பாவையர் நோன்பு நிமித்தம் குடி மக்கள் நலன் கருதியும், மார்கழி நீராடலுக்காகவும் எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி மகிழ்ச்சியடையச் செய்யுமாறு மழை வேண்டிப் பாவையர் கேட்டுக்கொண்ட பாசுரம் – ஆழி மழைக்கண்ணா என்று தொடங்கும் பாசுரம்.
சமுத்திர மணல் தெரியுமாறு நீரை முழுவதும் முகர்ந்தெடுத்து உறிஞ்சி கருமேகங்களாக்கி மழை பொழிய வேண்டுவது அப்பெண்கள் காட்டும் பெருத்த ஆர்வத்தைக் குறிக்கிறது. “பத்மநாபன் கையிலுள்ள சக்கரம் போல மின்னலோடும், சங்கு போல் முழங்கும் பலத்த இடியுடனும், வெற்றியை மட்டுமே ஈட்டும் ராமபிரானது சாரங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் இலக்கைச் சரியாக அடைகிற தோல்விகாணா அம்புகளைப் போல் மழை பொழிவாயாக ! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம்” என்பதன் மூலம் அப்பெண்களின் உறுதியான நிலைப்பாட்டினை ஆண்டாள் முன்னிருத்துகிறாள்.