தீபாவளி சிறுகதை “தெளிவு”

கோயிலில் கற்பகம் பிரசாதம் வாங்க, வசந்தா ஒரு தூணோரம் உட்கார்ந்து, கண்களை மூடி தியானத்தில் இருந்தாள். கற்பகம் இன்னொரு தொன்னை வெண் பொங்கலை வாங்கி கொண்டு, வசந்தாவிடம் வந்தாள்.
“பிரசாதம் வாங்க நீதானே, முதல்ல வரிசைல நிப்பே.? இன்னிக்கு என்னாச்சு?”
“பிடிக்கலை. எதுவுமே பிடிக்கலை. மனசே சரியில்லை. அதான் தீபாராதனை முடிஞ்சதும், கண் மூடி இங்கே வந்து ஒக்காந்துட்டேன். கோயிலுக்கு வந்து தான் என்ன வாழுது? தெய்வம், வயசான காலத்துல நிம்மதியை தரலை.!”


“உன் சம்மந்தியம்மா வர்றதுக்கு முன்னால, நீ அதிகமா கோயிலுக்கு கூட வர மாட்டே.!”
“அப்ப நேரமிருக்காது. காலைல மகனை, மருமகளை ஆஃபீசுக்கு அனுப்பணும். பேரப்பசங்களை எழுப்பி, ஸ்கூலுக்கு தயார் செய்யணும். நிக்க நேரமிருக்காது. இப்ப மூணு மாசமா, சம்மந்தி இங்கே தானே இருக்காங்க? அதனால மருமகள், சமையல் கட்டுக்குள்ளே, என்னை விடறதில்லை. அவங்கம்மா சமைச்சாத்தான், அவளுக்கு புடிக்குது.!”
“உன் பையனுக்கு, நீ செஞ்சாத்தானே புடிக்கும்?”
“அதெல்லாம் இப்ப மாறியாச்சு. ஊர்ப்பட்ட பூண்டு, மசாலாக்களை போட்டு செஞ்சு, அவனை பழக்கியாச்சு. அவனுக்கு இப்ப என் சமையல் பிடிக்கலை. நான் எந்த வேலை செஞ்சாலும் ஏற்கலை.!”
“உன் வீட்ல வச்சு, உன்னை அந்தம்மா பேசுதா?”
“அந்தம்மா நேரடியா எங்கிட்ட எதுவும் வச்சுக்கறதில்லை. மகளை தூண்டி விட்டுட்டு, திரை மறைவுல நின்னு ஆட்டம் காட்டும். இவன் கிட்ட மாப்ளைனு, ஓவரா கொஞ்சுவா. இவனை, ஆத்தாளும், மகளுமா சேர்த்து வளைச்சாச்சு. நான் செல்லாக்காசா ஆயாச்சு. என் வீடுன்னு சொந்தம் கொண்டாட என்ன இருக்கு? என் பையன் லோன் போட்டு கட்டின வீடு. இவருக்கு வர்ற பென்ஷன்ல, நாங்க தனியா வாழ முடியுமா? மருமகளோட அப்பா உயிரோட இருக்கற வரைக்கும், அந்தம்மா இங்கே வரலை. அவர் மண்டைய போட்டதும், இவளை மருமகள் அடிச்சு துரத்திட்டா. இவ இங்கே ஏறி, ஆட்சியை புடிச்சிட்டா. இப்ப எங்க பாடு நாறுது.!”
“அந்தம்மாவுக்கு, காசு பணம் இருக்கா?”
“எதுவும் இல்லை. புருஷனும் இல்லை. எனக்கு இவரும் இருக்கார். இவருக்கு பென்ஷனும் இருக்கு. என்ன லாபம்? என் பையன் என் பக்கம் இல்லையே? இப்பல்லாம், இல்லாதவங்க ஆட்டம் தான் தாங்க முடியலை. இருக்கறவங்க அடங்கி போக வேண்டியிருக்கு. ஆனா புள்ளைங்களை ஸ்கூல்ல விடறது, கூட்டிட்டு வர்றது, ரேஷன், கரண்ட் பில்லுனு, அறுபத்தி அஞ்சான இவர் தான் அலைய வேண்டியிருக்கு. வீட்டுக்குள்ள ஆத்தாளும், மகளுமா நாட்டாமை.!”
“உன் வீட்டுக்காரர் என்ன சொல்றார்?”
“அவரு ஊமை கோட்டான். வாய் திறந்தாத்தானே? பொம்பளைங்க படற சங்கடங்கள், ஆம்பளைக்கு தெரியறதில்லை!”
“சரி, இதை சாப்பிடு வசந்தா.!”
