தினமலர் டி.வி. ராமசுப்பையர்

சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த போராடுவது மட்டுமல்ல, பத்திரிகை வாயிலாகவும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நிரூபித்தவர்தான் ‘தினமலர்’ நிறுவனர் டி.வி. ராமசுப்பையர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தளியர் மகாதேவர் கோயில் என்னும் சிறு கிராமத்தில் ராமலிங்க ஐயர் − பகவதியம்மாள் தம்பதியினருக்கு, 1908ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 2ம் தேதி பிறந்தார். 1915ம் ஆண்டு வேங்கடபதி ஐயர் − ஆவுடையம்மாள் தம்பதியினருக்கு தத்து கொடுக்கபட்டார். இளமையிலேயே காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இவர், பட்டியலின மக்களின் வளர்ச்சிக்கு பாடுபட்டார் கல்லூரிப் படிப்பை முடித்ததும், அரசுப் பணிக்குச் செல்லாமல், பொது சேவையில் நாட்டம் கொண்டார்.
அவர் குடும்பத்தில் குடுமி வைத்துக்கொள்ளும் பழக்கம் இருந்தது. ஆனால் ராமசுப்பையருக்கோ, அதில் விருப்பம் இல்லை. வீட்டிற்கு தெரியாமல் நண்பர்களுடன் சேர்ந்து கிராப் வெட்டிக்கொண்டு, தன் தாத்தா முன்பு தைரியமாக நின்றார். 1919ம் ஆண்டு, கிருஷ்ணம்மாள் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பெரும் கடனில் முடங்கிக் கிடந்த, ‘தினச்செய்தி’ அச்சகத்தை, காமராஜர் மற்றும் டி.எஸ்.சொக்கலிங்கத்தின் பரிந்துரை கடிதங்கள் வழியே விலைக்கு வாங்கி, தன் பத்திரிகை பயணத்தை தொடங்கினார். 1951 செப்., 6ம் தேதியன்று, கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், தமிழ் அறிஞர் வையாபுரி பிள்ளையால், ‘தினமலர்’ நாளிதழ் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. எந்தக் கட்சியையும் சாராமல், தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே முதன்மை நோக்கம் என, தொடக்க விழாவில் டி.வி.ஆர். குறிப்பிட்டார்.
1954ல், கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்தது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் அந்தப் பகுதி தமிழகத்துடன் இணைவதுதான் நியாயம் என்று கருதினார், டி.வி.ஆர். மக்களும் அதையே விரும்பினர். மொழிவாரி மாகாண பிரிவினையின் போது அந்தப் பகுதியை தமிழ்நாட்டுடன் சேர்க்கக்கோரி நடைபெற்ற போராட்டத்தை சிதம்பர நாதன், பொன்னப்ப நாடார், ராமசாமி பிள்ளை, தங்கையா குஞ்சன் நாடார், நேசமணி, தாணுலிங்க நாடார் உள்ளிட்ட தலைவர்களின் தலைமையில் நடத்தி வந்தனர். அப்போது குமரி மக்களின் குரலாக அதனை ஆதரித்து, தினமலரில் போராட்ட செய்திகளையும், அதன் அவசியத்தையும் தமிழர்களின் குரலாக ஒலித்தது. இதன் காரணமாக திருவனந்தபுரம் உயர்நீதிமன்ற நீதிபதி சங்கரன் முன்னிலையில் டி.வி.ராமசுப்பையர் நாள் முழுவதும் விசாரிக்கப்பட்டார். இதையெல்லாம் கண்டு அச்சப்படாத ராமசுப்பையர், தொடர்ந்து தனது பத்திரிகையில் இது குறித்து எழுதி வந்தார்.
மக்கள் நலனுக்காக, 20 ஆண்டுகள் போராடி, நெல்லை-, குமரி, திருவனந்தபுரம் ரயில் திட்டத்தை, செயல்வடிவம் பெற வைத்தார். புள்ளிவிபர கட்டுரைகள் மூலம், திண்டுக்கல், துாத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் போன்ற புதிய மாவட்டங்கள் உருவாக முக்கியப் பங்காற்றினார். 1984ம் ஆண்டு, ஜூலை மாதம் 21ம் தேதி டி.வி.ராமசுப்பையர் காலமானார். அவரின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்க, அவரது நினைவு அஞ்சல் தலையை, மத்திய தபால் தந்தி துறை 2008, டிசம்பர் 21ம் தேதி வெளியிட்டது. டி.வி.ஆரின் மகனான ஆர்.லட்சுமிபதி, பிற்காலத்தில் இந்திய பத்திரிக்கை அறக்கட்டளையின் தலைவராகவும், மற்றொரு மகனான காலஞ்சென்ற
ஆர்.கிருஷ்ணமூர்த்தி, நாணயவியல் சங்கத்தின் தலைவராகவும் ஆனார்கள்.