சுதந்திர இந்தியாவில் இதுவரை காணாத எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வழக்கு அயோத்தி வழக்கு. அந்த வழக்கு 2019, நவம்பர் 9ஆம் தேதி முற்றுப்பெற்றிருக்கிறது. இதன்மூலமாக, பலநூறு ஆண்டுகால ஹிந்துக்களின் கோயில் நில உரிமைப் போராட்டமும் வெற்றிகரமாக முடிவுக்கு வந்திருக்கிறது. தவிர, நாட்டில் அடாவடி மூலம் பீதியைக் கிளப்பி அரசியல் அதிகார வர்க்கத்தையும் நீதித்துறையையும் கட்டுக்குள் வைத்திருந்த நேரடி நடவடிக்கைப் பேர்வழிகளின் அத்துமீறல்களுக்கும் இத்தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.
1950ல் கோபால் விஷாரத் தொடர்ந்த நில உரிமை வழக்கு 69 ஆண்டுகளை பலநிலைகளில் கடந்து இன்று ஹிந்துக்களுக்கு சாதகமான முடிவை அளித்திருக்கிறது. ஸ்ரீ ராமஜன்ம பூமி நியாஸ் அமைப்பின் நிறுவனர் மஹந்த பரமஹம்ஸ ராமசந்திர தாஸ் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மறைந்த தலைவர் அசோக் சிங்கல் ஆகியோரின் தியாகங்களுக்கு உரிய மரியாதை கிடைத்திருக்கிறது.
உண்மையில் இத்தீர்ப்பு 2010 செப்டம்பர் 30லேயே அளிக்கப்பட்டிருக்க வேண்டும். நீதிபதிகள் சுதீர் அகர்வால், டி.வி.சர்மா, எஸ்.யு.கான் ஆகியோர் அடங்கிய அலகாபாத் உயர் நீதிமன்ற அமர்வு, வழக்கின் இறுதிக்கட்டத்தை ஓரளவு எட்டியது. ஆனால், அன்றைய ஆளும் அரசின் தூண்டுதல், தவறான வழிகாட்டல் காரணமாகவே அப்போதைய நீதிபதிகள் தடுமாறினர். வழக்கில் தொடர்புடையை 2.77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலத்தை ராம் லல்லா, நிர்மோஹி அகாடா, சன்னி வக்ஃப் வாரியம் ஆகியோர் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளுமாறு பஞ்சாயத்து செய்து தனது தீர்க்கமான கடமையிலிருந்து வழுவியது நீதிமன்றம். அதன் விளைவாக அயோத்தி வழக்கு மேலும் சிக்கலானது. யாருக்கும் திருப்தி அளிக்காத அந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடுகள் செய்யப்பட்டன. பலதரப்பினரும் அந்த வழக்கில் இணைய மனு செய்தனர். இறுதியில் பல தடைகளைக் கடந்து, இஸ்லாமியத் தரப்புக்கு சாதகமான காங்கிரஸ் வழக்கறிஞர் அணியின் தாமத தந்திரங்களைப் புறம் தள்ளி, ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இறுதித் தீர்ப்பை அளித்திருக்கிறது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சரத் அரவிந்த் போப்டே, நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி அசோக் பூஷண், நீதிபதி அப்துல் நஸீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, ஒருமித்த குரலில், நாட்டின் இறையாண்மையை மேலும் வலுப்படுத்தும் விதமாக தீர்ப்பளித்திருக்கிறது. முந்தைய அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு தவறானது என்று அறிவித்த நீதிபதிகள், ஸ்ரீ ராமனுக்கே அந்த இடம் என்பதை தெள்ளத் தெளிவாக உறுதிப்படுத்தி இருக்கின்றனர்.
அடிப்படையில் இந்த வழக்கு நில உரிமை தொடர்பானது. அயோத்தியில் சர்ச்சைக்குரியதாகக் குறிப்பிடப்படும் ராமஜனம்பூமி- பாபர் மசூதி நில விவகாரத்தில் தொடர்புடைய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதே கேள்வி. அங்கு ஏற்கனவே ஹிந்துக்கள் கொண்டிருந்த வழிபாட்டு உரிமையும் வழக்கில் விசாரிக்கப்பட்டது. அந்த இடத்தில் முன்னர் கோயில் இருந்ததற்கான ஆதாரங்களை தொல்லியல் துரையும் அளித்திருந்தது. அந்த இடத்தில் இருந்த சர்ச்சைக்குரிய கட்டடம் 1992 டிசம்பர் 6ல் இடிக்கப்பட்டு தற்காலிகக் கோயில் அமைக்கப்பட்டு வழிபடப்படும் நிலையில் ‘தற்போதைய நிலையே தொடரும்’ (Status Quo) என்ற நீதிமன்றத் தீர்ப்பும் முக்கியமான காரணியாக இருந்தது. அந்தக் கட்டடம் இடிக்கப்பட்டதன் நியாயம் இப்போது உணரப்பட்டிருக்கும்.
