ஐ.நாவில் பாரத சாதனை பிறந்தது 2020, பறந்தது வெற்றிக்கொடி

நாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்த அன்று ஜனவரி ௧௫, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் நடந்தது. அன்று நடைபெற்ற கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக்க  சீனா செய்த முயற்சி படுதோல்வி அடைந்தது. இது சீனாவின் இரண்டாவது முயற்சி. பாகிஸ்தான் தூண்டுதலில் சீனா இத்தகைய முயற்சியில் இறங்கி மூக்கு உடைபட்டது. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் சீனா தவிர்த்து ஏனைய நான்கு நாடுகளுமே சீனாவின் முயற்சிக்கு ஆதரவளிக்கவில்லை. பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்தியாவை ஆதரித்தன. இது நமது பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவரின் ராஜந்திர உறவுக்கும் கிடைத்த வெற்றி.

காஷ்மீர் பிரச்சினை என்பது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான இரு நாட்டுப் பிரச்சினை என்றும் அதை இரண்டு நாடுகளும் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சீனாவைத்தவிர ஏனைய நாடுகள் திட்டவட்டமாகக் தெரிவித்து விட்டன.

காஷ்மீருக்கு தனி சலுகை அளித்த அரசியல் சாசனப் பிரிவு 370 நீக்கப்பட்டது இந்திய நாட்டு உள் விவகாரம். பிரதமர் நரேந்திர மோடி உலக நாடுகளுக்கு இதைத் தெளிவுபடுத்தி, அவர்களின் ஆதரவையும் பெற்றது வரலாற்று சாதனை.

‘காஷ்மீர் இல்லாமல் பாகிஸ்தான் பூர்த்தியாகாது’ என்ற முழக்கம் பாகிஸ்தானில் முழங்கினால் ‘பாகிஸ்தான் இல்லாமல் இந்தியா முழுமை பெறாது’ என்ற முழக்கம் கேட்க நேரிடும்.

இந்தியாவின் அடுத்த இலக்கு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதி (Pok) தான். விரைவில் இதையும் மீட்பதற்கான சூழ்நிலை வரும். அதை அடைவதற்காக பாரத நாடு முழுவதும் மோடியின் பின்னால் அணிவகுத்து அவரது கரத்தைப் பலப்படுத்துவோம்.