“நீ கொடுத்து வச்சவ கற்பகம். நீங்க பணம் போட்டு கட்டின வீடு. உனக்கு பையனே இல்லை. மூணும் பொண்ணுங்க. ஒருத்தி வெளி நாட்ல. ஒருத்தி வடக்கே. இங்கேயுள்ள பொண்ணு, தன் புருஷன் குழந்தையோட, உன்னோட இருக்கா. இப்பவும் உன் வீட்டுக்காரர், ஷேர்ல சம்பாதிக்கறார். நீ அரசாங்க வேலைல ரிடையர் ஆன காரணமா, உனக்கும் பென்ஷன் வருது. வீட்டோட மாப்ளை. மகனை பெத்தவங்க தான் இப்பல்லாம் அவமானப்படறாங்க. மகளை பெத்தவங்க, மகா ராணி மாதிரி வாழறாங்க.!”
கற்பகம் பேசவில்லை.
“உன் சம்பந்தி இறந்து, அந்தம்மாவும் மகள் கிட்டத்தானே இருக்காங்க?”
“ஆமாம்.!”
“வேற வழியில்லையே? உன் மாப்ளை அவங்க மகனா இருந்தாலும், இங்கே வந்து வாழ முடியுமா? இது உன் வீடாச்சே? விடுவியா? மாப்ளை வாயை மூடிட்டுத்தான் இருக்கணும்? வீடும், பணமும், வசதிகளும் இருக்கற பெரியவங்க, குடுத்து வச்சவங்க.!”
“சரி, நேரமாச்சு. பாக்கலாம்.!”
கற்பகம் புறப்பட்டு தன் வீட்டுக்கு வர, உள்ளே அவள் மகள் இனியாவின் கூச்சல், தெரு முனை வரை கேட்டது. மூன்று வயது குழந்தை, குளிக்க சண்டித்தனம் செய்ய, அதை இனியா அடித்து, அது அலற, கற்பகம் உள்ளே நுழைந்தாள்.
“ஏண்டீ குழந்தையை அடிக்கறே?”
“நீ சொல்ல மாட்டே? காலைல எழுந்ததும் கோயிலுக்கு போயிடறே. இன்னும் சமையல் ஆகலை. இவனை ப்ளே ஸ்கூல்ல விட்டுட்டு, நான் ஆஃபீசுக்கு போகணும். இவர் முதல் ஷிஃப்டுனு காலைல அஞ்சரைக்கு போய், என் உயிரை எடுக்கறார். அப்பா எந்த உதவியும் செய்ய மாட்டார். உன்னாலயும் உதவியில்லை. நான் கெடந்து, நாற வேண்டியிருக்கு.!”
“ஏன் இப்படி பிசாசு மாதிரி கத்தறே? நானும் உத்யோகம் பார்த்து, நாப்பது வருஷம் சர்வீஸ் போட்டு, ரிடையர் ஆனவ. உங்களை மூணு பேரை ஆளாக்கி, படிக்க வச்சு, கல்யாணம், பிரசவம்னு பார்த்து, இந்த வீட்டையும் கட்டி, நானும், உங்கப்பாவும், பட்ட பாடு கொஞ்சமில்லை. எங்களுக்கு யாருடி உதவி செஞ்சது? உங்க புள்ளையை நீதான் வளர்க்கணும். உன் குடும்பத்தை நீதான் பாத்துக்கணும். வயசான காலத்துல, நான் கோயிலுக்கு போறதை உனக்காக நிறுத்த முடியாது. தள்ளு! நீ போய் சமையலை கவனி. நான் குழந்தையை குளிப்பாட்டி தயார் பண்றேன். அப்பா வந்துடுவார். ஸ்கூல்ல அவர் விடுவார்.!”
“சமைக்க எனக்கு நேரமில்லைம்மா. நான் வெளில பாத்துக்கறேன். குழந்தைக்கு சாப்பிட கான்ஃப்ளக்ஸ் தந்துட்டு, பழங்களை பேக் பண்ணிடு. ஜங் ஃபுட் தராதே. இவன் அடம் புடிச்சு, நேத்திக்கு நூடுல்ஸ் பண்ணி தந்திருக்கே. அதையெல்லாம் செய்யாதே.!”
“இதப்பாரு இனியா! எல்லாத்துக்கும் தடை உத்தரவு போட்டா, என்னால முடியாது. பாலுக்கு வெள்ளை சக்கரை கூடாதுங்கறே..மாம்பழம் தர தடை. இது மாதிரி ஓவரா கட்டுப்படுத்தினா, நீதான் பாத்துக்கணும்.!”