ஆயினும் உச்ச நீதிமன்றம் சர்ச்சைக்குரிய கட்டடம் இடிக்கப்பட்டதைக் இந்தத் தீர்ப்பில் கண்டித்திருக்கிறது. சட்டத்தின் பார்வையில் அதுவும் சரியானதே. அதேசமயம், வருங்காலத்தில் அயோத்தி விஷயத்தில் வேறு எந்த வகையிலும் த்டைகள் வந்துவிடக் கூடாது என்பதில் நீதிபதிகல் ஐவருமே மிகவும் கவனமாக தீர்ப்பளித்துள்ளனர்.
இந்த் வழக்கில் தொடர்புடையவர்கள் நால்வர்: 1. ஸ்ரீ ராமஜன்மபூமி நியாஸ் (ராம் லல்லா தரப்பு), 2. கோயில் தங்களுக்கே பரம்பரையாகச் சொந்தம் என்று கூறும் நிர்மோஹி அகாரா, 3. பாபர் மசூதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சன்னி வக்ஃப் வாரியம், 4. அங்கு மசூதியைக் கட்டியதாகக் கூறப்படும் மீர்பாஹி வழிவந்தவர்கள் தரப்பில் ஷியா வக்ஃப் வாரியம்.
இவர்களில், ஷியா தரப்பினரின் மனுவையும், நிர்மோஹி அகாரா தரப்பையும் நிராகரித்த நீதிபதிகள், சன்னி வக்ஃப் வாரியத்தின் வாதத்தையும் ஏற்கவில்லை. ஹிந்துக்களின் பலநூறு ஆண்டுகாலப் போராட்டம், ராமன் அங்கு பிறந்தார் என்ற ஹிந்துக்களின் நம்பிக்கை, அந்த இடத்தில் ஏற்கனவே ஒரு கட்டடம் கீழே உள்ளது என்ற தொல்லியல் ஆய்வறிக்கை, வெறும் கட்டுமானத்தை முஸ்லிம்கள் உரிமை கோர முடியாது என்ற வாதம் ஆகிய பல அம்சங்களின் அடிப்படையில், ஹிந்துக்களுக்கே அந்த நிலம் சொந்தம் என்று அறிவித்திருக்கிறது. இது ஒரு வரலாற்றுத் தருணம்.
1949ல் சர்ச்சைக்குரிய வளாகத்தில் ராம் லல்லா சிலைகள் வைக்கப்பட்டதையும் நீதிபதிகள் தீர்ப்பில் பதிவு செய்துள்ளனர். 1992 டிசம்பர் 6 நிகழ்வையும் கண்டித்துள்ளனர். அதாவது சட்டத்தின் கண்களில் மட்டுமே இவ்வழக்கு பரிசீலிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான், முஸ்லிம்களுக்கு 2.77 ஏக்கர் நிலத்துக்கு உரிமை கோர முடியாது என்று தீர்ப்பளித்த நீதிபதிகள், அவர்கள் சிலகாலம் அங்கு தொழுகை நடத்திய அனுபவ பாத்தியதைக்காக, அவர்களுக்கு அரசே 5 ஏக்கர் நிலத்தை வேறொரு இடத்தில் வழங்குமாறு உத்தரவிட்டிருக்கிறது. இது நீதிபதிகளின் பாரபட்சமின்மையை வெளிப்படுத்துவதற்கான சான்று. சொல்லப்போனால், முஸ்லிம்களுக்கு சரயு நதிக்கரைக்கு மறுபுறம் பிரமாண்டமான மசூதியைக் கட்டித் தருவதாக ஏற்கனவே ஹிந்துக்கள் தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதையேதான் நீதித் துறை உத்தரவின்மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறது உச்ச நீதிமன்றம்.
நீதிபதிகளின் தீர்ப்பு மிகத் தெளிவானது: அந்த இடம் ஹிந்துக்களுக்கே சொந்தம். குறிப்பாக ராமஜன்மபூமி நியாஸ் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். அங்கு ராம கோயில் கட்ட அனுமதி அளிக்கப்படுகிறது. அதேசமயம், மத்திய அரசு அந்த இடத்தின் கட்டுப்பாட்டாளராக இருக்க வேண்டும். அங்கு ராமருக்குக் கோயில் கட்ட 3 மாதங்களுக்குள் அறக்கட்டளையை நிறுவி அவர்கள் வசம் நிலத்தை அரசு ஒப்படைக்க வேண்டும். இந்த அறக்கட்டளையில் நிர்மோஹி அகாராவை அரசு விரும்பினால் சேர்க்கலாம். அதாவது ராமர் கோயில் கட்ட ஹிந்துக்கள் தரப்பிலேயே இடையூறாக இருந்த ஒரு வாதியும் தீர்ப்பால் இப்போது அகற்றப்பட்டுள்ளார்.
