திருவாரூர் விருத்தாசலம் கல்யாணசுந்தரனார் என்றழைக்கப்பட்ட திரு.வி.க. அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின் காரணமாக தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்பட்டார். 1883ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலத்தில் விருத்தாசல முதலியார் − – சின்னம்மா தம்பதிகளுக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார். இவரது தந்தை இசை, இலக்கியத்தில் ஆர்வம் உடையவர். ஆசிரியர் தொழிலுடன் வணிகமும் புரிந்தவர். ஆசிரியராகத் திருவாரூரில் பணி புரிந்தார். இவரது தந்தை பச்சையம்மாள் என்பவரை மணந்து 3 ஆண், ஒரு பெண் குழந்தைகளை பெற்றார். அவரின் மறைவுக்குப் பின்னர், சின்னம்மாள் என்பவரை மணந்து 4 ஆண்,
4 பெண் குழந்ைதகளைப் பெற்றார். இவர்களுள் ஒருவரே கல்யாணசுந்தரனார். முதலில் தனது தந்தையிடமும், பின்னர் சென்னை ராயப்பேட்டை ஆரியன் தொடக்கப் பள்ளியிலும், 1894-ல், வெஸ்லி பள்ளியிலும் பயின்றார். 4ம் வகுப்பு படிக்கும் போது, அவருக்கு ஒரு காலும் ஒரு கையும் முடங்கியதால், பள்ளிப் படிப்பு சிறிது காலம் தடைப்பட்டது. படிப்பில் நல்ல திறமையுடையவராக விளங்கினார். 1904ம் ஆண்டில், ஆறாம் படிவத் தேர்வு எழுத முடியாமல் போனது. அத்தோடு அவரது பள்ளிப் படிப்பும் முடிந்தது.
உவெசுலி பள்ளியில் ஆசிரியராக இருந்த யாழ்ப்பாணம் நா.கதிரைவேல் பிள்ளை என்ற தமிழறிஞரிடம் தமிழ் நூல்களை முறையாகப் பயின்று, சிறந்த புலமையைப் பெற்றார். மயிலை தணிகாசல முதலியாரிடம் தமிழ் மற்றும் சைவ நூல்களையும் பயின்றார். 1906ம் ஆண்டில் ஸ்பென்சர் நிறுவனத்தில் கணக்கர் பணியில் சேர்ந்தார். அக்காலத்தில், பால கங்காதர திலகரின் விடுதலைக் கிளர்ச்சிகளில் ஈடுபாடு கொண்டதால், வேலையிலிருந்து விலகினார். பின்னர் 1909ல் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து ஆறு ஆண்டுகள் பணி புரிந்தார். 1912ல், கமலாம்பிகை என்பவரை மணந்தார். அவருக்கு 2 பிள்ளைகள் பிறந்தனர். 1918ம் ஆண்டிற்குள் தம் மனைவி, பிள்ளைகளை இழந்தார். ராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமை ஆசிரியராகச் சேர்ந்தார். தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்க அப்பணியில் இருந்து விலகினார்.
பின்னர் தேசபக்தன், திராவிடன், நவசக்தி போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்து நாட்டு விடுதலைக்குத் தொண்டாற்றினார். தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும், முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார். அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுக் கொண்டு பல நூல்களை எழுதியுள்ளார். தமிழில் ஆன்மீக நூல்களை எழுதிய முன்னோடியாக திரு.வி.க. கருதப்படுகிறார். ‘சைவசமய சாரம்’, ‘சைவத்திறவு’, ‘முருகன் அல்லது அழகு’ போன்ற அவருடைய நூல்கள் சைவ மதத்தைப் பற்றிய புதிய நோக்கை முன்வைத்தவை. பிற்காலத்தில் ராமலிங்க வள்ளலார் பற்றி எழுதிய ‘இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்’, ‘சமரச சன்மார்க்க போதமும் திறவும்’ ஆகிய நூல்களை எழுதினார். 1953ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி, திரு.வி.க ராயப்பேட்டையில் உள்ள தன் இல்லத்தில் காலமானார்.