தென்னாப்பிரிக்காவில் இந்தியர் உரிமைகளை மீட்க மகாத்மா காந்தி போராடி வந்தார். போராட்டத்தில் கைதாகி அவர் சிறை சென்றபோது உடன் இருந்தவர்களில் 16 வயதே நிரம்பிய தில்லையாடி வள்ளியம்மையும் ஒருவர். வள்ளியம்மையின் பெற்றோர்களுக்கு சொந்த ஊர் நாகப்பட்டினம், அருகில் உள்ள தில்லையாடி. அதனால் தில்லையாடி வள்ளியம்மை என்று அழைக்கப்பெற்றார். 3 மாதம் கடுங்காவல் தண்டனை, சிறையில் சொல்ல முடியாத கொடுமைகள் நடைபெற்றன. தில்லையாடி வள்ளியம்மையின் உடல்நிலை வெகுவாகப் பாதித்தது. உயிருக்கே ஆபத்தான நிலையில் அவர் விடுதலை செய்யப்பட்டார். காந்திஜிதான் அவரை வீட்டுக்கு அழைத்து வந்தார்.
வள்ளியம்மை படுத்த படுக்கையில் உயிருக்கே போராடிக் கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த பாலசுந்தர் என்பவரை அழைத்து திருவாசகத்தில் உள்ள ஒரு பாடலைப் பாடும்படி கூறினார். அவரும் பாடினார். அதைக் கேட்டுக் கொண்டே வள்ளியம்மையின் உயிர் பிரிந்தது. ‘‘பாலசுந்தரம், நீங்கள் பாடிய பாடல் என்ன? அதன் பொருள் என்ன?” என்று காந்திஜி கேட்டார். ‘‘முத்தி நெறி அறியாத மூர்க்கரோடும் முயல்வேனை’’ என்ற இந்தப் பாடல் திருவாசகத்தில் அச்சோ பதிகத்தில் உள்ளது. இறக்கும் தருவாயில் இப்பாடலைப் பாடினாலோ, அல்லது கேட்டாலோ மறுபிறவி என்பதே இன்றி இறைவன் திருவடியை அடைவது உறுதி” என்று விளக்கமளித்தார்.
காந்திஜிக்கு அந்தப் பாடல் மிகவும் பிடித்துவிட்டது. அதை ஆங்கிலத்தில் எழுதி தனது கூட்டுப் பிரார்த்தனையில் சேர்த்துக்கொண்டார்.