தானமும் தருமமும்

சைதன்ய மஹாப்பிரபு, ஸ்ரீராதாகிருஷ்ணனை பூஜித்து வந்த தெய்வீக புருஷர். அவரது ஆசிரமத்தில் ஒரு நாள்  பூஜைக்குத் தேவையான பொருட்கள் இல்லை. எனவே, சீடர் ஒருவர்,  ராதாபாய் என்ற ஒரு  அம்மையாரிடம் சென்று அன்றைய பூஜைக்கு நைவேத்யம் செய்ய ஏதாவது தந்து உதவும்படிக் கேட்டார். அந்த பெண்மணி  பொருட்களை தர, சீடனும் மடத்துக்கு வந்து, பாயஸம் செய்து, நைவேத்யம் தயார் செய்தார்.

விஷயமறிந்து கொண்ட சைதன்யர் “நீ செய்தது தவறு. அந்த அம்மாவிடம் உனக்கு இருந்த நம்பிக்கை, இந்த கிருஷ்ணனிடம் இல்லையே? அவனுக்கு நைவேத்யம் இல்லையென்றால், அவனிடமே கேட்டிருக்கலாமே! அதைச் செய்யாமல்  ஏன் யாசிக்க வேண்டும்?” என்றார்.

பகவானுக்கு நைவேத்யம் செய்ய, பகவானிடமே கேட்பதா? அப்படி கேட்டால் மட்டும் நைவேத்ய சாமான்கள் தானாகவே வந்துவிடுமா?” என்று பணிவுடன் கேட்டார் சீடர்.

அதற்கு மஹாப்பிரபு நீ பகவானிடம் கேட்டிருந்தால், ராதாபாய் அம்மையார் தானாகவே, இந்த நைவேத்ய சாமான்களைக் கொண்டு வந்து தந்திருப்பார்கள். நீ கேட்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது. தானாகவே மனமுவந்து ஒருவருக்கு கொடுப்பதற்கு புண்ணிய பலன் அதிகம். ஒருவர் சென்று கேட்டபின் தருவது தர்மம். அதற்குப் புண்ணிய பலன் குறைவு. ராதாபாய் தானம் செய்து பெற வேண்டிய பலனை, நீ சென்ற தர்மம் கேட்டு வாங்கி, குறைத்துவிட்டாய்” என்றார்.

சீடரும் தனது தவறை உணர்ந்து, இனி இதுபோல் நடந்து கொள்ளமாட்டேன்” என்று கூறி, மஹாப்பிரபுவை நமஸ்கரித்தார்.