“என்னம்மா ஓவரா பேசறே? உங்க காலம் மாதிரி இப்ப இல்லை. எல்லாத்துலேயும் கலப்படம். உங்கிட்ட சண்டை போட எனக்கு நேரமில்லை. நான் ரெடியாகணும்!”
இனியா பரபரப்பாக புறப்பட,கற்பகம் குழந்தையை குளிப்பாட்டி, அதற்கு யூனிஃபார்ம் போட்டு, கான்ஃப்ளக்சை ஊட்ட தொடங்கினாள்.
அப்பா காலை யோகா, மற்றும் நடை பயணத்தை முடித்து விட்டு, உள்ளே நுழைய,
“அம்மா! என் துப்பட்டாவை எங்கே வச்சே? இந்த வீட்ல வச்ச இடத்துல எதுவும் இருக்காது.!”
“என்னங்க! குழந்தை ரெடி. கொண்டு போய் விட்ருங்க.!”
“அப்பா! நெட் வரலை. ஏர்டெல் ஆஃபீசுக்கு போங்க. குழந்தைக்கு சார்ட்டுகள் வாங்கணும்.!”
வரிசையாக பணிகளை அடுக்க,
“என்னங்க, காய்கறி வாங்கணும். பலசரக்கும் சிலது வேணும்.!”
“ஆன்லைன்ல போட்டுக்கலாம்.”
“இல்லீங்க. பல சமயம் தரமா இல்லை. அதுக்கொரு சார்ஜ் போடறான். போய் வாங்கிடுங்க. டூ..வீலர் தான் இருக்கே? அர்பன் கம்பெனியை கூப்பிட்டு, மூணு பாத்ரூம்களையும் க்ளீன் பண்ணணும். மிக்சியோட சின்ன ஜார் சரியா இல்லை.!”
“கொஞ்சம் மூச்சு விட்டுக்கோடி. பாக்கி ஏதாவது இருக்கா? எனக்கு அறுபத்தி ஆறு வயசு. ஒரு நாளைக்கு, பத்து தடவை கடைக்கு போறேன். மாப்ளைக்கும், இனியாவுக்கும் எதுக்கும் நேரமில்லை. நாந்தான் அலைய வேண்டியிருக்கு. கோயிலை தவிர, நீ எங்கேயும் போக மாட்டே.!”
“ம்..ஏன் பேச மாட்டீங்க? எனக்கும் அறுபத்தி நாலு. வீட்ல பெண்டு கழலுது. சமையல் கட்டு பக்கம், வர மாட்டா உங்க பொண்ணு. வீட்ல துரும்பை கிள்ளி போடறதில்லை. மாப்ளையை நாம சொல்ல முடியுமா? மூணு வேளை சமையல் வேலை. உங்களுக்கு இட்லி, தோசை இல்லாம முடியாது. அதனால க்ரைண்டர் போடணும். புது மாவா இருக்கணும். வீட்டை க்ளீன் பண்ணணும். துணி காய வைக்கணும். மத்யானம் பேரன் வந்தா, அவனுக்கு சாப்பாடு ஊட்டி, அவனை பராமரிச்சு, மத்யானம் கொஞ்சம் தலையை சாய்க்க முடியுதா? இடுப்பு விட்டு போகுது. ராத்திரி படுத்தா, கால் இழுத்துக்குது. நரம்பு பிரச்னை. நான் கோயிலுக்கு போறது மட்டும் தான் உங்க கண்ணை உறுத்துது.!”
“சரி.புலம்பினது போதும். ஒரு காபி குடு.”
“குழந்தையை விட்டுட்டு வாங்க. போட்டு வைக்கறேன். ஒரு நாளைக்கு நாலு காஃபி ஆகுது. நல்லதில்லை.”
அன்று மாலை, ஏழு மணிக்கு மாப்ளையின் அம்மாவை, அவரது மகள் கொண்டு வந்து விட்டாள். இனியா பதட்டமானாள்.
“அண்ணி! என் மாமியார் திடீர்னு வந்துட்டாங்க. இனிமே நான் என் பையன் கிட்டேத்தான் இருப்பேன்னாங்க. ரெண்டு பேரை வச்சு, என்னால சமாளிக்க முடியாது அண்ணி. நான் உடனே கிளம்பறேன்.!”
அவள் யார் பதிலுக்கும் காத்திராமல் புறப்பட்டு விட்டாள். கார்த்தி இன்னும் வீடு திரும்பியிருக்கவில்லை. அம்மாவை உள்ளே இழுத்து வந்தாள் இனியா.
“இவளால சமாளிக்க முடியலைன்னா, என்னால மட்டும் சமாளிக்க முடியுமாம்மா?”
