்தன் மூலமாக, ரூ. 50 கோடியாக இருந்த தென்னை நார்ப் பொருட்களின் ஏற்றுமதி ரூ. 2,000 கோடியாக உயர்ந்தது.
2020-ல் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான சி.பி.ஆர், 2020–-22-ல் கேரளா பாஜக வின் பொறுப்பாளராகவும் செயல்பட்டுள்ளார். 2023ல் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட சி.பி.ஆர்., 2023 வரை அந்தப் பொறுப்பில் தொடர்ந்தார். 2024ல் மகாராஷ்டிரா மாநில ஆளுநராகப் பொறுப்பேற்றார். இதனிடையே, தெலுங்கானா ஆளுநராகவும், பாண்டிசேரி துணைநிலை ஆளுநராகவும் சில மாதங்கள் தற்காலிகப் பொறுப்பு வகித்திருக்கிறார். மாநில அரசுகளுடன் சுமுக உறவைக் கொண்டிருந்ததுடன், தேவையான நேரங்களில் ஆளுநருக்குரிய கண்டிப்பைக் காட்ட சி.பி.ஆர். தவறியதில்லை.
இவ்வாறாக 1974ம் ஆண்டு முதல் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் சி.பி.ராதா
கிருஷ்ணனை துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக பாஜக நிறுத்தியிருப்பது பெருமைக்குரியதாகும்.
எதிர்தரப்பில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சுதர்சன் ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால், நாடாளுமன்ற இரு சபைகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே அதீதப் பெரும்பான்மை இருப்பதால், சி.பி.ஆர். வெல்வது உறுதி.