அடுத்ததாக, தொல்லியல் துறையின் ஆதாரங்கள் இவ்வழக்கில் மிகவும் முக்கியத்துவம் பெற்றிருந்தன. பாபர் மசூதி (இப்போது இல்லை) காலி இடத்தில் கட்டப்படவில்லை என்பதையும், அந்த இடத்தின் கீழே உள்ள கட்டுமானம் கோயிலாக இருக்கலாம் என்ற தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது. 1857 வரை அங்கு ஹிந்துக்கள் தொடர்ந்து வழிபட்டதன் ஆதாரங்களும் ஏற்கப்பட்டுள்ளன. பூமிக்கு கீழுள்ள கட்டடம் கோயிலா என்ற சர்ச்சைக்குள் நீதிமன்றம் இறங்கவில்லை. பின்னாளில் கோயில் கட்டுமானப் பணிகளின்போது அதுவும் தெளிவாகும்.
அயோத்தியில் ராமர் பிறந்தார் என்கிற ஹிந்துக்களின் நம்பிக்கையை சந்தேகத்துக்கு உட்படுத்த முடியாது. நிலம் தொடர்பான தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையை நிராகரிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். ஆக, பலநூறு ஆண்டுகால ஹிந்துக்களின் தொடர் போராட்டம் நியாயமான முறையில், மிகச் சரியான பலனைப் பெற்றுள்ளது. இனி ராமருக்கு ஆலயம் அமையத் தடையில்லை. அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசும், உ.பி. அரசும் பார்த்துக்கொள்ளும். அதில் மதச்சார்பின்மை வியாதியால் பீடிக்கப்பட்ட பிற அரசியல் கட்சிகள் தலையிட முடியாது.
இவை அனைத்தையும் விட, மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், இந்தத் தீர்ப்புக்காக நாடே ஒருநாள் முற்றிலும் முடக்கப்பட்ட சூழலில் வைக்கப்பட்டிருந்தது தான். உளவுத்தகவல்களின் அடிப்படையில் மத்திய அரசு நாடு முழுவதும் அனைத்து மாநில அரசுகளை எச்சரித்திருந்தது. தலைமை நீதிபதியே திர்ப்புக்கு முதல்நாள் உ.பி. மாநில தலைமைச் செயலாளரையும் காவல் துறைத் தலைவரையும் நேரில் அழைத்து ஆலோசனை நடத்தினார். இது நமது அரசியல் அமைப்பில் இதுவரை காணாத நிலை. ஆயினும் நாட்டுநலனை உத்தேசித்து மத்திய, மாநில அரசுகள் நீதித்துறைக்கு முழுமையான ஒத்துழைப்பை நல்கின.
நாடுமுழுவதும் பாதுகாப்புப் படையினரும் காவல் துறையினரும் குவிக்கப்பட்டனர். ராணுவமும் விழிப்புடன் இருக்குமாறு பணிக்கப்பட்டது. அயோத்தித் தீர்ப்பை கொண்டாடவோ, கண்டிக்கவோ கூடாது என்று அரசுத் தரப்பிலும் பல்வேறு அமைப்புகளின் தரப்பிலும் அரசியல் கட்சிகள் சார்பிலும் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன. இவை அனைத்திற்கும், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மீதான அச்சமே காரணம் என்பதையும், அந்த சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம் என்பதையும் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. இத்தகைய அச்சமே தேசப் பிரிவினைக்கு 1947ல் வித்திட்டது. ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாருக்காக என்பதை சிறு குழந்தையும் அறியும் என்பதால்தான், அமைதியும் நிலைநாட்டப்பட்டிருக்கிறது. அச்சமூட்டும் கும்பல் மனோபாவத்தால் அரசையோ, மக்களையோ, நீதித் துரையை இனியும் கட்டுப்படுத்த முடியாது என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது.
இன்று மத்தியிலும், உத்தரப்பிரதேச மாநிலத்திலும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் பாஜக அரசுகள் இருப்பது, நீதித்துறைக்கும் துணிவைத் தந்திருக்கிறது. மக்களாட்சியில் மக்களே எஜமானர்கள் என்பதை நீதித் துறையும் உனர்ந்திருக்கிறது. நீதி நிலைக்க வேண்டுமானால், தீர்ப்பு மதிக்கப்பட வேண்டுமானால் அதை சாத்தியப்படுத்தும் வல்லமையுள்ள அரசு நிர்வாகமும், மக்களின் ஆதரவும் இருந்தாக வேண்டும்; தீர்ப்பளிக்கும் நீதிபதிகளின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இருந்தாக வேண்டும். அந்த வகையில், அனைத்தும் கூடி வந்த நல்ல தருணத்தில், பொருத்தமான, நியாயமான, சமரசத்துக்கும் வாய்ப்பளிக்கும் நல்ல தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.
தர்மம் வென்றிருக்கிறது. தர்மத்தை நாம் காக்க தர்மம் நம்மைக் காக்கும்.
சத்தியமேவ ஜயதே என்ற நமது அரசின் முத்திரை வாக்கியமும் மெய்ப்பட்டிருக்கிறது.
ராம பக்தர்களது தியாக மயமான போராட்டம் வெற்ரி பெற்றிருக்கிறது. வருங்கால பாரதத்தின் ஒளிமயமான பாதைக்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டிருக்கிறது.
நீதி வெல்க! ராமன் வெல்க!
பாரதம் வெல்க!