“வாயை மூட்றி. அவங்க உன்னை என்ன செஞ்சாங்க? உன் மாமியார் நல்லவங்க. அது எனக்கு தெரியும். தன்னால முடிஞ்ச வரைக்கும் உழைப்பாங்க. உன் மனசு புண் படற மாதிரி பேச மாட்டாங்க.”
பொண்ணு, தன் சுயநலத்துக்காக அவங்களை கூடவே வச்சிருக்கா. இப்ப கழட்டி விடறா.!”
“நீ மட்டும் என்னடி செய்யறே? எங்களை உன் வேலைக்குத்தானே யூஸ் பண்ணிக்கறே! என்னா ஒரு வித்யாசம்..வீடு எங்களோடது. வாடகை நீ தர வேண்டாம். குடும்ப செலவுல பாதிக்கு மேல, அப்பா போடறார். நாங்க ரெண்டு பேரும், நாய் மாதிரி உழைக்கறோம்.!”
“அவமானப்படுத்தறியா என்னை?”
“உண்மை சுடத்தாண்டி செய்யும். வேற வழியில்லை. நமக்கு காரியம் ஆகணும்னா அந்த சூட்டை தாங்கித்தான் ஆகணும். மாப்ளை, அவங்களுக்கு ஒரே மகன். மகள் கழட்டி விட்டா, இவங்க எங்கே போவாங்க. நீதான் பாத்துக்கணும்!”
“உன் வீட்ல, உன் சுதந்திரம் பறி போகும். பரவால்லையா?”
“அப்படி நடக்காது. உன் அக்கா ராதிகா வீட்ல, அவளோட ரெண்டாவது பிரசவத்துக்கு நானும், அப்பாவும் போய் மூணு மாசம் இருந்தப்ப, உன் மாமியார் தானே இங்கே இருந்தாங்க? அத்தனை வேலைகளையும் செய்யலையா?”
“அவங்க நிரந்தரமா இனி இங்கே தான் இருப்பாங்க.!”
“இருக்கட்டும்.!”
“ஒரே உறைல ரெண்டு வாள் இருக்க முடியாது.!”
“அது எனக்கும் தெரியும். இது அவங்க மகன் வீடு.!”
“நீங்க ரெண்டு பேரும் அக்கா வீடுகளுக்கு போனாலும், அங்கேயும் மாமியார்கள், வரும் அபாயம் உண்டு. இது உன் வீடு.!”
“தெரியம்டி. பாத்துக்கறோம்.!”
இனியாவின் மாமியார் வந்து ஒரு மாதமாகி விட்டது. பாதிக்கு மேல் வேலைகளை இழுத்து போட்டு கொண்டு அந்தம்மா தான் செய்தாள். ஒரு பிரச்னை இல்லை. என் மகன் வீடு என்ற உரிமை போராட்டம் இல்லை. அந்த ஞாயிறு வந்தது. அப்பா சபை கூட்டினார்.
“மாப்ளே! கோயம்புத்தூர் பக்கத்துல ஒரு சீனியர் ஹோம்ல, நான் பேசிட்டேன். மாசம் சாப்பாடும் சேர்த்து, ஒரு நபருக்கு பதினஞ்சாயிரம் வருது. எங்க ரெண்டு பேருக்கு முப்பதாயிரம். நாங்க நாளைக்கு சதாப்தில புறப்படறோம்.!”
“எதுக்கு மாமா இந்த திடீர் ஏற்பாடு? என் மேல வருத்தமா?”
“சம்பந்தி! நான் இங்கே இருக்கறது, உங்களுக்கு இடையூறா இருக்கா?”
“மாப்ளை! உங்க மேல வருத்தமும் இல்லை. உங்கம்மா மாதிரி நல்லவங்களும் இல்லை.!”
“இது உங்க வீடு சம்பந்தி?”
“கல்லும், மண்ணும் மட்டுமே வீடில்லைம்மா. மனசு தான் வீடு. நீங்க உங்க மகன் கூட அலைபாயாம இருங்க. மூணை பெத்துட்டு அதுங்களுக்கு உதவி செய்ய மட்டுமே நாங்க. பொண்ணுங்க எங்களை பந்தாடறாங்க. சொந்த வீடும், பணமும் மட்டுமே நிம்மதியை, ஓய்வை தர்றதில்லை. நாங்க களைச்சாச்சு. அதனால கிளம்பறோம். யார் மேலயும் வருத்தமில்லை. எங்களுக்காக நாங்க வாழணும். எல்லா பெரியவங்களுக்கும், ஒரு நாள் இந்த வடிகால் தேவைப்படும். நாங்க புறப்படறோம்.!”
“இவர்களது இந்த முடிவு சரியா?”
(நிறைவு)                                                                                                                                      சிறுகதை  – தேவிபாலா