கோடைக்காலங்களில் குடிநீருக்காக மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் அலைய வேண்டிய நிலை இன்றும் இருக்கிறது. ஆனால் மகாராஷ்டிர மாநிலத்தின், ஒரு சிறிய கிராமம் இந்தப் பிரச்சனைக்கு வித்தியாசமான முறையில் தீர்வு கண்டிருக்கிறது.
மகாராஷ்டிரத்தின் வாஷிம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது வாட்ஜி (Wadji) கிராமம். சுமார் 2,000 மக்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில், வீட்டுக்குத் தேவையான குடிநீரைப் பெறுவதற்காக மக்கள் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்ல வேண்டியிருந்தது. பெண்களும், குழந்தைகளும் குடிநீருக்காகப் பெரும் சிரமத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது. இந்த நிலையை மாற்றியிருக்கிறது ‘மேக்தூத்’ (Meghdoot) என்ற நவீன இயந்திரம்!
காற்றுக்குள் ஒளிந்திருக்கும் தண்ணீர்
காற்றில் ஈரப்பதம் இருக்கிறது என்பது நமக்குத் தெரியும். ஆனால் அந்த ஈரப்பதத்தையே குடிநீராக மாற்ற முடியும் என்பது, பலருக்கும் ஆச்சர்யமான செய்தியாக இருக்கும். இதற்காகப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தின் பெயர் ‘Atmospheric Water Generation’ (AWG). அதாவது வளிமண்டலத்திலிருந்து நீரைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம்.
மேக்தூத் இயந்திரம், சுற்றியுள்ள காற்றை உள்ளிழுத்து, அதிலுள்ள தூசி மற்றும் மாசுகளை முதலில் வடிகட்டுகிறது. பின்னர் குளிரூட்டும் முறையின் மூலம், காற்றிலுள்ள நீராவி, சிறிய நீர்த்துளிகளாக மாற்றப்படுகிறது. அவை ஒரு தொட்டியில் சேகரிக்கப்படுகின்றன. தொடர்ந்து பல்வேறு வடிகட்டுதல் முறைகள், புற ஊதாக் கதிர் சுத்திகரிப்பு உள்ளிட்ட செயல்முறைகள் மூலம், அந்த நீர் சுத்திகரிக்கப்படுகிறது. அதன் பிறகே குடிநீராகப் பயன்படுத்தப்படுகிறது.
இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், ஒரு நாளைக்கு சுமார் 500 லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்ய முடியும். காற்றின் ஈரப்பதம் மற்றும் சுற்றுச்சூழல் வெப்பநிலையைப் பொறுத்து, இந்த உற்பத்தி அளவு மாறுபடலாம். ஹைதராபாத்தில் செயல்படும் இந்திய வேதியியல் தொழில்நுட்பக் கழகம், மைத்ரி அக்வாடெக் (Maithri Aquatech) நிறுவனத்துடன் இணைந்து, இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
வாட்ஜி கிராமத்தில் இந்த இயந்திரம் நிறுவப்பட்டிருப்பது, தொழில்நுட்பத்தை ஆய்வுக்கூடங்களிலிருந்து நேரடியாக மக்களின் வாழ்க்கைக்குக் கொண்டு செல்லும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பள்ளி மற்றும் அங்கன்வாடி வளாகங்களில் குடிநீர் கிடைப்பதற்கு இது உதவுகிறது.
காற்றிலிருந்து தண்ணீர் தயாரிக்கும் தொழில்நுட்பம் நம்பிக்கை அளித்தாலும், அதற்கு சில வரம்புகளும் இருக்கின்றன. காற்றில் ஈரப்பதம் குறைவாக இருக்கும் பகுதிகளில், தண்ணீர் உற்பத்தி குறையலாம். இயந்திரத்தின் பராமரிப்புச் செலவையும் கணக்கில் கொள்ள வேண்டும். எனவே மழைநீர் சேகரிப்பு, ஏரி மற்றும் குளங்களைப் பாதுகாத்தல், நிலத்தடி நீரைப் பெருக்குதல் போன்ற முயற்சிகளுக்கு இது மாற்றாக அமையாது. மாறாக, அவற்றுடன் இணைந்து செயல்படும் கூடுதல் குடிநீர் ஆதாரமாகப் பயன்படலாம்.
தாகத்தைத் தீர்க்க மேகத்தைப் பார்த்துக் காத்திருந்த மனிதன், இன்று தன்னைச் சுற்றியிருக்கும் காற்றிலிருந்தே தண்ணீரைப் பெறத் தொடங்கியிருக்கிறான். இயற்கை நமக்கு வழங்கும் வளங்களை அறிவியல் துணையுடன் எப்படிப் பயன்படுத்தலாம் என்பதற்கு வாட்ஜி ஒரு நல்ல உதாரணம்!
கட்டுரையாளர்: அன்னபூரணி ராஜேஷ்